சிங்கத்தின் கோட்டையில்..

கடல் மட்டத்திலிருந்து 4320 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வந்து ஏறுவதற்குக் காரணம், முக்கிய நிகழ்வுகள் திருப்புமுனைகள் நடந்த வரலாற்றுச் சின்னமிது என்பதால் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மலையேற்றத்தைப் போலல்லாமல் எவ்வளவு ஏறினாலும் உடல் நடுங்கினாலும் மூச்சிறைத்தாலும் வியர்க்கவே வியர்க்காத வெப்ப நிலை,
இந்த உயர்ந்த மலையைச்
சுற்றி எல்லா பக்கங்களிலும் மலைகளும் பள்ளத்தாக்குகளுமாகத் தெரியும் அந்தப் பெருவெளி, உச்சியிலிருந்து காண்கையில் இயற்கையின் பிரமாண்டத்தில் சிறு துளியாய் ஆனால் உயிர்ப்பாய் உணரும் அந்த உன்னத அனுபவம் ஆகியவற்றிற்காகவே. தவிர மலையேற்றம் பிடித்தவர்களுக்கு வேறு எதுவும் அந்த திளைப்பை ஆழத்தைத் தருவதில்லை.

சோழர்களின் வரலாற்றில் தக்கோலம் போர் எப்படி மிக மிக முக்கியமானதோ, மராட்டியர்களின் வரலாற்றில் அப்படியொரு முக்கியமான இடமாகத் திகழ்கிறது மலையுச்சியிலிருக்கும் இந்த ‘சிங்காத் கில்லா’ என்றழைக்கப்படும் ‘சிங்காத் கோட்டை’

பூனாவிலிருந்து 33 கிமீ தூரத்தில் இருக்கும் உயர்ந்த மலையின் உச்சியில் இருக்கும் கோட்டையில்தான் சத்ரபதி சிவாஜி சிறைவைக்கப் பட்டிருந்தாராம் ஒரு முறை (நாடோடிகள் பாடுகிறார்கள்). விடுதலையாகி வெகுகாலம் ஆன பின்னும் அது ஒரு வடுவாகவே இருந்திருக்கிறது சத்ரபதியின் மனதில். ஔரங்கஜீப்பின் ஆளுகையில் எல்லாப் புறங்களிலும் பாதுகாப்பு வீரர்கள் இருந்த இக்கோட்டையை பிடிக்க வேண்டும் என்று ஜீஜாபாயோடு அமர்ந்திருந்த சத்ரபதி சொன்ன போது, ‘புள்ள கல்யாணம் இருக்கு. ஆனா, இந்தக் கோட்டையைக் கைப்பற்றிட்டு அப்புறம் கல்யாணத்தை முடிக்கிறேன்!’ என்று எழுந்தாராம் சிவாஜியின் முக்கிய தளபதியான தானாஜி (சிவாஜியின் கட்டப்பா!). ஏறவே முடியாத பெரிய செங்குத்து சறுக்குப் பாறையாலான மலையை அரணாகக் கொண்ட பின் பக்கத்தின் அடியில் நின்று உயிருள்ள உடும்பை கயிற்றில் கட்டி ஓங்கி மேலெறிந்து நடுங்கும் குளிரில் இரவெல்லாம் மேலேறி ஓசையின்றி வந்திருக்கிறார் தானாஜி (உடும்பு, பிடித்தால் பலமாக பிடித்துக் கொள்ளும். ‘பிடிச்சா… உடும்பு பிடி!’ என்ற சொலவடையை நினைவில் கொள்க). மேலே ஏறி வந்து ஒவ்வொரு காவலாளியாகத் தாக்கி கோட்டையைப் பிடித்திருக்கிறார்.

மராட்டியர்களின் சாம்ராஜ்யக் கனவு மீண்டு தொடங்கியது இந்தப் புள்ளியில்தான் என்பதால் இந்த வெற்றியைக் கொண்டாடிய சிவாஜி இதை தானாஜியை குறிக்கும் விதமாக ‘சிங்கத்தின் கோட்டை’ எனப் பொருள்பட ‘சிங்காத் கில்லா’ என பெயரிட்டிருக்கிறார். (கில்லா என்றால் கோட்டை. ‘காலா’ படத்தில் ரஜினி நானா படேகரிடம் சொல்லும் ‘இது காலா கில்லா. காலா கோட்டை, ஒரு பிடி மண்ணக் கூட…’ வரிகளை நினைவில் கொள்க)

பின்னாளில் தானாஜி இறந்த போது அவரது உடல் இங்கேயே மலையுச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. லோகமான்ய பாலகங்காதர திலகரும் மகாத்மா காந்தியும் இங்கு சந்திருக்கிறார்கள். நேதாஜி, தாகூர் போன்றோர் இங்கு வந்து சுதந்திர வேட்கையை மேலும் வளர்த்துக் கொண்டனர் என்று பேசப்படுகிறது.

பூனா நகரத்திலிருந்து 33 கிமீ தூரத்தில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியிலிருக்கிறது இந்த மலை. ‘சன் ரைஸ் பாயிண்ட்’ எனப்படும் பகுதியில் சூரிய உதயத்தைக் காண்பது அட்டகாசமாக இருக்குமென்பதால் அதிகாலை ஐந்து மணி வாக்கில் புறப்பட்டு மலையேறி வந்து நடுங்குங்குளிரில் நிற்பர் சிலர். அடிவாரத்திலிருந்து ஏறும் போது ஒன்றரை மணி நேரத்தில் உச்சியைத் தொட்டால் உடற்தகுதி நன்று என்பர். சென்ற முறை ஒரு மணி நேரத்தில் ஏறினேன். இம்முறை அதிகாலை இருட்டில் தவறுதலாக காரிலேயே பாதி கடந்து விட்டு அதன் பின்பே உணர்ந் தோம். காரை நிறுத்தி விட்டு நடுங்குங் குளிரில் மூச்சிறைக்க ஏறுவதும், உச்ச பச்சமாக சூரிய உதயத்தைக் காண்பதும் அருமையான அனுபவங்கள்.

இன்றும் உறுதியாக நிற்கும் கோட்டையின் வாயில்களும், ஏற ஏற நீண்டு கொண்டே போகும் படிகளும், கோட்டையின் உள்ளே உள்ள குளங்களும், சுனை சேகரிப்பு சுவையான குடிநீரும் வரலாற்று மனிதர்களை நினைவில் கொண்டு வந்து நிறுத்திப் போகின்றன. முக்கியமாய் கோட்டையின் மதில்களில் உள்ளிருந்து கீழிருக்கும் எதிரியைப் பார்த்து அம்பெய்திக் கொல்ல ஏற்படுத்தப்பட்ட துளைகள் ‘பாகுபலி’ படத்தைத் தாண்டி மொகலாயர்களை, பிரித்தானியர்களை, மராட்டிய காவல் வீரர்களை கற்பனை செய்து பார்க்கச் செய்கிறது.

மராட்டியர்கள் தானாஜியின் சமாதியை வணங்குகிறார்கள். மற்றவர்கள் படமெடுத்துக் கொள்கிறார்கள்.

கோட்டையைத் தாண்டி குளங்களை கடந்து பின்பக்க மதில்சுவரின் அருகில் நின்று மலைகள் பள்ளத்தாக்குகள் என்று பர்ரரந்ந்ந்ந்து விரிந்திருக்கும் அந்த வெளியில் பார்க்கையில், ‘ஹலோ ஜீ, சுவர் மேல ஏறாதீங்க… அலோ… அலோ… உழுந்தா எலும்பு கூடக் கெடைக்காது அவ்ளோ ஆழம். காத்து அடிச்சித் தள்ளிடும். ஏறாதீங்க பாஸ்!’ என்று சொன்ன போதும், கேட்காமல் ‘தானாஜி இது வழியாகத்தானே ஏறியிருப்பார்!’ என்ற நினைப்போடு சுவரின் மீது ஏறி நிற்கையில் ஏற்படும் தலை கிறுகிறுப்பையும் தாண்டி ‘உடலில் பட்டு நம்மைத் தள்ளிவிட்டு விடுமோ!’ என நினைக்க வைக்கும் அளவிற்கு அறையும் காற்றையும் உணரும் அந்த நிலையில் ஏற்படும் உணர்வு அலாதியானது. கண்களும் மனதும் பனோரமிக் கேமரா வியூவில் உலகைப் பார்த்து ‘நாம வெறும் துகள்!’ என்று பேச்சின்று பொத்தென்று உள்ளே விழும் சில நொடி அனுபவம் பேராழமானது.

இந்த ஓர் அனுபவத்திற்காகவே எவ்வளவு உயரங்களையும் எத்தனை மலைகளிலும் ஏறலாம்.

அவ்வளவு உயரத்தில் இருக்கும் தொடர் அமைதியும், அங்கே கிடைக்கும் மிகச் சுவையான ஜோவர் ரோட்டி – பயித்தம் பருப்பு – மண் குடுவை உறை தயிரும் உணவுகளும், உங்களுக்குப் பாக்கியமிருந்தால் நல்ல கண்கள் இருந்தால் தென்படும் அரிதான பறவைகளும்… கூடுதல் மகிழ் அனுபவங்கள்.

( பலவிதப் பறவைகளைக் கண்டேன். உடன் வந்தோர்க்குக் காட்டினேன். படமெடுக்க முடியவில்லை. நான் பார்த்த பறவைகளின் படங்களை இணையத்தில் தேடி இணைத்துள்ளேன். )

கோட்டையிலிருந்து இறங்கி உணவு முடித்து காரிலேறி காட்டு மலைப்பாதையில் இறங்குகையில், சாலையின் உள்ளே இடப்புறத்தில் எதுவோ வித்தியாசமாய் தெரிகிறது. எழுந்து நிற்கும் அமைப்பைக் கொண்ட அதை ‘ஏதோ காய்ந்த குச்சி போல!’ என்று எண்ணும் போதே, ‘இல்லையே அடியில அதோட தொடர்ச்சி தரையில கிடக்கே, வளைஞ்சி வளைஞ்சி! என்னாது இது!’ என்று மறு எண்ணம் வருவதற்கும் கார் அதை நெருங்கிக் கடப்பதற்கும் சரியாக இருந்தது.

‘ஏய்… காரு போவட்டும்ன்னு தலையைத் தூக்கி வெயிட் பண்ணிப் பாத்துகிட்டு இருக்கிறது….. பாம்பு!’ என்று கத்துவதற்குள் கார் கடந்து விட்டது. காரை நிறுத்திப் பார்க்கும் போது சரசரவென்று தரையில் ஊர்ந்து அடுத்தப்பக்கத்தை நோக்கி விரைந்து மறைந்து கொண்டிருந்தது பாம்பு.

படமெடுக்கும் நாகத்தைப் பார்த்திருக்கிறேன். தரையில் ஊரும் பல பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். நாகம் போன்று படமெடுக்காத ஆனால் மூன்றடி உடலை தரையில் கிடத்தி இரண்டடி அளவிற்கான மீதி உடலை காற்றில் உயர்த்தி தலையை தூக்கி நின்ற பாம்பை இதுவரைக் கண்டதே இல்லை.

‘கட்டுவிரியனா, காளியாங்குட்டியா, வேற எதுவும் பாம்பா!’ என்றே ஓடிக்கொண்டிருந்தது உள்ளம்.

என்ன ஒரு காட்சி. நிற்பதையும் புஜங்காசனத்தையும் கலந்து செய்தது போல் நின்றது அந்தப் பாம்பு. சில அடிகள் உடலை உயர்த்தி தலையைத் தூக்கி ‘சீக்கிரம் போங்க, நான் குறுக்கப் பயணித்து அந்தப் பக்கம் போகனும்!’ என்பது மாதிரி நின்ற அந்தப் பாம்பின் காட்சி கண்ணிலேயே நிற்கிறது.

பரந்து விரிந்து ஓங்கி உயர்ந்து காலங்களைக் கடந்து கிடக்கும் அந்தப் பெரிய மலையில் பள்ளத்தாக்கில் அந்த சிறிய தேன்சிட்டும், புல்புல் பறவையும், இந்தப் பாம்பும் சிறு துகள்கள். சிறு சிறு துகள்களை சிறு துகளாகிய நானும் சில நொடிகள் கடக்கிறேன். அந்தப் பெரிய பரந்து விரிந்து கிடக்கும் மலையில் மிகச் சிறியதான அந்த பாம்பு ஊர்ந்து ஊர்ந்து போகிறது.

பரந்து விரிந்து கிடக்கும் அந்தப் பெருவெளியில் எங்கள் காரும் ஊர்ந்து போகிறது.

– பரமன் பச்சைமுத்து
பூனா,
25.11.2019

#SinghadFort
#Puna

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *