‘சித்திரம் பேசுகிறேன்…’ – பரமன் பச்சைமுத்து : மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ் புதிய நூல்

wp-1579605832923815546854747414146.jpg

முன்னுரை

‘ஒரு ஊர்ல ஒரு ராஜா…’ இந்தச் சொற்றொடரைக் கேட்காமல் வளர்ந்த குழந்தைகளே இருக்காது போன தலைமுறை வரையில்.

தாத்தாக்களும் பாட்டிகளும் மாமாக்களும் அத்தைகளும் என கதைசொல்லிகளாலேயே கதைகள் சொல்லப்பட்டே கதைகளாலேயே வளர்க்கப்பட்டது நம் சமூகம். கதைகளாலே மனவளப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது நம் சமூகம்.

‘ஒரு பாட்டி வடை சுட்டாங்க, ஒரு காக்கா பாத்துச்சாம்’, ‘ஒரு காக்காவுக்கு ஒரே தாகமாம். ஒரு குடுவையில அடியில தண்ணி இருந்துச்சாம்’ என்ற வகைப் பாடப்புத்தகக் கதைகளும், பஞ்சதந்திரக் கதைகளும், பள்ளியின் நீதி போதனை வகுப்புமே பிள்ளைகளை கவர்ந்திழுத்து நெறி சொல்லின.  

கதைகள் எப்போதுமே மனிதர்களை ஈர்க்கின்றன. நல் இலக்கிய கட்டுரைகள் கொண்ட நூல்கள் சென்றடைய முடியா வெகு சன வட்டத்தின் இதயத்தினுள்ளே சாண்டில்யனின் யவன ராணியும், கடல் புறாவும், கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் நுழைந்து ஆசனம் போட்டு அட்டகாசமாக அமர்ந்ததற்குக் காரணம் அவை கதைகளைக் கொண்டிருந்ததால்தான். கதைகள் என்பதே. எங்கள் மணக்குடியின் எழுத்தறிவேயில்லாத அந்தக் கால ஆட்களெல்லாம் ராமனை அனுமனை சீதையை தருமனை விதுரனை கர்ணனை வள்ளித் திருமணத்தை இலங்கையின் ராவணனை அவன் மைந்தன் மேகநாதனை என்று புராணங்களை விரல்நுனியில் பிடித்து வைத்திருந்தது கதைகளால்தான்.
நாம் எந்த வயதில் இருந்தாலும் எவ்வளவு வளர்ந்த பின்னும், ஒரு கதை கேட்கக் காது கொடுக்கும் ஒரு குழந்தையை நம்முள்ளே வைத்துக்கொண்டேதான் வாழ்கிறோம்.

சமீபத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என எல்லா மொழிகளிலும் இந்தியாவின் எல்லாப் பக்கங்களிலும் ‘பாகுபலி’ திரைப்படம் பெருவெற்றி கண்டதற்குக் காரணம் பிரமாண்டம் என்பதால் மட்டுமேயல்ல, அது ஈர்க்கும் ஒரு கதையைக் கொண்டிருந்தது, எஸ்.எஸ். ராஜமௌலி ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பனவற்றைத் தாண்டி, வளர்ந்து ஆளான பின்னும் மனிதர்களுக்குள்ளே கதை கேட்கும் உள்ளம் இருக்கிறது என்பதால்தான்.  ஹாலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ பார்க்கையில் ‘அயர்ன் மேன்’ செத்துப் போனதைக் கண்டு தேம்பியழுத சீனப் பெண்மணி ஒருவருக்கு மூச்சுத் திணறல் வந்து திரையரங்கிலிருந்து ஸ்ட்ரெச்சரில் அவசர சிகிச்சைப் பிரிவிற்குப் போகுமளவிற்கு ஆனதும் அதனால்தான்.

அரேபியக் கதைகள், ஈசாப் நீதிக் கதைகள், அல்பேனியக் கதைகள், பைபிள் கதைகள்,  சீன நாடோடிக் கதைகள் என எல்லா நாடுகளிலும் மனிதர்கள் கதைகள் உருவாக்கி கதைகளை சொல்லி கதைகளை கடத்தியே வாழ்ந்திருக்கிறார்கள். பன்னிரண்டாந்திருமுறை என்று பக்தி இலக்கியத்தில் கொண்டாடப்படும் பெரிய புராணமும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளே.

கதைகள் எக்காலத்திலும் மனிதர்களை ஈர்க்கின்றன, மனிதர்களை வளர்த்தெடுக்கின்றன.  ஒரு வகையில் மனிதர்களின் கற்பனைத் திறனை ஊட்டி உறுதியாக்கி வளர்க்கும் பயிற்சிக் கூடங்களே கதைகள்.  கதைகளை கேட்கும் வாசிக்கும் மனிதனின் கற்பனைத் திறன் விரிந்து வளர்கிறது.  கதைகளை உன்னிப்பாய் வாசிக்கும் மனிதனுக்கு நினைவகப் பகுதி, உருவாக்கப் பகுதி என மூளையின் இருபக்கமும் கிளர்ந்தெழுந்து துடிப்பாய் இயங்குகிறது.  மூளையின் இடப்பக்கம் வலப்பக்கம் என இருபக்கமும் இயங்கப் பெறும் அதிசயம் அற்புதம் நடைபெறுகிறது கதைகளை வாசிக்கும் போது.  கதைகளை கேட்கும் வாசிக்கும் மனிதனுக்கு ‘அல்சைமர்’ எனப்படும் மறதி நோய் வரும் வாய்ப்பு மிகக் குறைவென்பது என் சொந்தக் கருத்து.

கதைசொல்லிகளோடு வளரும் குழந்தைகள் ஆளுமைகளாக உருவெடுப்பார்கள். பட்ட கதையை, படித்த கதையை என எந்தக் கதையையாவது சொல்லுங்கள் குழந்தைகளுக்கு. அவை அவர்களை வார்த்தெடுக்கும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் ‘சித்திரத்தில் நீதி’ என்ற பெயரில் சித்திரக் கதைகள் பகுதிகள் சேர்த்தோம்.

நாட்டு நடப்பு சம்பவங்கள், செய்திகள், இணையத்தில் காணப் பெற்றவை, கட்செவியஞ்சலில் வந்தவை, சில நாளிதழ்களில் வந்தவை, சில இதழ்களில் கண்டவை, சிறு வயதில் படித்தவை, நாமாக சிந்தித்தவை என எல்லாவற்றிலிருந்தும் கதைகள் செய்தோம். மதிப்பிற்குரிய ஓவியர் சீனு  எனப்படும் சீனிவாசனை செல்லிடப் பேசியில் அழைத்து கதையைச் சொல்வோம். இரண்டொரு நாட்களில் வரைந்து அவர் அனுப்பும் படத்திற்கு வேண்டிய வண்ணம் கதை வசனம் எழுதுவோம். வடிவமைப்பாளர் பாலசுப்ரமணியன் இரண்டையும் சேர்த்து முழுமையாக்கி ‘வளர்ச்சி’ இதழில் வைப்பார். இப்படி சிறுவர்களுக்காகத் தொடங்கப்பட்ட பகுதி, பெரும் வரவேற்புப் பெற்றது. வாசகர்களின் இல்லங்களில் தமிழ் தெரியா சிறுவர்களும், படிக்க இயலா சிறுவர்களும் ‘சித்திரத்தில் நீதி’ பக்கங்களை பிரித்துக் காட்டி ‘இதைப் படிச்சு சொல்லுங்க!’ என்று கேட்கத் தொடங்கிய போது நாங்கள் திரும்பிப் பார்த்தோம்.  பெரியவர்களும் சித்திரக் கதைகளைத் தேடிப் படித்த போது, வியந்து பார்த்தோம்.

‘வளர்ச்சி’ இதழில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக வெளிவந்துள்ள சித்திரக்கதைகளை எல்லாம் தொகுத்து ஒன்றாக்கி வெளியிட்டால் என்ன!’, ‘ஜனவரி 22 – மலர்ச்சி தினத்தன்று என்ன நூல் வெளியிடலாம்!’ என்ற எண்ணங்களால் உந்துதல் வர, இறைவனின் அருளினால், அவை தொகுக்கப்பட்டு இதோ உங்கள் கைகளில் ஒரே நூலாக – ‘சித்திரம் பேசுகிறேன்…’

இந்த நூலின் சித்திரங்களும் வசனங்களும் உங்களிடம் பேசும், கதைகள் சொல்லும்.  கண் கொடுங்கள், காது கொடுங்கள், உள்ளம் கொடுங்கள். உங்கள் குழந்தைகள் இந்நூலினால் பயன் பெறட்டும்.
சித்திரம் பேசட்டும், சிந்தை சிறக்கட்டும்!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,

(பரமன் பச்சைமுத்து)
கீழமணக்குடி
12.01.2020

#ChithiramPesugiren
#ParamanBook
#Malarchi
#MalarchiPublications
#PictureStories
#ChildrenBook

Facebook.com/MalarchiPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *