‘இப்படியொரு திரைப்படத்தை தமிழில் எடுத்தால் திரையிடவிடுவோமா?!’ ‘ட்ரான்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

:அயல் சினிமா: மலையாளம் – தமிழ்:

‘துன்பம் தாளாமல் நான் தற்கொலை செய்துகொள்ள போகையில் என்னை நோக்கி குரல் வந்தது… ‘ஜோஷுவா!’ நான் எழுந்து பார்த்தேன்!’

‘அழைத்தது யாரானும்?’

‘ஜீசஸ்.. இறைவன் இயேசு நாதர்!’

‘இயேசுவா!’

‘ஆமாம் இயேசுவேதான்! ‘ஜோஷுவா, இந்த வாழ்வு நான் கொடுத்தது, அதை முடித்துக்கொள்ள உனக்கு உரிமையில்லை. நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்! எழுந்து வா!’ என்றார்’

‘இயேசுவை பார்த்ததாக சொல்கிறீர்கள். இயேசு எப்படி இருந்தார், நாம் மனதில் கொண்டிருக்கும் தாடியும் உருவமும் படியே இருந்ததா இயேசுவின் வடிவம்?’

‘இயேசு அன்பின் வடிவம்! அவர் அன்பின் வடிவமாக இருந்தார்!’

உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் ‘1 – 2 – 1 நேர்காணல்’ நிகழ்ச்சி நேரலையில், இயேசுவின் தூதர் என்றும் ‘செவிடர்கள் கேட்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள்!’ என்று தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் அதிசயங்கள் நிகழ்த்துபவர் என்றும் உலகம் போற்றி வணங்கும் அருட்தந்தையும் மதகுருவுமான ‘ப்ஏஸ்டர்’ ஜோஷுவா. நிகழ்ச்சியில் விறுவிறுப்பும் வியப்பும் எகிறும் போது ஜோஷுவாவிற்கு தொகுப்பாளர் அடுத்த பெரும் இக்கட்டை ஏற்படுத்துகிறார்.

‘இவ்வளவு சொத்துக்கள், இத்தனை ஆடம்பரக் கார்கள், சொகுசு பங்களாக்கள் கொண்டுள்ள நீங்கள், இறைவன் பெயரால் அதிசயங்கள் பண்ணுவதாக சொல்கிறீர்கள். சரி, ஒன்றை செய்துகாட்டுங்கள் நாங்கள் நம்புகிறோம்! மக்களே! நம் கண்களின் முன்னால் இப்போது இங்கே பேஸ்டர் ஜோஷுவா அவர்கள் நமக்கு அற்புதம் ஒன்றை நிகழ்த்திக் காட்டுவார்!’

கேமரா ஓடுகிறது. தொலைக்காட்சி குழுவினர், உலகப் பார்வையாளர்கள் என எல்லோரிடமும் ஓர் அழுத்தமும் பதைபதைப்பும் எகிறுகிறது. பார்த்துகொண்டிருக்கும் நமக்கும் ‘அட!’ என்று.

கொஞ்சம் நேரம் குத்துக்கல்லு மாதிரி உற்சாகமாக தெம்பாக உட்கார்ந்திருக்கும் தொகுப்பாளர் மேத்யூசை உற்றுப் பார்க்கும் ஜோஷுவா, ‘மேத்யூஸ், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்தானே! ஏசியிலும் உங்களுக்கு லேசாக வேர்க்கிறதே, உங்களால் எழுந்து நடக்க முடியுமா பாருங்கள்!’ என்கிறார். ஏசியிலும் வியர்த்துக் கொட்டுகிறது மேத்யூசுக்கு, ‘முடியுமே! இதோ எழுகிறேனே! ஹஹாஹ்!’ என்றவாறே எழும் மேத்யூஸ் அடுத்த அடி எடுத்து வைக்கும்போது அப்படியே சரிகிறார். தரையில் சரிந்து விழுகிறார். ‘ஆண்டவனின் அற்புதம், அல்லேலூயா!’ என்று அலறுகிறார் ஜோஷுவா. ‘அற்புதம் நிகழ்த்திக் கட்டினார் ஜோஷுவா’ என்று உலக ஊடகங்களில் பற்றிக் கொள்கிறது செய்தி.

இப்படி ஒரு கதையை தமிழில் திரைப்படமாக எடுத்தால் இந்நேரம் ‘சிறுபான்மையினருக்கு எதிரான திரைப்படம்’ ‘மாற்று மதத்தை இழிவு செய்யும் திரைப்படம்’ என்றெல்லாம் கூறி போராட்டம் வன்முறை என்று கலவரத்தில் இறங்கியிருப்பார்கள். ஏன், இந்தியாவில் வேறு எந்த மொழியில் வந்திருந்தாலும் பிரச்சினைகள் வெடித்திருக்கும். கேரளத்தில் இப்படியொரு திரைப்படம், இப்படியொரு கதைக்களனில் அதுவும் படம் முழுக்க இப்படியான நிகழ்வுகளையே கொண்ட திரைப்படத்தை தந்திருக்கிறார்கள். மாற்றுக் கருத்தை மதித்து, திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்துக் கடக்கும் அவர்களது இயல்புக்கு ஒரு பூச்செண்டு அல்ல, ஒரு பூக்காட்டையே தரலாம். இந்தியா கற்றுக்கொள்ள முன்மாதிரியாக நிற்கிறது கேரளம். கேரளத்திற்கு மலர்ச்சி வணக்கம்!

கன்னியாகுமரியில் ‘விஜூ பிரசாத்’தாக பிழைப்பு நடத்தும் ஒரு மனிதன் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் சோக நிகழ்வுகளில் மீண்டெழுந்து பிழைப்பதற்கு மும்பை போய் சேர்கையில், அங்கே அவனுக்கு தொடங்கும் புது வாழ்வும், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் என கட்டியிருக்கிறார்கள்.

தான் செய்யும் எந்தப் படத்திலும் எந்தப் பாத்திரத்திலும் தன்னை ஊற்றி நிரப்பி மிளிர்வார் ஃபஹத் ஃபாசில் என்பது மறுபடியும் நிரூபணம் ஆகிறது. பட்டையைக் கிளப்புகிறார். நஸ்ரியா மிக அழகாக திரும்ப வந்திருக்கிறார். நம் கெளதம் வாசு தேவ் மேனன் வில்லனாக நன்றாக செய்திருக்கிறார்.

‘மருத்துவரிடம் என் பிள்ளையைக் கொண்டு செல்ல மாட்டேன். பேஸ்டர் செய்யும் பிரார்த்தனையே போதும்!’ என்று இருக்கும் அந்த கருத்த மனிதனும், அவனது அடுத்தடுத்த செய்கைகளும் அதன் வழியே இயக்குனர் கடத்தும் உணர்வும் படத்தின் முக்கிய சங்கதிகள்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘ட்ரான்ஸ்’ – நல்ல படம். ஒரு நல்ல நாவலை வாசித்த அனுபவம். நிச்சயம் பாருங்கள்.

  • திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *