பாராயணத் திரட்டு – மு. பச்சைமுத்து அறக்கட்டளை

மு. பச்சைமுத்து அறக்கட்டளையின் அடுத்த செயல் வடிவம்:

வில்லுப்பாட்டு, கதாகாலட்சபம், பக்தி இலக்கிய பேருரை, வழக்காடு மன்றம், கதைப்பாட்டு என்று பல வகைகளில் அப்பா சைவ மணம் பரப்பி பணி செய்திருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் அவர் தொடர்ந்து பயணித்தது செய்தது ‘தமிழ் முறைப்படி இறைவனை தொழும் பணி’யே.

வீடு குடிபுகுதல், கோவில் குடமுழுக்கு, மணி விழா, வேள்விகள், மோட்ச தீப ஆராதனை / முக்தி வழிபாட்டு காரியங்கள், இறப்பு என சுக துக்க காரியங்களில் தமிழ் முறைப்படி அகவல்கள் – துதி – பதிகங்கள் – பஞ்ச புராணங்கள் பாடி இறையைத் தொழுது வழிபாடு செய்து தருவது அப்பாவின் தனித்த சிறப்பு. ஓதுவார்களை ஒதுக்கிய சிதம்பரம் கோவிலின் தீட்சிதர்கள் கூட பஞ்ச புராண பதிகங்கள் பாட ‘கீழமணக்குடி பச்சைமுத்துதான் வரணும்!’ என்று அழைத்தாக அறிகிறேன். ஆடூர் சாஸ்திரிகளிடமிருந்து குறிஞ்சிப்பாடி ஐயர் வரை சமஸ்கிருத மந்திரங்கள் கொண்டு பூசைகள் செய்த அநேகம் பேர் தமிழ் முறைப் படி பதிகம் பாடி தொழுவதற்கு அப்பாவையே அழைத்துப் போயினர். வேலூர், ராஜபாளையம், செட்டிநாடு, குறிஞ்சிப்பாடி, சென்னை, ஓசூர், கடலூர், புதுவை என்று எல்லா திசைகளிலும் பயணித்து கோவில் குடமுழுக்குகளில் வேள்விகளில் தமிழ் முறைப்படி இறையைத் தொழுது தந்தார் அப்பா.

திருவிசைப்பா, தேவாரம், திருவாசகம், அடைக்கலப்பத்து, திருப்புகழ், பெரிய புராணம் என
அப்பா சரியான பாடல்களைத் தேர்வு செய்து அவற்றைப் பாடித் தொழுது காரியங்களை நிகழ்த்தித் தருவார்.

அவர் ஆசைப்பட்டு செய்த அந்த திசையிலேயே, அதைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு, இனி செய்ய வருபவர்களுக்கு உதவி செய்வது அப்பாவின் அந்தப் பணியைத் தொடர்வதாக இருக்குமென்று நம்புகிறோம்.

அப்பா தேர்வு செய்த அந்தப் பாடல்களையெல்லாம் தொகுத்து அவர் நினைவாக மு. பச்சைமுத்து அறக்கட்டளையின் மூலம் ஒரு சிறு திரட்டுப் புத்தகமாக வெளியிடுகிறோம்

வேள்விகள் பூசைகள் காரியங்கள் செய்யும் குருக்கள் / ஐயர் / கணபாடி / ஓதுவார் / புரோகிதர்களுக்கு இந்த நூல் உதவும் வகையில் அவர்களுக்கு இந்நூல் தானமாக வழங்கப்படும்.

அச்சு வடிவத்தோடு இந்த நூலின் மின்வடிவமும் தரப்படும், வேள்விகளின் போது புரோகிதர்கள் ஓதுவார்கள் தங்களது செல்லிடப் பேசியிலிருந்தே பாராயணம் செய்து கொள்ள இது வகை செய்யும்.

வானுலகிலிருந்து தந்தை ஆசி புரியட்டும்,
இறைவன் துணை செய்யட்டும்!



: பரமன் பச்சைமுத்து
சென்னை
26.01.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *