கஃபே உடுப்பி ருச்சி

ஓர் உணவகத்தின் உள்ளே நிகழும் சிறு சிறு வெளிப்பாடுகளே போதுமானதாக இருக்கிறது, நம்மை கண்டு கொள்ள.

இடப்பறம்:

‘மாவு இப்பத்தான் அரைக்கறாங்களா?’

சீருடையணிந்த பணியாளர் வருவதைக் கண்டு அவரிடம், ‘பூரி சுட்டுக் குடுக்கனும். நேரம் ஆவும் சரி. இட்லிக்கு என்னா? ஒரு இட்லி ஏன் இவ்ளோ நேரம்! இத்தனைப் பேர் வேலை பாக்கறீங்க, ஒரு இட்லிக்கு ஏன் இவ்ளோ நேரம்?’

‘பாக்கறேன் சார்’ என்று சொல்லி விட்டு உணவக ஊழியர் நகர்ந்ததும், பக்கத்தில் அமர்ந்து உப்பிய பூரியை உடைத்து கிள்ளி கிழங்கோடு விள்ளலோடு வாய்க்குள் தள்ளும் மனைவியிடம் தொடர்ந்தார் வெள்ளை வெளேர் சட்டையும் மெல்லிய பச்சை கரை வெள்ளை வேட்டி அதற்குத் தோதாக வெள்ளை தலைமுடி கொண்ட இந்தியன் தாத்தாவைப் போல இருந்த முதியவர், ‘இட்லிக்கு இவ்ளோ நேரமா? இவ்ளோ பேர் இருக்காங்க. இட்லிக்கு இவ்ளோ நேரம்!’

வலப்புறம்:

‘நீரு தோசை! புதுசாருக்கே!’
‘அதெல்லாம் ஒண்ணும் வாணாம். அதெல்லாம் சாப்ட வேணாம்! இட்லி சாப்டுங்க போதும்’
‘இல்ல… எப்டி இருக்குன்னு பாக்கலாமே!’
‘அதெல்லாம் வாணாம், இட்லி சாப்டுங்க. அவ்ளோதான் சொல்லுவேன்!’
மயில் கழுத்து வண்ணத்தில் சுடிதாரும் ஐந்து விரட்கடையளவில் ஜொலிக்கும் நெக்லெஸும் ஜிவ்வென்ற முகமும் கொண்டிருந்தாள் அந்தப் பெண்மணி.

அவனுக்குத் தலையில் முடியில்லை, முகத்தில் சுரத்தில்லை.

‘இட்லி சாப்டுங்க போதும். வேற ஒண்ணும் வேணாம்!’

எதிர்ப்புறம்:

‘இவருக்கு நெய் சாம்பார் மினி இட்லி, எனக்கு… ம்ம்ம்…ம்மும்ம்ம்…. உப்புமா!’

‘மாப்ள… உப்மாவா ஆர்டர் பண்ணிக்கிற!’

‘வீட்ல உப்புமாவே சமைக்கறது இல்லையா என் வைஃப். அப்புறம் எங்கதான் சாப்டறது உப்புமாவ!’

இந்த டேபிளில் என் முன்னேயிருந்த ராகி இட்லியை விட்டுவிட்டு எதிர் டேபிளில் இருக்கும் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வாய் முணுமுணுக்கிறது, ‘ஐய்ய்ய்ய்யாஆ…! எந்த ஊர்லீங்க பொண்ணு கட்னீங்க நீங்க!’

– பரமன் பச்சைமுத்து
‘கஃபே உடுப்பி ருச்சி’
திண்டிவனம் சாலை,
07.02.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *