மிளகாய்ச்செடி கதை

wp-15939352892783999563993329093403.jpg

வடக்குப் பக்க பலகனியில்
வந்துவிழும் கொஞ்சூண்டு சூரியஒளியில்
வைத்தேன் ஒரு தொட்டி மிளகாய்ச்செடி

கிடைக்கும் கொஞ்ச  வெய்யிலை
துணி காய இந்நேரம்
செடி காய இந்நேரம் என்று மனைவியோடு பேசிப் பகுத்தேன்

வீட்டிலிருக்கும் வேளையெல்லாம் வெயிலுக்கு நகர்த்தி நகர்த்தி
வியர்த்து மகிழ்ந்தேன்

வெள்ளை வெளேரென்று 
விரிந்து வந்தன பதினைந்து பூக்கள்

உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிரித்தன என்னுடலின் அங்கங்கள்

பூக்கும் பிறகு காய்க்கும் என்று
கனியாகும் மனதுடன் காத்திருந்தேன்

ஓடி வந்த அணிலொன்று
ஒவ்வோர் பூவாய் முகர்ந்து முகர்ந்து பார்த்தது

பார்த்துக் கொண்டிருக்கையிலே
ஸ்பீல்பெர்க் படத்து டைனோசரைப் போல விழுங்குகிறது

மிளகாய்ப் பூவை ‘ஆ… காரம்!’ என்றெண்ணி ஆகாரம் கொள்கிறது

பூக்களை மட்டும் தின்றுவிட்டு ‘போதும் பரமா!’வென்பது போல் போய்விடுகிறது

நான் நீரூற்ற செடி பூ விட அணில் வர என்ற இந்தப் படலம் தொடர்கிறது

தின்று விட்டுப் போகட்டும் அணில் பிள்ளையென
தினம் தோறும் நீரூற்றி செடி வளர்க்கிறேன் நான்!

– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்
05.07.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *