கொரோனா : ட்ரம்புக்கு புது மருந்து

அமெரிக்க மருத்துவர்கள் உறுதி செய்யாத போதும், ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன்’தான் கொரோனாவிற்கான மருந்து, இந்தியப் பிரதமரை அழைத்து உடனடியாக அந்த மருந்தை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பெரும் ஒலி எழுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாய் கோவிட் தீ நுண்மி தொற்றால் செத்து வீழ்ந்தபோதும், ‘சீட் பெல்ட்டா… அதெல்லாம் நான் போட மாட்டேன்!’ என்னும் நம்மூர் இறுமாப்பு ஆசாமிகளைப் போல  ‘மாஸ்க்கா அதெல்லாம் எதுக்கு, நான் போட மாட்டேன்!’ என்று ‘கோட்’டை மூடிக்கொண்டு முகத்தைத் திறந்து கொண்டு திரிந்தார்.

‘ஹைட்ராக்ஸிக்ளோரோகுயீன்’ கொரோனாவிற்கான மருந்து அல்ல என்று அமெரிக்க மருத்துவர்கள் வாரியம் அறிவித்தபோது, ‘அவங்களுக்கு ஒண்ணும் தெரியல! நானே சாப்டேன் இந்த மருந்தைதான்!’ என்று பதைக்க வைத்தார்.  உலகம் முழுக்க மக்கள் ‘ஹைட்ராக்ஸிக்ளோரோகுயீன்’ மருந்தை மொத்தமாய் வாங்கிக் குவித்து சந்தையில் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டதுதான் மிச்சம். இந்தியாவில் தோல் மருத்துவர்கள் பொதுவாக பரிந்துரைக்கும் மருந்து அது என்பது உபரிச்செய்தி. 

சில மாதங்களுக்குப் பிறகு இப்போது ட்ரம்புக்கு கொரோனா தொற்று வந்து அது உறுதியும் செய்யப்பட, ‘ஐய்ய்யோ, நெஜமாலுமே வந்துருச்சா..!’ என்று சொல்லும் நிலையில் கலையாத டை கோட் சூட்டோடு சென்று மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். இருமுறை ஆக்ஸிஜன் தந்தார்கள் என்கின்றன செய்திகள்.

டொனால்ட் ட்ரம்புக்கு ‘ரீஜென் – கோவ்2’ (REGN – COV2) என்ற புது மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. ட்ரம்புக்கு ஊசி வழியே செலுத்தப்பட்ட இந்த மருந்து இரண்டு எதிரணு மருந்துகள் உள்ளதால் இது வீரியமுள்ளது என்கிறார்கள்.

அமெரிக்க அதிபருக்கே இது செலுத்தப்பட்டுள்ளதால், இது கொரோனா மருந்தாக அறிவிக்கப்படலாம் என்று பட்சி சொல்கின்றன ஊடகங்கள்.

இரண்டு சங்கதிகள் தெரிகின்றன.
ஒன்று – ‘ரீஜென் – கோவ்2’ மருந்தை தயாரித்த ‘ரீஜெனிரான் ஃபார்மாசூட்டிகள்ஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை திடீரென உயர்ந்து விட்டது. இரண்டு – ‘ஏய் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின்… ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின்.. அதான் கொரோனா மருந்து!’ என்று கூவிக் கொண்டிருந்த ட்ரம்புக்கே கொரோனா வந்த போது அந்த மருந்து தரப்படவில்லை.

– பரமன் பச்சைமுத்து
08.10.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *