சாயாவனம் – சா கந்தசாமி : காலச்சுவடு பதிப்பகம்

பிழைப்புக்காக பிறந்த ஊரை விட்டு இலங்கையின் மலையகத்துத் தேயிலை தோட்டத்துக்கு சிறுபிள்ளையோடு ஓடி வந்த தாய் அம்மை வார்த்து குளிர்ந்து (இறந்து) போய் விட, அன்னையின் சவத்தையே பார்த்தபடி நிற்கும் சிறுவன் சிதம்பரத்தை கருப்பு உபதேசியார் சர்ச்சுக்கு அழைத்துப் போகிறார். அவனன்னை கோதிவிட்ட நீண்ட சிகை சிரைக்கப்பட்டு வெள்ளைப் பாதிரியாரிடம் ஞானஸ்தானம் பெற்று டேவிட் சிதம்பரமாக ஆகிறானவன். பள்ளிக்குக் போகிறான். ஒரு வீட்டில் வேலைக்கமர்த்தப்படுகிறான். அங்கிருந்து பத்து ரூபாயைத் திருடிக் கொண்டு கொழும்புக்கு ஓடி வந்து சிவசண்முகத்தின் பாத்திரக்கடையில் வேலை செய்கிறான். ‘அது எதுக்கு டேவிட்டு, சிதம்பரம்தான் உம்பேரு. அந்தால மாடத்தில இருக்க திருநீற அள்ளி நெத்தியில பூசு’ என்னும் முதலாளியோடு கதிர்காமம் போய் வருகிறான்.

காவிரிக்கரையில் மாயவரத்திற்குப் (இப்போது அது மயிலாடுதுறை)  பக்கத்திலிருக்கும், தன் அன்னை வாழ்ந்ததும் தனது பிறந்த ஊருமான சிற்றூருக்கு வருகிறான். அந்த சிற்றூரின் இயல்புக்கு அந்நியமான முறையில் அவன் இறங்கிச் செய்யும் காரியத்தை படமாக விரித்துக் காட்டுகிறது ‘சாயாவனம்’.

இப்படி ஒரு நூற்றாண்டு காலத் தோட்டம் இருந்தது, அதில் இந்த மரம் செடி கொடிகள் இருந்தன, அவ்வூரில் இப்படியான மனிதர்கள் இருந்தார்கள், இப்படியொருவன் வந்தான், அப்புறம் இதெல்லாம் நடந்தது. கடைசியில் கோயில்வாசலில் பட்டுப்புடவையை பிழிந்து கொண்டே ஆச்சி இப்படி சொன்னாள் என்று கதையை வரிகளால் பதிவு செய்து விட்டு, போகிற போக்கில் வரிகளுக்கிடையில் சுரீரென்று சூழலியல் பற்றி உணர்வை நிரப்பி விடுகிறார் நூலாசிரியர் சா. கந்தசாமி. இயற்கையையும் சூழலியலையும் இப்படிச் சொல்லமல் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறார்.  அதுவும் 1969ல் இப்படியொரு படைப்பு.

மேலே பறக்கும் மடையான், கொக்கு, செம்போத்து, காலைக் கீறும் நாயுறுவி, எதிர்த்து நிற்கும் காரை, ஆடாதொடை, தாழங்குத்து, ஓணான் கொடி, நுணா, மூங்கில் குத்து, இலுப்பை, பனை, காத்தவராயன் மாடு, பாம்புகள், தேனடை, துரத்தித் தாக்கும் தேனீக்கள், பிரப்பங்காடு, முயல்கள், ஊளையிடும் குறுக்கே ஓடும் நரிகள், காக்கைகள் நிறைந்த  காவிரிக்கரை சாயாவனத்தின் அந்தத் தோட்டம் நாவலின் ஒரு முக்கியப் பாத்திரமாகவே படைக்கப் பட்டிருக்கிறது. 

தொழில் உள்ளே நுழையும் போது அதன் பற்சக்கரத்தில் விவசாயம் எப்படி அடிபட்டு உயிர் துறக்கிறது என்பதை பதிவு செய்கிறது நாவல். 

1969ல் ‘காசு வேண்டாம், எங்களால இதை மாத்த முடியல. கூலியா நெல்லு குடுங்க!’ என்று வேலைக்கு பண்டம் கேட்கும் ஆசாரியாரும், ‘இந்த நெல்லை வச்சிட்டு புளி குடு, வெல்லம் கொடு’ என்று கடையில் நிற்கும் ஆச்சியும் கால மாற்றம் பண பரிமாற்றம் தொடங்கும் நிலையில் நிற்கிறார்கள்.  மணக்குடியில் சிறுவனாக வீட்டின் முன்பு விளையாடிய காலங்களில் வீதியில், ‘ரூபாய்க்கு ரெண்டு படி, நெல்லுக்கு மூணு படி உப்பே!’ என்று கத்திக் கொண்டே சைக்கிளில்  உப்பு விற்ற உப்புக்காரர் நினைவுக்கு வருகிறார். சாம்பமூர்த்தி ஐயர், சிவனாண்டித் தேவர், அவர்கள் பயன்படுத்தும் ‘விசுப்பலகை’ போன்ற வார்த்தைகள் நம் தாத்தா பாட்டிகளை அவர்கள் காலத்து மனிதர்களை நினைவில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது.

போய்க்கொண்டே இருக்கும் நாவல் திடீரென முடிகிறது. சட்டென முடிந்தாலும் அது உருவாக்கும் பாதிப்பு ஆழமானது.

நம் கண் முன்னே காலம் மாறிக் கொண்டிருக்கிறது, வாழ்வு முறை மாறிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் போல வெற்றி வெறியர்களால் பூமி கொத்திக் கிளறப்படுகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் வாழ்வை தாக்குகிறது. பல நேரங்களில் நாமே வெளியூரிலிருந்து வந்த சிதம்பரமாக மாறி வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்தியப் பணம், அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, பிட் காயின் என்று பரிவர்த்தனைகளுக்கு மாறிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் 1969ல் எழுதிய நாவல் விவாசாயம் – தொழில் உற்பத்தி –  சூழலியல் பற்றி பொளேர் என்று அறைந்து சொல்கிறது.

பழைய படி மாட்டு வண்டியில் போக முடியாது, ஆறுகளைக் கடக்க பாலம் வேண்டும், மின்சாரம் வேண்டும், அபிவிருத்தி திட்டங்கள் வேண்டும்தான். ஆனாலும் சூழல் பற்றிய சிந்தனையும் வேண்டும்தானே.

அரசமைப்பின் உச்ச பொறுப்பிற்கு வரும் தலைவர்கள், திட்டங்களை அறிவிக்கும் தலைவர்கள் இந்நாவலை சில முறையாவது ஆழ்ந்து படித்து உள்வாங்கினால், வேறொரு கோணத்தையும் பார்ப்பார்கள், அது மக்களுக்கும் இந்த மண்ணிற்கும் பயனளிக்கும் என்பது என் எண்ணம்.

‘சாயாவனம்’ – சா. கந்தசாமி – காலச்சுவடு பதிப்பகம்

– பரமன் பச்சைமுத்து
06.09.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *