‘குஞ்சன் சக்சேனா’ – “வழியெங்கும் சோதனைகளை கடந்தவள் வானுயர பறப்பாள்” – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

Gunjan-Saxena-App-608x800-e31068f6-8919-4341-813d-46399684c440

 

gunjan saxena

அயலூர் சினிமா : நெட்ஃபிளிக்ஸ்

“வழியெங்கும் சோதனைகளை கடந்தவள் வானுயர பறப்பாள்”

பெண் பிள்ளை என்றால் இவ்வளதுதான் இதுதான் படிக்கவேண்டும், திருமணம் பண்ணிக்கொண்டு சீவிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்தின் விமானம் ஓட்ட ஆசைப்படும் சிறுமி, ‘பெண் பிள்ளைகள் விமானம் ஓட்டுவதா!’ என்று எதிர் நிலையில் நிற்கும் குடும்பம் சமூகம் பொருளாதாரம் என எல்லாவற்றிக்கு எதிராகவும்   ஒவ்வொரு நிலையிலும் போராடி மூச்சைப் பிடித்துக் கொண்டு முன்னேறி இந்திய தேசிய விமானப் படையில் நுழைகிறாள்.

‘கொடுமை கொடுமை’ என்று போராடி ஓடி வந்து விமானப் படையில் நுழைந்தால், அங்கே அதை விட பெரிய கொடுமைகள் ‘ஜிங்கு ஜிங்கு’ என்று ஆடுகின்றன என்றால் என்ன செய்வாள் உலகத்தை இன்னும் பார்க்காத, கனவுகளை மட்டுமே கொண்ட அந்த இளம்பெண், அப்புறம் இந்திய பாகிஸ்தான் கார்கில் போரில் தேசத்திற்கு உதவும் அளவிற்கு எப்படி உயர்ந்தாளவள் என்பனவற்றை உணர்ச்சிகள் ஊற்றி பிசைந்து திரைக்கதை கட்டித் தந்தால் – ‘குஞ்சன் சக்சேனா’!

இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானி குஞ்சன் சக்சேனா, முதன் முதலில் அவர் பணியில் சேர்ந்தபோது அங்கு பெண்களுக்கான உடை மாற்றும் அறையும் கழிப்பறைகளும் இருக்கவில்லை போன்ற உண்மைத் தகவல்களின் அடிப்படையில்தான் பின்னியிருக்கிறார்கள் என்றாலும், பல இடங்களில் விமானப்படை அதிகாரிகள் இப்படி எல்லாமா நடந்து கொள்ளுவார்கள் என்ற எண்ணம் எழாமலில்லை. ‘நாயக பிம்பத்திற்காக உண்மைக்கு மாறான நிகழ்வுகளை வைத்து படம் பண்ணியிருக்கிறார்கள்’ என்று இந்திய விமானப் படை அதிகாரியொருவர்  இந்தப் படத்தின் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டே நம் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.

நல்ல சரியான கதையில் நடித்ததன் மூலம் தப்பித்துவிட்டார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். உடலை கூட்டி குறைத்து வேண்டியதை தந்திருக்கிறார் ஜான்வி. படம் நெடுகவும் முன்னேறத்துடிக்கும் பெண் என்பதோடு, அவளுக்கு எப்போதும் துணை நிற்கும் பாத்திரம் தந்தை என்ற இழையை ஓட விட்டிருக்கிறார்கள். தந்தையாக செய்திருக்கும் பங்கஜ் திரிபாதி மிக அழகாக செய்திருக்கிறார்.

‘தாங்கள் ஆண்கள், பெண்கள் தங்களுக்கு சமமாக உட்காருவதைக் கூட எங்களால் ஏற்க முடியாது!’ என்று ‘ஆண் செருக்கு’ கொண்டு திரியும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட உலகில், ‘ஒரு பெண் உயர்வதை ஏன் தடுக்கவேண்டும்? பெண் உயர்வது எப்படி ஆணின் உயரத்தைத் தடுக்கும்? இருவரும் உயர்வது கூடுதல் பலம்தானே!’ என்று கருத்தை சொல்லி உயர்ந்து நிற்கிறாள் குஞ்சன் சக்சேனா.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட் :  ‘குஞ்சன் சக்சேனா’ – ‘வழியெங்கும் சோதனைகளை கடந்தவள் வானுயர பறப்பாள்’.   பார்க்கலாம்.

 

  • திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *