‘அச்சம் தவிர், ஆளுமை கொள்!’ – Part 2

Screen shot 2 - Copy

பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமாகி வரும் தொடர்:

Screen shot 2சென்ற இதழில் பெங்களூருவில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைப் பார்த்தோம். அதில் பார்த்த கார்த்திக், அருண் கதையில் மட்டுமல்ல, இவ்வுலகத்தின் நிதர்சனமான உண்மை – ‘படிப்பு மட்டுமே போதாது!’.

‘படிச்சவன் பாட்டக் கெடுத்தான், எழுதனவன் ஏட்டைக் கெடுத்தான்,’ என்று நீட்டி முழக்கி குத்திப் பேசும் பாரதிராஜா பட பாட்டிக் கணக்காய் பேசும் பெரியவர்கள் சொல்வது சரி என்று நான் சொல்லவில்லை. படிப்பு வேண்டும். படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட், உங்களை நேர்முகத்தேர்விர்க்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். மற்றவர்கள் போராடி வரவே முடியாமல் தவிக்கும் சில தளங்களில் உங்களை அநாயாசமாகக் கொண்டு போய் அது சேர்க்கும். அங்கிருந்து மேலெழுந்து நின்று, வென்று உயர்ந்து போக மற்ற சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. அந்த சில விஷயங்களைக் கொண்டவர்கள், அங்கிருந்து எளிதாய் தாண்டி மேலேறிப் போவதும், அவை இல்லாதவர்கள் தங்கிப்போவதும் நித்தமும் நடக்கும் நிகழ்வுகள்.

அந்த சில விஷயங்கள், எவை? ஒரு வார்த்தையில் சொல்வதானால், ‘ஆளுமை’ என்று கூறலாம். பல முக்கிய பண்புகளை ஒருவர் தன்னுள்ளே வளர்த்துக் கொள்வதன் மூலம், அவர் ஒரு ஆளுமையாக உருவெடுக்கிறார். ஒருவர் ஆளுமையாக உருவெடுக்கும்போது, ‘சும்மா அதிருதுதில்ல!’ என்பது போல சென்ற இடமெல்லாம் சிறப்பு வந்து சேரும். பேச்சுக் கலை, நடந்து கொள்ளும் விதம், சிந்திக்கும் விதம், நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நெஞ்சுறுதி என்று ஆளுமைக் குணங்களைப் பட்டியலிடாமல், எப்படி வளர்த்துக் கொள்வதெனப் பார்ப்போம்.

 

  1. எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது:

முதலில் இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒன்று – நமக்கு சில விஷயங்கள் தெரியாது. ஆமாம், தெரியாது. அது தவறில்லை. நாம் வளர்ந்த சூழ்நிலையில் ஒரு சில விஷயங்களை, தெரிந்துகொள்ள / கற்றுக்கொள்ள வாய்ப்புகளில்லை. அது நமது தவறில்லை. இன்றைய நிலையில் சில விஷயங்கள் தெரியாது. வாய்ப்பு வந்தால், கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வந்தால் தெரிந்து கொள்ளும் வல்லமை இருக்கிறது. ஆர்வம் இருக்கிறது. இதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டு – எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது. இந்த மொத்த உலகத்தையும் சல்லடை போட்டு சலித்தாலும், எல்லாம் தெரிந்தவர் என்று ஒருவரை எங்குமே கண்டுபிடிக்க இயலாது. பட்டையைக் கிளப்பும் பன்னாட்டு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒருவருக்கு கார் ஓட்டத் தெரியாமலிருக்கலாம். ஆங்கிலம் அட்சர சுத்தமாய் பேசத்தெரிந்த ஒருவருக்கு, டெர்ம் இன்ஸூரன்ஸ் எதற்கு என்று தெரியாமலிருக்கலாம், ப்ரொஃபஷனில் பட்டையைக் கிளப்பும் ஒருவருக்கு மனைவியிடம் எப்படிப் பேசி புரியவைப்பது என்பது தெரியாமலிருக்கலாம். எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது. எல்லாம் தெரிந்தவர் யாருமே இல்லை என்றிக்க, சில விஷயங்கள் தெரியாது என்பதற்காக அச்சம் ஏன்?

நாம் வளர்ந்த சூழ்நிலையில் ஒரு சில விஷயங்களை, தெரிந்துகொள்ள / கற்றுக்கொள்ள வாய்ப்புகளில்லை. அது நமது தவறில்லை. இன்றைய நிலையில் சில விஷயங்கள் தெரியாது. வாய்ப்பு வந்தால், கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வந்தால் தெரிந்து கொள்ளும் வல்லமை இருக்கிறது. ஆர்வம் இருக்கிறது. அச்சப் படத் தேவையில்லை. அச்சம் தவிருங்கள்.

 

  1. உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி:

எதனால் இந்த பயம்? ‘ஐயோ, தப்பா கிப்பா ஏதாவது சொல்லிட்டா, என்ன ஆகுமோ?!’ என்று உள்ளே ஓடும் இந்த எண்ணமே அச்சத்திற்கு காரணம். அச்சம் வரும்போது, எல்லாம் தவறாகிப்போகிறது. சரியான பதில், சரியான வழிமுறைகள், சரியான செயல்கள் கூட, அச்சத்தால் மாறி தவறாகிப் போகிறது. உளறிக் கொட்டிவிடுவதும், ஒன்று கிடக்க ஒன்றை மாற்றி செய்து விடுவதும் இப்படித்தான் நடக்கிறது. அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் ஒரு ப்ராஜெக்ட்டுக்கு போயிருந்த போது, சமீர் ஷேல்கே என்ற ஒரு மேலாளரிடமிருந்து ஒன்றை நான் கற்றுக்கொன்றேன். என் வாழ்வை மாற்றிப் போட்ட ஒரு கேள்வி அது. என் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளை நான் திட்டமிடும் போதும், என்னை நான் கேட்டுக்கொள்ளும் கேள்வி அது. “சரி, எல்லாமே தவறாகப் போய் விட்டால், அதிக பட்சம் என்னவாகும்?” – இதுதான் அந்தக் கேள்வி. இதுதான், நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. கேளுங்கள், ‘எல்லாமே தப்பாய் போனால், கடைசியில என்னவாகும்? அதிக பட்சம் என்ன நடக்கும்?’. இந்த திட்டம் தப்பாய் போகும், இந்த வேலை கிடைக்காது, இந்த ப்ராஜெக்ட் எதிர்பார்த்த மாதிரி நடக்காது. அவ்வளோதானே! என்னவெல்லாம் நடக்கும் என்று யோசியுங்கள். எல்லோரும் ‘நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும், நேர்மறை என்னங்களை வளர்க்கவேண்டும்,’ என்று கூவிக் கொண்டிருக்கும் வேளையில், இவர் எதிர்மறையாய் ‘என்னவெல்லாம் தவறாகப் போகும்’ என்று எண்ணிப் பார்க்கச் சொல்கிறாரே என்று நீங்கள் யோசிக்கலாம். இது முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை. முதலில் எங்கெல்லாம் முள் குத்தலாம் என்று பார்க்கச் சொல்கிறேன். அப்புறம், முள் குத்தாமல் நடப்பதெப்படி என்று பார்த்து, பயங்கொள்ளாமல் நடக்கலாமென்கிறேன்.

இதெல்லாம் நடக்கும், அவ்ளோதானே! ‘அதற்கு, நான் தயார்!’ என்று சொல்லுங்கள். இதனால், என்ன ஆகுமோ, எது ஆகுமோ என்ற தேவையில்லாத ஒரு அச்சம் வந்து, ஆட்டுவிக்கப்பட்டு, எளிதாய் அடித்து ஆடவேண்டிய இடத்தில் கூட டக் அவுட் ஆகி வெளியேறுவது தவிர்க்கப் படும். இப்போது நேர்மறை எண்ணங்களை நோக்கி நகருங்கள்.

 

  1. ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!”

‘எல்லாம் தவறாய் போனால், கடைசியில் அதிக பட்சம் என்னவாகும்?’ என்று கேட்டு ;இவ்வளவுதானே, நான் தயார்!’ என்று தயாராகி விட்டீர்கள். இப்போது, ‘ஒரு வேலை எல்லாம் சரியாகப் போனால், என் திட்டம் நிறைவேறலாமே, அதற்கு முயற்சி செய்கிறேன்!’ என்று இறங்குங்கள்.

‘நடக்குமோ, நடக்காதோ!’ என்றில்லாமல், ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!’ என்று செயலில் இறங்குங்கள். உங்களை முழுதாய் கொடுங்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கொடுங்கள். இப்போது அச்சம் போய் ஆர்வம் வரும். உங்கள் சிந்திக்கும் முறையும், செயல்பாடும் மாறும். செய்யுங்கள். எல்லாம் மாறும்.

இது போதுமா?   வேறென்ன வேண்டும், அடுத்த வாரம்…

 

ப்ரியமுடன்,

பரமன் பச்சைமுத்து                                                                                                            (தொடரும்…)

நன்றி: எம்ப்ளாய்மென்ட் மாஸ்டர்

 

 

 

 

3 Comments

  1. nithyavenkatesh

    மிகவும் யதார்த்தமான உண்மைகளை அநாயசமாக கூறியிருக்கிறீர்கள்.நன்றி

    Reply
  2. Poornima Neethu

    Awesome!

    Reply
  3. Mahalakshmi Swaminathan

    Fantastic say!! Motivating 🙂

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *