பாஜக தேர்தல் கணக்கு

சென்னை வந்த போது முதல்வர் வரவேற்க, திரும்பிப் போகும் போது துணை முதல்வர் வழியனுப்ப என்று நிகழ்ந்த அமித்ஷாவின் தமிழக வருகை இரண்டு சங்கதிகளை வெளிப்படையாக செய்துள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அதிமுக தங்கள் வசதிக்கு பாஜகவை நடத்த முடியாது. ‘திமுக எதிரி பாஜக’ என்று நிலையை தொடங்கி வைத்தாயிற்று எதிர்காலக் கணக்கை குறிவைத்து.

ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக 500 பேருக்கு பொறுப்பு என்று பேச்சு அடிபடுகிறதாம். அதிமுக, திமுக என பல ஆண்டுகளாக கட்சியில் இருந்து பொறுப்புகள் இல்லாமல் இருப்பவர்களை குறிவைத்து இழுப்பது கொஞ்சம் நாளாகவே நடக்கிறது. கு க செல்வம், முத்துராமலிங்கம், குஷ்பூ போன்றார் மேல்மட்டத்தில் இருப்பதால் வெளியில் தெரிகின்றனர். கீழ்மட்டத்தில் அமமுகவிலிருந்து நிறைய பேர் இணைந்ததாக தகவல் வருகின்றன.

திருச்சியில் தொடங்கப் பட்டுள்ள ‘தெய்வீகத் தமிழ் சங்கம்’ நேரடியாக வீடுகளை நோக்கி நகர்ந்து பெண்களிடம், ‘விளக்கேற்றுங்கள், பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று வாருங்கள். லட்சுமி கடாட்சம் வரட்டும். வீட்டில் விளக்கேற்றுங்கள். திராவிடக் கட்சிகளால் நாசமாக்கப் பட்ட நம் கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்’ என்று பெரும் குழுக்களாக இயங்குகிறார்கள்.

சாதீயம் கொண்டு இயங்குபவர்களை மதம் சார்ந்தது நகர்த்தும் முயற்சி அடிமட்டத்தில் நடக்கிறது. தேனீ மாவட்டத்தின் பட்டியலின மக்கள் வாழும் கெங்குவார்பட்டி, எண்டபுலிப்பட்டி போன்ற ஊர்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பாஜகவில் இணைந்திருப்பது ஓர் உதாரணம்.

வெளியில் ‘வேல் யாத்திரை’யை தடுக்கவேண்டும் என்று நேரடியாகவும், நக்கல் செய்து மீம்ஸ் வழியாகவும் பேசும் தமிழக கட்சிகள் இதை அறியாமல் இல்லை.
திமுகவை நேரடி எதிரி, திமுக இந்துக்களின் எதிரி என்று தாக்கி பாஜக இறங்குவதால், இனி பகுத்தறிவு கொள்கைகளை திமுக கொஞ்சம் தூரமாக வைக்க அதிக வாய்ப்புள்ளது. தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் உதயநிதி ஸ்டாலின் நேராக ஆதீனத்தின் காலில் விழுந்து ஆசி பெற்று, ஆதீனம் நெற்றியில் ‘விபூதி பூசி விட’ அதை ஏற்றுக் கொள்வதும் என நடக்கும் சம்பவங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் வேல் யாத்திரை, இந்து பாதுகாப்பு என்று இறங்கும் பாஜகாவின் வெற்றியாகவே இதைப் பார்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

‘வேல் யாத்திரையால் ஒன்றும் நிகழப் போவதில்லை’ என்று கிண்டலடித்த தமிழக காங்கிரஸ் ‘ஏர் கலப்பை யாத்திரை’யை அறிவித்திருப்பதை கவனத்தில் கொள்ளவும்.

பாஜகவின் இந்த செயல்பாடுகளால் பாமக, விசிக, மதிமுக தேமுதிக போன்ற கட்சிகள் கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும், பொதுவெளியில் அவர்கள் மறுத்தாலும் கட்சிகளின் நிர்வாகிகளிடம் பேசும்போது இது வெளிப்படுவதாகவும் அப்படியே குறிப்பட்டு நடுப்பக்க கட்டுரை வெளியிட்டிருகிறது இந்து தமிழ் நாளிதழ். (நாளை மறுப்புகள் வெளியாகலாம்!)

‘கூட்டணிக் கணக்குகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். அடிமட்டத்திலிருந்து கட்சியை கட்டியெழுப்பும் வேலையை நீங்கள் பாருங்கள்’ என்று நிர்வாகிகளிடம் சொன்னாராம் பாஜக.

‘அமித்ஷாவின் தமிழக பயணம் தோல்வி!’ என்று விகடன் கட்டுரை வெளியிட்டிருக்கும் அதே நேரத்தில் ‘மூன்றாம் இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: பாஜகவின் தேர்தல் கணக்கு’ என்று பெரிய நடுப்பக்கக் கட்டுரை வெளியிட்டு அமித்ஷாவின் பயணம் வெற்றி என்று சொல்கிறது இந்து தமிழ். (இந்து – இது போன்ற கட்டுரைகளை வெளியிடாத வண்ணம் கொண்டது என்பதை நினைவில் கொள்வோம்)

என் நண்பர்கள் செந்தில்ராஜ், முத்துவேல் ரகுபதி போன்றார் இந்தக் கட்டுரைக்காக என் மீது பாஜகவின் வண்ணத்தை பீய்ச்சி ஊற்றி அடிப்பர். இருப்பினும் சொல்ல விரும்புவது… வரும் தேர்தலில் சாம – தான – பேத – தண்டம் என எல்லா வழிகளையும் பயன்படுத்தி கணிசமான தொகுதியை பெற்றுவிடும் பாஜக, மூன்றாவது கட்சியாக வருவதற்கு முயற்சி செய்வார்கள் என்று தோன்றுகிறது.

அவர்களது குறி 2026. 2026 நோக்கி 2021.

தேர்தல் வரட்டும், அதற்குள் ஆயிரம் நடக்கும்! பார்ப்போம்!

– மணக்குடி மண்டு
25.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *