சில நூல்களை இன்று நம்மால் உள்வாங்க முடிவதில்லை, அவ்வளவே!

கேள்வி: ஒரு நூலை வாசிக்கத் தொடங்கினேன். எவ்வளவு முயன்றாலும் என்னால் சில பக்கங்களைத் தாண்டிப் போகவே முடியவில்லை. நீங்கள் பாட்டுக்கு அடுத்து அடுத்து என்று இத்தனை நூல்களை வாசித்துத் தள்ளுகிறீர்களே!

பரமன்: ஐயா, நான் வாசிப்பது மிக குறைவு ஐயா. வகுப்புகள் எடுப்பது, பத்திரிக்கை வேலை என முக்கிய பெரிய வேலைகளை முடித்தவுடன் கொண்டாடுவதற்கு நான் தேர்ந்தெடுப்பவை பயணம், திரைப்படம் அல்லது நூல் வாசிப்பு.

பயணங்கள் இல்லாத தீ நுண்மி காலமானதால் நூலில் தஞ்சமடைவது இயல்பாகவே நடக்கிறது. அமேசான் நெட்ஃபிலிக்ஸ் வழியாக திரைப்படங்கள் பார்ப்பதும் நடந்தேறவே செய்கிறது.

உங்கள் பிரச்சினைக்கு வருகிறேன்.  இது உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் இருப்பதுவே. சிலர் இதைக் கடக்கத் தெரிந்து கொள்ளுகிறார்கள்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் வெண்முரசு முதற்பாகம் முதற்கனல் வாங்கினேன். ஆவலாக பிரித்துப் படித்தேன்.

‘வேசர தேசத்தில் கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றி வைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரே மகன் ஆஸ்திகனை மடியில் அமர வைத்து கதை சொல்ல ஆரம்பித்தாள்’  இப்படி அட்டகாசமாகத் தொடங்கும் அந்நூலை சில பக்கங்களுக்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. பெரிய முயற்சி தேவைப்பட்டது உள்வாங்குவதற்கு. மூடி வைத்து விட்டு வண்ணதாசனை எடுத்தேன். மூழ்குதல் இயல்பாக நடந்தது.

திரும்பவும் முதற்கனல். மானசா தேவி.. கூடுதலாக சில பக்கங்கள். மூடி வைத்து விட்டு தி. ஜானகிராமன் எடுத்தேன். ஆழ்ந்து பயணிக்க முடிந்தது.

ஆண்டுகள் கடந்து விட்டன.
நானும் யாமம், வேள்பாரி மீள் வாசிப்பு, ஜெயகாந்தன், வைரமுத்து சிறுகதைகள், இடக்கை, அறம், ரா கி ரங்கராஜனின் தாரகை, சுந்தர ராமசாமி, வீரபாண்டியன் மனைவி, சுஜாதா தூண்டில் கதைகள், ஜெயமோகன் குறு நாவல்கள், வண்ணதாசன் கலைக்க முடியா ஒப்பனைகள், இவர்கள் நோக்கில் கம்பன், பொன்னியின் செல்வன் மீள் வாசிப்பு, வைரமுத்து தமிழாற்றுப்படை, எஸ்ராவின் சஞ்சாரம் என நூல்களோடு பயணித்து விட்டேன். இவற்றின் ஒவ்வொன்றின் இடையேயும் முதற்கனலை தொட்டுவிட்டே வருகிறேன். இதோ சாயாவனம் நோக்கித் திரும்புகிறேன். ஆனால் முதற்கனலோடு ஒரு நிலைக்கு மேல் பயணிக்க முடியவில்லை.

அதே ஜெயமோகனின் ‘அறம்’ என்னை வேறோர் உலகத்திற்குக் கொண்டு போனது. அவரது குறுநாவல்களும், ‘முகங்களின் தேசம்’ நூலும் என்னை துளிர்க்க வைத்தன. முதற்கனலோடு பயணிக்க முடியவில்லை. ஜெயமோகனின் வாசகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் வெண்முரசு பாகங்களை.  நான் இன்னும் அதைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வரவில்லை போல.

சில நூல்களை நம்மால் உள்வாங்க முடிவதில்லை. இன்று முடியவில்லை, அவ்வளவே. நாளை நடக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு ஒரு வெளிநாட்டுப் பயணத்தின் போது என்னை பெங்களூரு விமானநிலையத்தில் வழியனுப்ப வந்த என் நண்பர் முகுந்தன் விமானத்தில் படிக்க என்று அங்கிருந்த கடையிலிருந்து ஸிட்னி ஷெல்டனின் ‘ப்ளட் லைன்’னை வாங்கித் தந்தார். முதல் சில அத்தியாயங்கள் இப்படி ஒன்ற முடியாமல் திணறினேன். இரண்டு அத்தியாயங்களைக் கடந்த போது பிடிபட்டது.   உங்களுக்கும் அது நடக்கலாம். எனக்கும் முதற்கனலில் அது நடக்கலாம்.

வாசிப்பைத் தொடர்வோம்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
30.08.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *