‘முதற்கனல்’ – வெண்முரசு – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து

wp-16029283386754784143118184582684.jpg

நூலைப் பற்றிப் பேசுவதற்கு முன் ஒரு பெரும்வியப்பை முதலில் வெளிப்படுத்திவிடுவோம். 2014ல் தொடங்கி 7 ஆண்டுகளில் 26 பாகங்களாக 25,000 பக்கங்களில் தமிழின் ஒரு பெரும் நாவலை (உலகின் பெருநாவல்களில் ஒன்று என்கிறார்கள், சரியாகத் தெரியவில்லை நமக்கு) வடித்துத் தள்ளியிருக்கும் நூலாசிரியர் ஜெயமோகனை எண்ணுகையில், ‘ஒரு பாகத்தை சரியாக ஆழ்ந்து வாசித்து முடிக்கவே இவ்வளவு நாள்களாகிறதே நமக்கு, 26 பாகங்களை எழுதியிருக்கிறாரே மனுஷன்!’ என்ற வியப்போடு, ‘அவர் ஓர் எழுதும் இயந்திரமாகத்தான் இருக்கவேண்டும்!’ என்று முணுமுணுக்கிறது வாய்.

தெருக்கூத்து, வாய்வழி, இசை, நாடகம், நூல்கள், கோவில் அரங்கங்கள், இலக்கியப் பொழிவுகள் என பல வடிவங்களிலும்
இந்த நாடு முழுவதிலும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்த மகாபாரதக் கதைகளை ஒரு கயிற்றில் கோர்த்து ஒரே பெருங்கதையாக  வடித்து ‘வெண்முரசு’ மாலையாக வனைத்துத் தந்திருக்கிறார் ஜெயமோகன். 

‘தாட்சாயிணி… சரி… போ!’ ‘ஸ்வாமி போய் வா என்று சொல்லுங்களேன்’ ‘என்னை அவமதிப்பதற்காக யாகம் செய்கிறான் தட்சன். பிறந்த வீட்டு பாசம் உன் கண்ணை மறைக்கிறது’ வகை ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் வழியே கையிலை ஈசனின் மனைவி சதி தாட்சாயிணியை அறிந்தவர்கள், இந்நூலில் ஆழ்ந்து அமிழ்ந்து திளைப்பார்கள்.  தாட்சாயிணி மட்டுமல்ல; பால்ஹிகன், அம்பை, அம்பாலிகை, அம்பிகை, பிரதீபன், சிகண்டி, தேவவிரதன், சத்யவதி என  நாம் சட்டெனக் கடந்து போன கதாபாத்திரங்களை அகழ்ந்து தோண்டி செதுக்கிப் புனைந்திருக்கிறது நூல்.

இந்த நூலை ஆழ்ந்து வாசிக்கும் நாட்களில் உங்கள் கனவுகளில் நாகங்கள் நெளியலாம் என்றால் மிகையில்லை.

இதுவரையில் நமக்குச் சொல்லப்பட்ட நாமறிந்த கதைவடிவங்களில் காசிதேசத்து மூத்த இளவரசி அம்பையே தவமியற்றி மாலை பெற்று தீக்குளித்து, வரும் பிறவியில் சிகண்டியாக பிறந்தாள் என்று வர, காட்டுப் பன்றியின் முலையில் பன்றிக்குட்டிகளோடு வாய் வைத்துப் பால் குடித்த, பன்றிகளின் குணம் பெற்ற குழந்தையொன்று பித்தியான அம்பையிடம் சேர்ந்து அது சிகண்டியாக உருபெற்றது என்கிறது இந்நூல்.  இது பற்றி நிறைய விவரங்கள் தெரியவில்லை நமக்கு. நிச்சயம் உறுதி செய்யப்பட்டதைக் கொண்டே எழுதியிருப்பார் என்று நம்புகிறோம்.

சத்தியவதி, சந்தனு பற்றிய பக்கங்கள் யமுனைக்குள் நம்மை கொண்டு போய் விடுவதோடு,  யமுனை நதிக்குப் போக வேண்டும் என்ற ஆர்வத்தையும் கிளப்பிவிடுகிறது.

பாரதக்கதையில் சோழர்களும் பாண்டியர்களும் இருந்த காலம், பாகிஸ்தான் ( சிபி நாடு) என்னவாகப் பார்க்கப்பட்டன என்பனவற்றை பாத்திரங்கள் வழியே அறியும் போது விரிகின்றன விழிகள்.

ஆற்றிடைக்குறை, அவுணர், இயக்கன், இளிவரல், புடவி, மடம்பு, உழத்தி, வடவை, வாளி, வினைவலர் என அழகு தமிழ் பதங்கள் கொண்ட நீள் வரிகளில் விரிகிறது நாவல் என்பது சிறப்பு.

மகாபாரதப் போரின் தோற்றுவாயாக உள்ள கதை முடிச்சை அவிழ்த்து ‘முதற்கனல்’ என்று சொல்லியுள்ள வெண்முரசு நாவல் வரிசையின் முதல் நூல் ‘முதற்கனல்’. வருங்காலத்தில் கொண்டாடப்படும் இந்நூல். 

முதற்கனல் – நீள் வாசிப்பு, ஓர் அனுபவம்

– பரமன் பச்சைமுத்து
17.10.2020

#JeMo
#JeyaMohan
#Venmurasu
#Mutharkanal

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *