ஒரு வார்த்தையில் அடைத்து விட முடிவதா உணர்வு!

‘டைட்டானிக் பாபு ஆர் ஏ புரம் நியூஸ்பேப்பர்’

செல்லிடப்பேசியின் தொடுதிரையில் ‘காண்டாக்ட்ஸ்’ஸில் ‘ஆர்ஏ புரம் நியூஸ்பேப்பர்’ என்று டைப் செய்து தேடுகிறேன். புதிதாக ஒரு மனிதரின் எண்ணை  செல்லிடப்பேசியில் சேர்க்கும்போது, தேடும்போது எளிதாக இருக்கும் என்பதற்காக அவருக்கு ஒரு அடையாளத்தையும் சேர்த்து பதிவது நம் இயல்புதானே. ‘உமா ப்ரியாஸ் ஃப்ரண்ட்’ ‘ராஜேந்திரன் எலக்ட்ரிகல்ஸ்’ ‘வாணிஸ்ரீ கெமிஸ்ட்ரி மிஸ்’ என்பது போல.  

 ‘ஆர்ஏபுரம் நியூஸ்பேப்பர்’ என்று தேடுகிறேன். ‘டைட்டானிக் பாபு ஆர்ஏ புரம் நியூஸ்பேப்பர்’ என்று நொடியில் கொண்டு வந்து நிறுத்துகிறது கொரிய ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி.

‘டைட்டானிக் பாபு! இது என்ன பெயர்? ‘டைட்டானிக்’ படம் வந்த போது பிறந்திருப்பாரோ? 1997ல் வந்தது டைட்டானிக் திரைப்படம். இன்றோடு இருபத்தி மூன்று ஆண்டுகள். வெறும் இருபத்தி மூன்று வயதுதானா இருக்கும், இந்த ஏரியா முழுக்க இருக்கும் ஆயிரக்கணக்கான வீடுகளில் செய்தித்தாள், வார மாத இதழ்களை பல பையன்களை வேலைக்கு வைத்துக் கொண்டு விநியோகித்துக் கொண்டிருக்கும் அவருக்கு அனுபவமே இன்னும் அதிகமாக இருக்கும், வெறும் இருபத்தி மூன்று வயதாக இருக்க முடியாது. அப்படியானால் கொக்கி குமாரு, சிநேக் பாபு மாதிரி இடுகுறிப் பெயர் போல’

டைடானிக் பாபுவை நான் இதுவரை பார்த்ததே இல்லை. பெங்களூரிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றலாகி வந்த போது, அதிகாலையில் அடுக்ககக் குடியிருப்பின் வெளியில் நின்று கொண்டிருந்தபோது சைக்கிளில் இரண்டு பக்கமும் மாட்டியிருந்த வாயகன்ற பைகளின் வயிறு முழுக்கவும் செய்தித்தாள்களை நிறைத்துக் கொண்டு வந்தவனைக் கண்டு, ‘ ஹலோ… எனக்கும் நியூஸ்பேப்பர் வேணும்!’ என்று சொன்ன போது, ‘எந்த ஃபிளாட்டு சார்’ என்று கேட்டு மனதில் குறித்துக் கொண்டு, என்னென்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு போனான். அடுத்தநாள் அவன் பெயர் இளங்கோ என்றும், அவனது செல்லிடப்பேசி எண்ணையும், அவன் பணியாற்றும் முகவரின் என்னையும் தந்தான். அப்படித்தான் டைட்டானிக் பாபு எண் என்னிடம் வந்தது. செய்தித்தாள் வராத போது, இளங்கோ என் அழைப்பை எடுக்காத போது மட்டுமே டைட்டானிக் பாபுவை நான் அழைப்பேன்.

‘ஏங்க, நியூஸ் பேப்பர நிறுத்திடலாமா?’

முந்தைய இரவு என் மனைவி கேட்ட போது, உடனே நான் கேட்டது ‘அப்ப பாலையும் நிறுத்திடலாமா?’
உலகமே கொரோனா அச்சத்தில் முடங்கி, உலகத்தில் எதனோடும் தொடர்பில்லாமல் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் போது, வீட்டுக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்பாக இருப்பவர்கள் செய்தித்தாள் கொண்டு வருபவரும், பாலை கொண்டு வந்து நாம் வைக்கும் சொம்பில் ஊற்றிப் போகும் பால்காரரும்தான்.
காலையில் சொல்லி வைத்தார் போல செய்தித்தாள் வரவில்லை. இளங்கோ அழைப்பை எடுக்கவில்லை. அப்படித்தான் டைட்டானிக் பாபுவை நான் அழைத்தது.

‘சார்.. அந்த அபார்ட்மென்ட்டா. சொல்லுங்க சார்’

‘இன்னைக்கு பேப்பர் வரல. நான் ஆன்லைன்ல சப்ஸ்க்ரைப் பண்ணிடட்டுமா?’

‘சார், நிறைய பிரச்சினை பண்றாங்க சார். நம்ம பசங்கள சில எடத்தில விட மாட்டேங்கறாங்க. பேப்பர் வர்றதுக்கு பிரச்சினையா இருக்கு. ஒரு மூணு நாளு குடுங்க சார்!’

அன்றிலிருந்து ஊரடங்கு இன்னும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. அடுக்கக குடியிருப்பின் சன்னல்களுக்கு வெளியில் காகங்களையும் அணில்களையும் தவிர மனிதர் எவரும் தென்படவில்லை. மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள்.  அடுத்த நாள் அதிகாலையில் பழக்க இயல்பில் கதவை திறக்கிறேன். வாசல் கதவுக்கு வெளியே இருக்கும் இரும்பு சட்டத்தால் ஆன வெளிக்கதவில் செருகி வைக்கப்பட்டிருக்கிறது எனக்கான செய்தித்தாள்கள். நான் வியப்பிலும் என் மனைவி அதிர்விலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம்.

‘சரி, என்ன இப்போ! பாதுகாப்பாதான இருக்கணும் உனக்கு. பாரு!’ என்று இடக்கையால் செய்தித்தாள்களை கீழே விரித்து வலக்கையால் இஸ்திரி பெட்டியை எடுத்து வந்து பொருத்தி அதிக சூட்டில் சுடச்சுட இஸ்திரி செய்கிறேன். இடையில் இடையில் கைகளில் கிருமி நாசினி தடவிக்கொள்கிறேன். நாவல் கொரோனா கிருமியைக் கொல்வதானும் சரி, செய்திகளை சுடச் சுட படிப்பதென்றானாலும் சரி, இது ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. அடுத்த சில நாட்களில் ஏறக்குறைய எல்லா செய்தித்தாள்களும் இணைப்புக் பக்கங்களை நிறுத்திக் கொள்கின்றன. எல்லாப் பகுதிகளும் மெயின் எடிஷனுக்குள் அடங்கிவிட்டன. இஸ்திரி செய்வதற்கு இன்னும் ஏதுவானது எனக்கு.   

ஊடகங்களும், கட்செவியஞ்சலில் வரும் செய்திகளும் பரபரப்பிற்காக உண்மையல்லாத ஊகங்களைத்தாங்கி வந்து எதிரியத்தை நம் மண்டைக்குள் நிறைக்கும் வேளையில், உண்மையை உண்மையாகச் சொல்லி மக்களை தெளிவுகொள்ளச் செய்ததில் செய்தித்தாள்களுக்கு முக்கிய பங்குண்டு. உலகத்தோடு துண்டித்துக் கொண்டு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு பேருதவி புரிகின்றன செய்திதாள்கள்.  வயது முதிர்ந்த என் அம்மாவிற்கும், அத்தைக்கும், எனக்கும் என எல்லோருக்கும் செய்திதாள்களே நண்பனாய், பார்க்கும் கண்ணாடியாய் இருக்கின்றன.   

செய்தித்தாள் போடும் இளங்கோவை, மாதாந்திர பில்லைக் கொடுத்து பணம் வாங்க வந்து நிற்கும் நாளன்று மாதத்திற்கொருமுறை மட்டுமே பார்க்கிறேன் நான்.  மழை வெய்யில் பணி கடையடைப்பு கொரோனா ஊரடங்கு என எதுவாக இருந்தாலும் அதிகாலையில் செய்தித்தாளை செருகிவிட்டுப் போய் விடுவான். என்றாவது நான் உடற்பயிற்சி முடித்து திரும்பும் போது அவனை எதிரில் பார்க்க நேர்ந்தால், ‘குட் மார்னிங் சார்!’ என்று சிரித்த முகத்துடன் சொல்வான்.

வீட்டில் காய்கறி தீர்ந்துவிட்டது. சென்னையில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. கடைகளில் கூட்டம், சில கடைகள் கூட்டம் காரணமாக சீல் வைக்கப்பட்டன என்ற செய்திகளால் குழம்பி நிற்கும்போது, ‘காய்கறியேய்ய்…!’ அடுக்கத்தின் கீழிருந்து, நம் காதுகளில் தேன் பாய்ச்சி குரல் வந்து விழுகிறது.  

பல ஆண்டுகளாக தள்ளு வண்டியில் காய்கறி  கொண்டு வந்து தரும் செந்தில் அண்ணாச்சி. பார்க்கும்போதெல்லாம் ‘சார்’ என்பதை இழுத்து அழுத்தி ‘சார் வணக்கம்!’ என்று சொல்லும் ‘காய்க்காரர்’. ஒரே வளாகத்துக்குள் நூறு வீடுகள் கொண்ட எங்கள் அடுக்கக் குடியிருப்புக்கு வந்து, யாருக்கு என்ன வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொண்டு அடுத்த நாள் கோயம்பேடு சந்தையிலிருந்து கொண்டு வந்து நம் ஃபிளாட் வாசலில் வைத்து விட்டு போகும் தள்ளு வண்டிக்காரர். அவர் பெயர் செந்தில் அண்ணாச்சி என்று கூட எல்லோருக்கும் தெரியாது, ‘காய்க்காரர்’தான். அவர் கூட இவர்களை ‘2B அக்கா   3D ஆண்ட்டி, கீழ் வீட்டு அம்மா’ என்றுதான் அடையாளம் வைத்திருப்பாரோ என்னவோ. 

‘காய்கறியேய்ய்ய்!’ என்ற அவரது குரலால் உயிர் பாய்ந்தது பல வீடுகளுக்கு. பையையெடுத்துக் கொண்டு பாய்ந்து ஓடினாள் தரை தளத்திற்கு என் மனைவி. ‘ஏங்க, கீழ நெறய்ய பேரு வரிசைல நிக்கறோம், சோஷியல் டிஸ்டன்சிங். ஒரு இருவது நிமிஷம் கழிச்சி கீழ வாங்க பையத் தூக்கிட்டு வரணும்’ அழைத்துச் சொல்கிறாள் செல்லிடப்பேசியில். காய்க்காரரால் பைகளில் காய்கறி வீடுகளில் நிம்மதிப் பெருமூச்சுகள்.

‘அம்மா பால்!’. கதவைத் திறந்தால் அதே எவர் சில்வர் தூக்கை எடுத்துக் கொண்டு இரண்டு மாடியேறி வாசலில்  நிற்கிறார் பால்காரர். சிரித்துக் கொண்டே பாலை பாத்திரத்தில் ஊற்றி விட்டு படிகளில் நடந்து மறைகிறார்.

ஊரடங்கில் மார்ச் மாதம் முழுதாய் முடிந்து ஏப்ரல் வந்து விட்டது. அழைப்பு மணி ஒலிக்கிறது. கதவைத் திறக்கிறேன்.

கைகளில் கையுறைகள், பெரிய கோட் போன்ற ஓர் உடை, வாயையும் மூக்கையும் மறைத்து மாஸ்க்கோடு யாரோ நிற்கிறார்கள். கையில் பில் புக். ‘குட் மார்னிங் சார்!’

குட் மார்னிங் சொன்ன விதத்தில் புரிந்தது நியூஸ் பேப்பர் இளங்கோ.

‘ஹாய் இளங்கோ, எப்படி இருக்கீங்க? ஸேஃபா போங்க, வாங்க, இருங்க! எவ்ளோ பில்லு?’

அந்த மாதத்திற்கான தொகையை பெற்றுக் கொண்டு அவன் புறப்படும் முன் அவனை அழைத்து மறுபடியும் சொன்னேன்.

‘தேங்க்ஸ் இளங்கோ!’

‘சார், நாந்தான்சார் சொல்லனும்!’

‘நானும்தான் சொல்லனும் இளங்கோ! தேங்க்ஸ்’

மகிழ்ச்சியோடு படியிலறிங்கி மறைந்து விட்டான்.

அந்த ‘தேங்க்ஸ் இளங்கோ’ இளங்கோவிற்கானது மட்டுமல்ல; இளங்கோவிற்கும், அவனுக்குப் பின்னே இருக்கும் டைட்டானிக் பாபுவிற்கும், செய்தித்தாள் வர உழைக்கும் அத்தனை பேருக்கும், காய்கறிக்கார செந்தில் அண்ணாச்சிக்கும், பால்காரருக்கும், தெருவைக் கூட்டி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கும், கணக்கெடுத்துக் கொண்டிருக்கும் பணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணி செய்து கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், எல்லோருக்கும்.

நன்றி என்ற ஒரு வார்த்தையில் அடைத்து விட முடிவதா அந்த உணர்வு. எல்லா நேரங்களிலும் எல்லா உணர்வுகளையும் வெறும் வார்த்தைகளில் அடைத்து விட முடிவதில்லை.

நியூஸ்பேப்பர் இளங்கோ போன பின்னும் அதே இடத்தில் வாசலையே பார்த்து கொண்டு நிற்கிறேன் நான்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
08.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *