சில மனிதர்கள்…

‘இந்நேரம் பாடத் தொடங்கியிருப்பார்…!’ அதிகாலை நீராடி வேட்டியுடுத்தும் போதே அப்பா நினைவுதான்.

மார்கழி என்றால், ஊரை எழுப்பும் மணக்குடியின் சேவலையே அப்பாவின் பதிகம்தான் எழுப்பும்.

ஐந்து மணிக்கு முன்னேயே ஆர்மோனியத்தின் இசையும் அப்பாவின்  ‘போற்றியென் வாழ் முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…’ பாடலும் மணக்குடியின் வெளியில் நிறையும்.

ஐந்தரை மணி பேருந்துக்கு நிற்பவர்கள், அருகிலுள்ள டீக்கடை திண்ணையில் குளிருக்கு குத்துக்கால் இட்டு அமர்ந்தவர்கள், முக்கூட்டின் வழியே போவோர் என எல்லோர் செவிகளிலும் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் நிறையும். பாடல்கள் புரியாதவர்களும் ‘வாத்தியாரு பாடறாரு!’ என்று நிறைவாய் மகிழ்ந்து புன்னகைப்பார்கள்.

நினைவுகளை உதறிவிட்டு தவப்பயிற்சியில் அமர்கிறேன். எழுந்ததும் பார்க்கிறேன், மணக்குடியிலிருந்து வாட்ஸ்ஆப்பில் வருந்தியிருக்கிறான் ஒரு தம்பி, ‘அண்ணா… பெரியப்பா பாட்டு இல்ல இந்த முக்கூட்டுல மார்கழி காலையில!’ என்று.

சில மனிதர்களின் இழப்பு ஒரு நாளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. சில மனிதர்கள் தாங்கள் இல்லாத இழப்பை, ஒருவரில்லை ஊரே உணர்வது போல வாழ்ந்து விட்டுப் போகிறார்கள்.

– பரமன் பச்சைமுத்து
மார்கழி 1.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *