‘அசுரன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

images-24355356548042766525..jpg

கொண்ட குடும்பத்திற்காகத் தன்னைத் தந்து அடங்கி ஒடுங்கி வாழும் நெல்லைச் சீமை மனிதனொருவனின் வாழ்வில் ஏற்படும் சில சம்பவங்களால் குடும்பமே குலைந்து போக, உணர்ச்சிப் கொந்தளிப்புகளுக்கிடையே கைப்பிடித்து ஓடி ஓடி குடும்பத்தைக் காத்து நிற்கும் அவனது கதையை ரத்தமும் சதையுமாக ஒரு நேர்த்தியான கதை சொல்லி அருமையாக சொன்னால் – ‘அசுரன்’

கொடுத்த விதத்தில் பொறி பறக்க விடுகிறார் வெற்றிமாறன் என்று பார்த்தால், நடித்த விதத்தில் பட்டையைக் கிளப்புகிறார் தனுஷ். இயக்குநரும் தனுஷும் போட்டி போட்டுக் கொண்டு தந்திருக்கிறார்கள் என்று பார்த்தால், மிக அருகிலேயே அவர்களோடு போட்டியிடும் அளவிற்கு அடுத்த நிலையில் நிற்கிறார்கள் மஞ்சு வாரியரும், பின்னணி இசையில் ஜிவி ப்ரகாஷும்.

தனுஷுக்கு 80 அடி பாய்ச்சல். உணர்வு வடுக்கள் சுமந்து அடங்கி ஒரு காலை எத்தி எத்தி நடக்கும் தந்தையாக, பென்சில் கோடு மீசை இளைஞனாக, தேவைப் படும் போது வேங்கையாகி எழும் மனிதனாக, பஞ்சாயத்து காட்சியில் விழுந்து விழுந்து எழும் மனிதனாக என தனக்கு போட்டியே இல்லை என்பது போல ஒரு தேர்ந்த நடிகனாகத் தன்னைத் தந்து அசத்தலாகச் செய்திருக்கிறார்.

மஞ்சு வாரியர் நல்வரவு. மின்னுகிறார்.

முருகனாக வரும் முதல் மகன், இரண்டாவது பையனாக வரும் கென், பசுபதி, மாரியம்மாவாக வரும் பள்ளிக்கூடம் படிக்கும் உறவுக்காரப் பெண், வக்கீல் ப்ரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல் என அனைவரும் கொடுத்ததை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

முதல் பாதியில் இப்படி அப்படி திரும்ப விடாமல் மிரட்டியவர்கள், இரண்டாம் பாதியில் துவக்கத்தில் கொஞ்சம் நடக்க விட்டு அப்புறம் வேகமெடுத்து ஓட விடுகிறார்கள். பாடல் காட்சியில் மட்டும் பென்சில் கோடு மீசையும் சிகையும் மாறி பாடல் முடிந்ததும் திரும்பவும் பழைய படி மாறுவது கூர்ந்து கவனித்தால் கொஞ்சம் இடிக்கிறது.

படம் முழுக்க ரத்த வாடை என்றாலும் நல்ல சினிமா பட்டியலில் சேரும் கமர்சியல் கலவை. விருதுகள் வரலாம்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘அசுரன்’ – மிரட்டுகிறான். தனுஷின் 80 அடி பாய்ச்சல். பாருங்கள்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *