சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை.

எல்லாக் காலங்களிலும் சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை.

மணக்குடிக்கு வந்த உடனேயே, பாப்பாக்குளத்தில் தண்ணீர் இருக்கிறதா என பார்க்க வந்தேன். தூர் வாரப்பட்டதில் தாமரைக் கொடிகள் இன்றி,  வீராணத்திலிருந்து வந்த புது நீரால் நிறைந்திருக்கிறது குளம்.
‘இந்த வெய்யில்ல ஏம்ப்பா, போற!’ என்ற மீன்கொத்தியார் வீட்டக்காவின் குரலைத் தாண்டி படித்துறைக்குப் போனால், இரண்டு தூண்டிகளோடு மூன்று வாண்டுகள் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன பேச்சு கொடுத்தாலும் தூண்டிலின் தக்கையிலேயே குத்தி நிற்கிறது அவர்களின் கண்கள். கொளுத்தும் வெய்யில் தோலைச் சுட்டு உள்ளே இறங்குகிறது. சட்டையணியாத அவர்கள் சட்டையே செய்யவில்லை வெய்யிலை.

‘டேய்… ஏண்டா, இந்த வெய்யில்ல ஏண்டா இப்படி பண்றீங்க?’

நாம் சிறுவர்களாக இருந்த போது நம் பாட்டிகள் சொன்ன அதே வாக்கியத்தை, அச் சிறுவர்களின் வீட்டிலிருந்து யாரோ உரக்கக் கூவுகிறார்கள்.  வெய்யிலைப் போலவே அதையும் சிறுவர்கள் சட்டை செய்ய வில்லை.

எல்லாக் காலங்களிலும் சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை.

– பரமன் பச்சைமுத்து
கீழ மணக்குடி
27.09.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *