‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ – அயலூர் சினிமா : பரமன் பச்சைமுத்து

wp-15971155886986028183038964818296.jpg

சில தெருக்கள், ஒரு சாப்பாட்டு கடை, ஒரு தையல்காரன், ஒரு குளத்தோடு கூடிய கோவில், கால்பந்து விளையாடும் இளசுகள் கொண்ட கேரளத்தின் சிற்றூரில் தனியே இருக்கும் வயதான தன் அப்பா பாஸ்கரனைப் பார்த்துக் கொள்ள தான் பணி புரியும் ஜப்பானிய கியோட்டோ டைனமிக்ஸ் நிறுனத்திலிருந்து ஒரு ரோபோவை கொண்டு வருகிறான் பொறிஞனான மகன்.

கேரள பாரம்பரியத்திலும் பழமையிலுமே ஊறிப் போன முதிய தந்தை தொடக்கத்தில் இயந்திர மனிதனை எதிர்த்தாலும், தேநீர் போட்டு உபசரிப்பது, நாட்டு நடப்பு செய்திகள் தருவது, கழிவறைக்கு செல்லக் கால் தாங்கலாகக் கூட்டிப்போவது என ஒத்தாசையாக இருக்கும் ரோபோவின் பால் இணக்கம் கொள்கிறார்.

ரோபோ, தொழில்நுட்பம், மெய்நிகர் அறிவு என எதையுமறிந்திரா அக்கிராமத்தின் மனிதனொருவன் ஒளிந்திருந்து இவ் வீட்டுக்குள் இருக்கும் ரோபோவை அரைகுறையாக பார்த்து ஊருக்குள் செய்தியைக் கசியவிட,
சமீபத்தில் இறந்து போன எப்போதும் ஹெல்மெட்டோடே திரியும்  குஞ்சப்பன்தான் அப்படியொரு புதுவடிவமெடுத்து வந்திருக்கிறான் என்ற முடிவில் ஊரே திரள்கிறது பாஸ்கரன் வீட்டு முன்னால்.

‘ஐ ஆம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.5’ என்று சொல்லி ஊரார் முன் வந்து நிற்கும் ரோபோவை, ‘ஏ குஞ்சப்பா!’ என்று அழைக்க, ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ ஆக நாமகரணம் பெறுகிறது ரோபா.   

அது ஓர் இயந்திரமென்று பிரஞ்ஞை கூட இல்லாமல் ஒரு பிள்ளையைப் போல நடத்தும் பாஸ்கரன்,
கோவில் குளத்திற்கு குளிக்கப் போனாலும் கூட தலை துவட்டிவிட  கூடவே ஆண்ட்ராய்டு குஞ்சப்பனையும் கூட்டிப் போகுமளவிற்கு ஒன்றிப் போகிறார்.

திடீரென்று ‘முனிசிபாலிட்டியிலிருந்து வருகிறோம். இந்த ரோபோவை வைத்திருக்க லைசென்ஸ் இருக்கா? ‘ என்று கேட்டு ஆண்ட்ராய்டு குஞ்சப்பனைத் தூக்கிப் போய் விடுகிறார்கள் அதிகாரிகள். ஜப்பானிய நிறுவனம் தங்கள் நாட்டுத் தூதரகத்தின் மூலம் இந்தியப் பிரதமருக்கு எழுதி, இந்தியப் பிரதமர் முனிசிபாலிடி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப, ஆண்ட்ராய்டு குஞ்சப்பனை விடுவித்துக் கொண்டு, ‘யாருகிட்ட… ம்ம்’ என்று பஞ்ச் பேசுகிறார்  பாஸ்கரன்.

‘அம்மணமாக இருக்கிறது ரோபா’ என்று அதற்கு கேரள முண்டு கட்டி விடுவதும், சட்டை தைத்துப் போடுவதும், அதற்கு நேரம் சரியில்லை என்று நினைத்து உள்ளூர் சோதிடரிடம் கூட்டிப் போவதும் கொஞ்சம் அதிக ரகளைதான் என்றாலும்,  முதியவரின் மனநிலையை உணர்த்தும் காட்சிகள் அவை.

அப்பாவிற்கு உதவியாக இருக்கட்டும் என்று வைத்த இயந்திரத்தோடு அப்பா ஒன்றி உருகுகிறார் என்ற புதுப் பிரச்சினை கிளம்ப, தன் ஜப்பானியக் காதலி ஹிட்டோமியோடு கேரளத்தில் வந்து குதிக்கிறார் மகன்.  அதன் பின்னே நடப்பதெல்லாம் சினிமாத்தனங்கள்.

குறைகள் உண்டென்றாலும், வித்தியாசமான களமொன்றை சிந்தித்து படம் பண்ணியதற்காகவே இந்த இயக்குனரைப் பாராட்டலாம். ரோபோ தொழில்நுட்பம் என பணத்தை வாரியிறைக்காமல், மிக எளிமையாக ஒரு படத்தைத் தந்திருக்கிறார்கள்.

முதியவர் பாஸ்கரன் பொடுவாலாக சூரஜ் வெஞ்சாரமூடு, எதை செய்தும் சமாளிக்க முடியாத அப்பாவை எப்படி சமாளிப்பது என தவிக்கும் மகனாக சோபின் ஷகிர் என நடிகர்களும் அசத்தியிருக்கிறார்கள். 

விழுந்து விடாமல் தாங்கிப் பிடிக்க கொண்டு வரப்பட்ட தொழில்நுட்பத்தில்,  விழுந்து விட்ட மனிதனை மீட்டுத் தாங்கிப்பிடிக்கும் மகனின் கதை – ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’.  ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், மொபைல் என தொழில்நுட்பங்கள் அனைத்தும் நமக்கு உதவவே, சிக்கிக் கொண்டு தவிக்க அல்ல என்ற படிப்பினையையும் உணர்த்துகிறது படம்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ – புதிய களம். பார்க்கலாம்.

: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *