அடுத்தவரின் நிலையை புரிந்து ஒத்துழைத்து உயர வேண்டிய நேரமிது – பரமன் பச்சைமுத்து

சீனா கையூன்றி எழுந்து இப்போது இயங்கத்தொடங்கிவிட்ட வேளையில் கிட்டத்தட்ட மொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது.

இந்திய நாடு மொத்தமாய் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மருத்துவர்களும், காவல்துறை மற்றும் அரசுப் பணியாளர்களும் வெளியில் தங்களைத் தந்து மற்றவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வாரங்கள் வீட்டுக்குள் இருங்கள், வீட்டு வாசலில் லக்ஷ்மணன் ரேகை இருப்பதாகக் கருதி அதைத் தாண்டி வெளியே வராதீர்கள் என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொண்ட பிரதமர் அதற்கு முந்தைய அறிவிப்பின் போது ‘ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்காதீர்கள்’ என்று வேண்டுகோள் வைத்தார்.

ஒவ்வொருவருக்கும் ரேஷன் அட்டைப்படி 1000/- ரூபாய் என்று அறிவித்து விட்டார் தமிழக முதல்வர். நெருக்கடியான நேரமிது, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வேலை செய்தால்தான் வருமானம், வேலைதான் வாழ்வாதாரம் என்று இருக்கும் மக்களுக்கு எல்லாமே முடங்கி விட்டதால் அடுத்த மூன்று வாரங்களுக்கு வேலையே இல்லை, வருமானமும் இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைபடத் தொழிலாளர்களுக்கு 50,00,000/- ரூபாய் தந்திருக்கிறார், விஜய் சேதுபதி 10,00,000/- ரூபாய் தந்திருக்கிறார். திரைக்கதை எழுத்தாளர் அஜயன் பாலா, ’திரைபடத் தொழிலாளர்களுக்கு நிதி குவிகிறது. உதவி இயக்குனர்கள் நிலை கொடுமை!’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது எல்லாருக்கும் பொருந்தும் இன்று. இந்தத் தொழில் அந்தத் தொழில் என்று இல்லாமல் எல்லாத் தொழிலுமே அப்படியே ஸ்தம்பித்து நிற்கின்றன.

சிறு நிறுவனம், பெரு நிறுவனம் என்று எல்லாருக்குமே அவரவர் வணிகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இத்தனை நாளில் இவ்வளவு வேலை செய்தால், இவ்வளவு வணிகம் நடந்தேறும், இவ்வளவு வணிகம் நடந்தேறினால் அதை வைத்து, அதில் இவ்வளவு இவற்றை நடத்துவதற்கு, இது ஊழியர்களின் சம்பளத்திற்கு, இது ஜிஎஸ்டிக்கு என்று இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட்டிகொண்டிருந்த சிறுவணிகர்கள் என்ன செய்வார்கள் இன்று. தாங்கள் செலுத்தவேண்டிய மாதத் தவணைகளை எப்படி செலுத்துவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி.

தொழிலும் மூன்று வாரங்களுக்கு முடங்கிவிட்டது, கடையை மூடியே வைத்தாலும் வாடகையைத் தரவேண்டும். வேலையே இல்லை, ஆனால் ஊழியர்களுக்கு ஊதியம் தரவேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள் எல்லோரும். ஊழியர்களின் நிலையம் அப்படியே. இந்த ஊதியத்தை நம்பியே ஊழியர்களின் வீடு இருக்கும். நிச்சயம் அவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவே வேண்டும்.

உலகமே முடங்கி நின்று விட்ட நிலையில். இந்தப் பக்கம் ஈட்டித்தான் அந்தப் பக்கம் கொடுக்கமுடியும் என்ற நிலையில் இருக்கும் தொழில் முனைவோரும் வணிகத்திலிருப்போரும் என்ன செய்வர்! எல்லோருமே அடுத்தவரின் நிலையை புரிந்து ஒத்துழைத்து உயர வேண்டிய நேரமிது.

ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலிருந்து அடுத்தவருக்கு உதவ வேண்டிய நேரமிது. ராஜா என்பவரின் முகநூல் பதிவு என் நெஞ்சைத் தொட்டது. உடனே தரையில் மண்டியிட்டு அவர் இன்னும் சிறப்பாக வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அவரது வீட்டில் குடியிருப்பவர்களிடத்தில் ‘இந்த மாதம் வாடகை வேண்டாம்!’ என்று சொல்லிவிட்டாராம் ராஜா.

அரசு தன் மக்களின் நிலையை உணர்ந்தது சேவை வரி – கணக்கு தாக்கலை ஜூன் மாதத்திற்கு நீட்டித்து உதவி செய்துள்ளது. தமிழக அரசு பணமும் ரேஷன் பொருட்களும் தரப்படும் என்று அறிவித்துவிட்டது. ரஜினிகாந்தும் விஜய்சேதுபதியும் இன்னும் பிறரும் அவர்களது துறையில் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளனர். இது எல்லா இடங்களிலும் பின்பற்றப்பட்டால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். விநியோகஸ்தர், இடைத்தரகர், விற்பவர், தொழில் முனைவோர் என அனைவரும் அவரவர் நிலையிலிருந்து அடுத்தவருக்கு உதவ வேண்டிய நேரமிது.

எல்லோரும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவிக் கொண்டு எழ வேண்டிய நேரமிது. நம் நிலையிலிருந்து அடுத்த நிலையிலிருப்பவருக்கு நாம் உதவி செய்தால், நமக்கு உதவி கிடைக்கும். கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும்.

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
சென்னை
25.03.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *