போட்றா டிக்கெட்ட…

இவ்வளவு ஆண்டுகள் எல்லாம் பார்த்த பிறகும் செய்த பிறகும், சாலையோரத்தில் பஸ் நிறுத்தத்தின் அருகில் பதற்றத்தோடு நிற்கும் ஆட்களோடு வரிசையில் நின்று நகர்ந்து நகர்ந்து இண்டர்வ்யூக்குப் போனால் எப்படியிருக்கும்?

…..

அமெரிக்க விசாவிற்காக, சென்னை அண்ணா மேம்பாலத்தின் அருகில் கிட்டத்தட்ட சஃபையர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தையும் தாண்டிய நீண்ட வரிசையில் வெய்யில் பனி மழை பாராமல் நிற்கும் மக்களைப் பற்றி் நான் மட்டுமல்ல உலகமே பார்த்திருக்கிறது. இருபத்தியைந்தாண்டுகளுக்கு முன்பு, காலை விசா இண்டர்வ்யூவிற்கு இரவே வந்து வரிசையில் இடம் பிடித்து காத்திருந்த மக்களை ஆனந்த் தியேட்டரில் இரவுக் காட்சி முடிந்து பைக்கில் போகும் போது பார்த்திருக்கிறேன்.

‘அமெரிக்கா போவனும்னா எவ்ளோ பெரிய ஆஃபீசர், முக்கியஸ்தரா இருந்தாக் கூட இப்படி நின்னுதான் ஆகனும்…ம்ம்ம்’ என்ற நினைப்புடனேயே கடந்து போயிருக்கிறேன். இன்று காலை அதே சஃபையர் தியேட்டர் எதிர்ப்புற பஸ் நிறுத்தத்தைத் தாண்டி நிற்கும் பெரு வரிசையில் நானும் நின்றேன் என் மனைவியோடும் நண்பரோடும்.

08.30 மணி விசா இண்டர்வ்யூவிற்கு 07.30க்கே நாங்கள் வந்திறங்கிய போதும் ஏகப்பட்ட பேர் வரிசையில் நின்றிருந்தனர். அமெரிக்கன் கவுன்ஸ்லேட் வளாகச் சுவரையொட்டி நின்றது பெருங்கூட்டம். ‘இதுதானா!’ என்று மனைவியிடமும் ரகுவிடமும் கேட்டு, ‘இவ்ளோ பேரு பெரிய வரிசையில் நிக்கறாங்க. யாரு கைலயும் செல்ஃபோனே இல்ல. செல்ஃபோன் இல்லாம இவ்ளோ நேரம் நிக்கறாங்கன்னா இதான் அது!’ என்று நானே பதில் சொல்லி விட்டு வரிசையை நோக்கி நகர்ந்தேன்.

‘இப்படி கேள்வி கேட்பான். இதல்லாம் நல்லா தெரிஞ்சி வச்சிக்கோ!’ ‘பரமன், உங்க யுஎஸ் ட்ரிப் அது அப்போ, பல வருஷம் ஆச்சு. அந்த பாஸ்போர்ட்டே எக்ஸ்பையர் ஆயிருச்சி. அதெல்லாம் பாக்கக் கூட மாட்டாங்க. இண்டர்வ்யூல சரியா பண்ணுங்க’ ‘எந்த ஆஃபீசர் வர்றாங்கங்கறத வச்சிதான் இருக்கு எல்லாமே!’ ‘ஏன் ரிஜக்ட் பண்றான்னே தெரியாது! அவனுங்க அப்படித்தான்!’ என்று நலம் விரும்பி நண்பர்களாலும் அன்பர்களாலும் அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.

மலர்ச்சி மாணவர் தனுஜா கார்த்திகேயனின் அப்பா ஜீவரத்னம் சார்தான் (யுஎஸ் யுகே விசா எக்ஸ்பர்ட், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என்று அறிந்தேன்) எங்கள் எல்லா வேலைகளையும் அழகாக அட்டகாசமாக செய்து தந்தார். என்ன, ஏது, ஏன், எப்படி, என்ன கொண்டு போகனும், என்ன கொண்டே போகக்கூடாது என்று ஒவ்வொரு சதுரடியாக விளக்கி தயார் செய்திருந்தார் எங்களை.

பாஸ்போர்ட் நகல், ஆதார் நகல், பேங்க் ஸ்டேட்மெண்ட் என்று கிளிப் போட்ட மூன்று கொயர் அளவிற்கு பேப்பர் கற்றையோடு நிற்பவர்களையும், ஏஃபோர் சைஸ் பேப்பர் முழுக்க ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டு தேர்வுக்குப் படிப்பதை விட அதிக சிரத்தையோடும் அதைவிட அதிக பதற்றத்தோடும் படிப்பவர்களையும், செல்லிடப்பேசியோடு வரிசையில் நகர்பவர்களையும் பார்க்க பாவமாகவே இருந்தது. தகதகக்கும் புடவையில் கெரட்டின் விறைப்பு சிகையோடு மஞ்சள்மஞ்சேளென்று இருந்த புதுத்தாலியோடு எங்களுக்கு சில அடி முன்னே நின்ற இளம்பெண்ணின் பதற்றம் அவர் முகம் பார்க்காமலே பின்புறமிருந்தே தெரிந்தது.

‘செல்ஃபோன் ஆஃப் பண்ணி வச்சாலும் அலோவ் பண்ணவே மாட்டான். உள்ள போகவே முடியாது. வரிசைலேருந்து வெளிய ஓடி வந்து யாருகிட்ட குடுப்பீங்க. கார் ரிமோட் கூட கூடாது. மெட்டல், கீ செயின், வாட்ச் கூட நோதான்! வெறும் இந்த டாக்குமெண்ட்ஸ் மட்டும் கொண்டு போங்க. இது கையில வச்சிக்கோங்க!’ என்று விளக்க இவர்களுக்கு ஒரு ஜீவரத்னம் சார் இல்லையே என்று மனம் வருந்தவே செய்தது.

”08.15′ இண்டர்வ்யூவெல்லாம் இந்த வரிசையில் வாங்க!’ என்று அதே சாலையோர நடை மேடையில் தடுப்பைத் தாண்டி அறிவித்த போது புரிந்தது, அங்கிருந்துதான் எல்லாம் தொடங்குகிறதென்று. ‘08.30 இண்டர்வ்யூ’ என்று பலகையைக் காட்டி அறிவிப்பு வரும் வரை காத்திருந்தோம். அறிவிப்பு வந்ததும் அதற்கான வரிசையில் வந்து நின்றோம், அதுவும் அதே சாலையோரம்தான் வானத்தின் அடியில்தான். அண்ணாசாலையும் மேம்பாலமும் எங்கள் வலப்புறத்தில். ‘எப்பா… மழை இல்லை. இறைவனுக்கு நன்றி!’ என்றது உள்ளம்.

‘ஆனுவல் இன்கம்! பர்ப்பஸ் ஆஃப் விசிட்!’ என்று தேர்வுக்குத் தயாராகும் பையனைப் போலப் பதற்றமாய் வாய்விட்டு சொல்லிக்கொண்டு என் முன்னே இருந்தவரைப் பார்த்து நானும், ‘ரோஸ்பெர்க், நியூயார்க், வாஷிங்க்டன்’ என்று சொல்லிப் பார்த்தேன். என் தாள்களைப் பிரித்து ஒரு முறை பார்த்தேன். தொடர்ந்து பதற்றமாக இருக்க முடியவில்லை நம்மால். சில விநாடிகளில் ‘தந்தன்னானா… தந்தன்னானா தானா!’ என்று கொஞ்சம் வாய் வீட்டுப் பாடிய என்னை இரண்டு பேர் திரும்பிப் பார்த்து முறைக்கவே செய்தனர். ‘உன் மனசில பாட்டுதான் இருக்குது!’ என்று பாட்டு மாறினாலும், விசா நேர்காணல் பற்றி ஒரு எதிர்பார்ப்பு எகிறவே செய்தது.

என் மனைவியின் பக்கமும் ரகுவின் பக்கமும் திரும்பி வானத்தைக் காட்டி சொன்னேன், ‘இவ்ளோ பண்ணவன், இதுவரைக்கும் கொண்டு வந்தவன், இதையும் பண்ணுவான்!. ‘எதுவானாலும் ஏற்போம்!’ என்ற மனநிலையில் காத்திருந்தோம்.

‘பாஸ்போர்ட் காட்டுங்க!’ என்று உள்ளே அனுமதித்து அந்தப் பக்கம் எதிர்ப்புறத்திலிருந்து வரும் வரிசையில் நிற்க வைத்தனர். திரும்பவும் அதே அண்ணாசாலையின் ஓரமாகத்தான், ஆனால் அண்ணாசாலை இப்போது எங்கள் இடப்புறம். ‘இன்னும் கடைசியில வெளியதான் நிக்கறோமா! ஹாஹ்ஹா!’ என்று சிரித்தாள் பிரியா.

உள்ளே அனுமதித்தார்கள், ‘மூணு பேர் கம்பைண்டு இண்டர்வ்யூ போட்ருக்கே, இன்னும் ரெண்டு பேரு யாரு!’ என்று கேட்டு எல்லாவற்றையும் வாங்கி இயந்திரத்தில் உள்ளே அனுப்பி அந்தப்புறம் எடுத்தனர். எங்களையும் சோதனையிட்டனர். இதுவரையில் தமிழும் இந்திய ஆங்கிலமும் இருக்கிறது. முந்தைய நாள் வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அமெரிக்கன் பயோமெட்ரிக் சென்டரில் விரல் ரேகை பதிவுகள் நம் பாஸ்போர்ட் நகல் பதிவேற்றம் செய்த போது அவர்கள் தந்திருந்த எண்ணை சரி பார்த்து உள்ளே வரிசையில் அனுப்புகிறார்கள். (ஆமாம், இரண்டு முறை / வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது )

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என்று நாம் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிக்கேற்ப வரிசையில் அனுப்புகிறார்கள். நாங்கள் ஆங்கில வரிசையில்.

அங்கே அடுத்தடுத்து இருக்கும் கண்ணாடிகளுக்கு அந்தப்பக்கம் அமெரிக்கர்கள், மைக்கின் மூலம் இந்தப் பக்கம் இருப்பவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். ‘இதுதான் இண்டர்வ்யூ!’ என்று புரிந்தது. ‘இங்கே, இதுக்கப்புறம் பாஸ்போர்ட்டை கையில் கொடுத்து அனுப்பினால், விசா ரிஜக்டேட். பாஸ்போர்ட்டை அவர்களே வைத்துக் கொண்டால், விசா அப்ரூவ்டு!’ என்று பேசிக் கொண்டோம்.

‘சார்… கோ டு கவுண்டர் 16A’ என்றனர்.
திரும்பவும் பாஸ்போர்ட் பதிவேற்றம், கைவிரல்கள் பதிவு செய்து அடுத்த அறைக்கு அனுப்பினார் செம்பட்டை தலை பெண் அதிகாரி.

‘சார், ப்ளீஸ் கோ டு கவுண்டர் 26. ஆல் த்ரீ ஆஃப் யூ!’ என்றார் நேற்று நுங்கம்பாக்கம் ‘விஏசி’யில் நம்மைப் படமெடுத்து எண் தந்த அதே சீருடையணிந்த அலுவலர். ‘இவரு, இங்கயுமா!’ என்றவாறே அடுத்த பக்கம் இருந்த 26 எண்ணைத் தேடி போனால், கிராப் வெட்டிய பூப்போட்ட சட்டையணிந்த நாற்பந்தைந்து வயது இருக்கக் கூடிய அமெரிக்கை(!) இருந்தார்.

‘ஹாய்… குட்மார்னிங்!’ என்று நான் சொன்னதைக் கவனித்ததாகவே தெரியவில்லை.

‘பாஸ்போட் ப்ளீஸ்!’

‘ப்ளீஸ் கீப் யுவர் ஓல்ட் பாஸ்போர்ட் வித் யு!’

‘ஓக்கே!’

‘வாட் ஈஸ் த பழ்ப்பஸ் ஆஃப் யுவர் விசிட் டு யுஎஸ்?’ என்று எனை நோக்கிய அவரின் கேள்வியோடு தொடங்கியது எங்கள் விசா இண்டர்வ்யூ. என்னிடம் சில கேள்விகள், என் மனைவியை நோக்கி ஒரேயொரு கேள்வி, மலர்ச்சி மாணவரும் நண்பருமான ரகுவை நோக்கி இரு கேள்விகள் முடித்து என்னிடமே திரும்ப வந்து கேள்விகள் என நடத்திவிட்டு கணிப்பொறியில் எதையோ செய்து கொண்டிருந்தார் அவர். ‘நேராக பார்க்கலைன்னு நினைக்காதீங்க. உங்களைதான் கேள்வி கேப்பாங்க, ஆனா, மத்த ரெண்டு பேரோட முக உணர்ச்சி ரியாக்‌ஷன அங்க கேமராவுல பாப்பாங்க!’ என்று ஜீவரத்னம் சார் சொன்னது நினைவில் வந்தது.

நீண்ட நேரமாக கணிப்பொறியில் எதையோ செய்து கொண்டிருந்தார் அந்த அமெரிக்கை. அவர் உருவம், அவரது அருகில் இருக்கும் கூடையில் இருக்கும் பத்து பாஸ்போர்ட்டுகள், அவருக்கு அடுத்து உள்ளிருக்கும் அலுவலகம், அங்கே நின்று பேசிக்கொண்டிருக்கும் ஸ்டைலான அமெரிக்க கிழவி என எல்லாவற்றையும் நோக்கி ஓடியது கண். ‘இவ்ளோ நேரம் இவ்ளோ பேர இண்டர்வ்யூ பண்ணி வெறும் பத்து பாஸ்போர்ட்தான் கூடையில இருக்கு. இவ்ளோதான் விசா அப்ரூவ்ட். அப்ப அவ்ளோ பேர் ரிஜக்டேடா! ஊஊஊ! நமக்கு முன்னாடி இண்டர்வ்யூ பண்ணவர் கூட கையில பாஸ்போர்ட்ட எடுத்திட்டுதான் போனார். ரிஜெக்டேட்!’ என்று உள்ளம் விரைவாக ஓடியது. ‘தம்பீ, ஃபோக்கஸ். அடுத்த கேள்வி கேப்பாங்க. தயாரா இரு. அவங்களையே பார், கவனி!’ என்று அறிவு கட்டளையிட்டு நம்மை அமெரிக்கையின் முகத்திலேயே மறுபடியும் கொண்டு வந்து நிறுத்தியது.

‘என்ன கேள்வி…!’ என்று காத்திருந்த போது அமெரிக்க அலுவலர் என் பக்கம் திரும்பினார்.

‘யுவர் விசாஸ் ஹேவ் பீன் அப்ரூவ்டு. வில் கீப் த பாஸ்போர்ட்ஸ் வித் அஸ்!’ என்று சொல்லி பச்சை வண்ணத்திலிருந்த காகிதம் ஒன்றைத் தந்து படித்துப் பார்க்கும் படி சொன்னார். விசா இண்டர்வ்யூ முடிந்தது என்று உணர்வதற்கு முன்பே அது முடிந்து விசா ஒப்புதலும் தந்து முடித்து விட்டனர்.

……

ஒரு வேளை என் நிறுவனம் பற்றி ஏதும் கேட்டால், காட்டுவதற்கு இருக்கட்டுமேயென்று மலர்ச்சி நிறுவன ஜிஎஸ்டி சர்டிஃபிகேட்டை நான் கேட்க, நேற்றிரவு அந்த நேரத்தில் நகலெடுத்துக் கொண்டு அடை மழையில் பைக்கில் வந்த என் சக ஊழியர் ஹரி, என் அடுக்கக கட்டிட லிஃப்டில் உள்ளே இரண்டாம் தளத்திற்கும் முதல் தளத்திற்கும் இடையே மாட்டிக் கொண்டார். ஹரியின் அழைப்பைப் பார்த்து எடுத்து,’ஹரி வந்துட்டியா, வெளிய இருக்கியா?’ என்ற என்னிடம், ‘லிஃ்ப்ட்ல மாட்டிகிட்டன் சார்!’ என்ற போது சாப்பாட்டின் நடுவில் எழுந்து இறங்கி ஓடினேன்.

ஹரியை லிஃப்டிலிருந்து விடுவித்து வெளியே வந்ததும் அவனிடம் சொன்னது, ‘ஹரி… இந்த டாக்குமெண்ட் தேவையே படாது. ஆனால், கேட்டால் காட்டனுமேன்னு கொண்டு போறேன். நீ இப்படி மழையில வந்து இப்படி லிஃப்ட்ல மாட்டி… இதுக்காகவே நாளைக்கு விசா கிடைக்கனும்!’

…..

‘யு எஸ்ஸில் இருக்கும் சுமதிக்கு வாய்ஸ் மெசேஜ் செய்ய வேண்டும்’ ‘ஜீவரத்னம் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டே அமெரிக்கன் கவுன்ஸ்லேட் கட்டிடத்திலிருந்து வெளியேறி படியில் இறங்கினேன்.

வாயெல்லாம் பல்லென்றால் வாயென்றால் பல்! திரும்பி பிரியாவையும் ரகுவையும் பார்த்தேன். அவர்களுக்கும், வாயெல்லாம் பல்லாக!

ஹரியின் நினைவு வந்தது.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
31.10.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *