ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தி.நகர்

நான் ஓர் ஆசிரியன், வாழ்வியல் பயிற்சியாளன். வளர்ச்சியைக் கண்டுபிடித்து நல்லதைக் கண்டுபிடித்து அடுத்தவர்க்கு விருது வழங்கி மகிழ்வித்து மகிழ்பவன். விருது வழங்கப்படும் எத்தனையோ விழாக்களில் விருதாளர்களையும் அங்கம் வகிப்போரையும் ஊக்கப்படுத்தி வாழ்க்கையை நோக்கி நகர வைக்க உரை நிகழ்த்துபவன்.

கலந்து கொள்ளும் இடங்களில் உரையாற்றி முடிந்ததும் அவர்கள் பெயரும் எனது பெயரும் பொறித்த ‘ஷீல்டு’ நினைவுப் பரிசை விருதென்று கொள்ளவே முடியாது. ஒவ்வொரு வகுப்பிலும் கலந்து கொள்வோர் உள்ளத்தில் உணர்வில் உள்ளறிவில் ஏற்படும் மாற்றங்களையே பெரும் விருதாகக் கொண்டாடுபவன் என்பதால் விருதுகள் பற்றி நினைத்ததே இல்லை.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, ஓர் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் பெயரால் ‘பரமன், உங்களது சேவைக்காக உங்களுக்கு டாக்டர் பட்டம்’ என்று சொல்லி அழைப்பு வந்த போது அதை வேண்டாமென்று தவிர்த்ததற்கு அது சரியான பல்கலைக்கழகமா என்ற கேள்வி மட்டும் காரணமில்லை, ‘விருது வாங்குமளவிற்கு நாம் ஏதும் செய்துவிட்டோமா?’ என்ற என் சுய கேள்விக்கு என்னிடம் பலமான ‘ஆம்’ இல்லை என்பதும்தான்.

இந்த நிலையில் அன்பர் கதிரவனின் தொலைப்பேசி அழைப்பு திகைக்க வைத்தது. சில வாரங்கள் கழித்து, தனது மனைவி ஜெயசுதாவோடு வந்து ‘ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தி.நகர்’ சார்பில் அவர் செய்த முறைப்படியான அழைப்பைத் தவிர்க்கவே முடியாமல் போக, கால் அரைக்கால் மனதோடு சம்மதம் சொல்ல வேண்டியதாயிற்று.

அவர்களது கிளப்பின் முக்கிய பிரமுகர் டாக்டர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி இயற்கை எய்திவிட ரோட்டரி விருது நிகழ்வு நடக்கவில்லை. அந்த வருத்த நிகழ்வின் ஓரத்திலும், ‘அப்பாடா… விழா நடக்கல, விருது கிடையாது!’ என்று மகிழ்ச்சியே கொண்டேன்.

ஒரு மாதம் கழித்து தேதி குறித்து ‘விருது வழங்கும் விழா’ இருக்கிறது என்று திரும்ப நின்றார் கதிரவன்.

விழா நாள் மாலை நெருங்க நெருங்க, ‘இத சாதாரணமா உட்டுட்டோமே, யாருக்குமே பெருசா சொல்லலையே! வீட்ல இருக்கறவங்களே நிறைய வேலைகள்ல ஓடிட்டு இருக்காங்களே!’ என்ற உணர்வு வந்தது.

சமுதாயத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் மனிதர்களைக் கண்டறிந்து ஆய்வு செய்து விருது வழங்கி ஊக்குவிக்கும் பணியை தொடர்ந்து செய்யும் ‘ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தி.நகர்’ க்ளப்பின் அந்த சந்திப்பு தியாகராய நகர் ரெசிடென்சி டவரில் ஒரு பேங்கட் ஹாலில் நடந்தது, குறைவான எண்ணிக்கையில் ஆனால் ஆழமான பெரிய மனிதர்களால் நடத்தப்பட்ட அந்நிகழ்வில், ‘மாற்றங்களை ஏற்படுத்தி வளர்ச்சி தரும் மலர்ச்சி நாயகன்’ என்ற விருது அளிக்கப்பட்டது.

விருது பெற்றதைத் தொடர்ந்து நல்ல கேள்விகளை வைத்தனர் நம் முன்னே. மாற்றி மாற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சொன்ன பதில்கள் ஒரு மலர்ச்சி உரையாகவே மாறியிருந்தது. உடன் வந்திருந்த மலரவர்கள் ராஜேந்திரனுக்கும் வி கார்த்திகேயனுக்கும், கிளம்பிலிருந்த மலரவர் ஜெயசுதாவிற்கும் பெரு மகிழ்ச்சி.

இன்று காலை அந்த க்ளப்பின் பிரமுகர் ஒருவர் என்னை அழைத்து, ‘சார் நான் ஒரு பெரிய கிரிட்டிக். சில இடத்தில் வெளிய நேரடியா க்ரிட்டிஸைஸ் பண்ணிடுவேன், பல இடங்கள்ல வெளிய சொல்ல மாட்டேன். ஆனால் க்ரிட்டிக்ஸ்தான். யாரையும் சீக்கிரம் ஏத்துக்க மாட்டேன். நேத்து ரொம்ப அடிச்சிட்டீங்க. வீட்டுக்கு போனதும் என் மனைவிகிட்ட முதல்ல சொன்னது, ‘நீ வந்துருக்கனும் இன்னிக்கு. யு மிஸ்டு சம்திங் வெரி பிக் இன் லைஃப்’ என்பதுதான். இனிமே ‘டிப்ரஷன்’ன்னு எங்கே காதில விழுந்தாலும் நீங்க பேசனது முன்னால வந்து நிக்கும். ‘ரெசஷன்’ என்னை ஒண்ணுமே பண்ணாது. பிரமாதம் சார். ஒரு முறை வீட்டுக்கு வாங்க!’ என்றார். நிகழ்ச்சி முடிந்தும் இரவு தூங்கியெழுந்தும் தாக்கம் கொண்டுள்ள மனமாற்றம் கண்ட அவரது அடுத்த நாளைய அழைப்பே எனக்கான விருது.

இறைவன் அருளால், என் வாழ்வு முழுக்க மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் எனும் இவ்வகை விருதுகளால் நிறையும்.

சிங்கப்பூர், மலேசியா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், சென்னை, திருவண்ணாமலை, கோவை, பொள்ளாச்சி, புதுச்சேரி, சேலம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை என பல இடங்களில் இன்று உரைகள் நிகழ்த்தினாலும், என் முதல் உரை நடந்த இடம் பெங்களூரு நகரின் ‘ரோட்டரி கிளப் ஆஃப் பேங்களூர் ஹைலேண்ட் க்ரவுண்ட்ஸ்’ல்தான். வெள்ளை சட்டை கருப்பு கோட்டுடன் முதன் முதலில் பேசப் போன என்னுடன் துணைக்கு வந்து, நான் பேசியதில் கரைந்து உறைந்து போன என் முதல் மாணவனும் நண்பனுமான முகுந்தன் நரசிம்மனையும், என் ஆங்கிலப் பேச்சைப் பதிவு செய்ய சோனி ஹேண்டி காம் கொண்டு வந்திருந்தும் நான் பேசிய விதத்தில் அசந்து லயித்து பதிவு செய்ய மறந்து போன முகம்மது இர்ஷாத்தையும் எப்படி மறக்க முடியாதோ, அப்படி முதல் மேடை தந்த ரோட்டரியையும்.

சென்னைக்கு குடிபெயர்ந்து பல மாற்றங்கள் கண்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் ஒரு ரோட்டரி மேடையில். பல ரோட்டரி் சந்திப்புகளில் பேசியிருக்கிறேன் என்றாலும், இதை மறக்கவே முடியாது.
மலர்ச்சி அரங்கில் விருதுகளை அடுத்தவர்களுக்குக் கொடுக்கும் எனக்கு, முதல் முறை விருது கொடுத்தது ‘ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தி.நகர்’.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
11.10.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *