சில கணங்கள் கிடைக்கப்பெற்றாலும்…

‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.  என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள். 

பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா – டோக்கியோ என சுற்றிவிட்டு திரும்பவும் புலம்பெயர்ந்து வந்தபோது அறிந்த  சென்னையின் உலகமும் வேறு வேறு.

அந்த உலகத்தில் அவ்வப்போது போய் வருவதற்கும், என்னைக் கைபிடித்துக் கூட்டிப் போனதிலும் முதன்மையானவர் ஏஆர்கே.  கார்த்திக் ஃபைன் ஆர்ட்டின் டிசம்பர் சீசன் கலை விழாக்களின் டிக்கெட்டுகள் எப்போதும் ஏஆர்கேவிடம் இருக்கும்.

‘பரமன், இன்னைக்கு ஏதும் கிளாஸ் இல்லியே உனக்கு, சாய்ந்திரம் பாரதீய வித்யா பவன்ல அலர்மேல் வள்ளி நாட்டியம் இருக்கு. வாயேன்!’. இப்படித்தான் அழைத்துப் போவார். ஏனோ மறுக்க எண்ணம் வராது சிலரிடம்.

பந்தநல்லூர் பாணி, ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ, பரத நுண்கலை ஆராய்ச்சி மையம் என படித்து தெரிந்திருந்த அலர்மேல் வள்ளியை நேரடியாகப் பார்க்கும் அனுபவம் கொடுத்துவிடுவார்.

திரைச் சீலை  விலக, அதற்கு முன்பே பக்க வாட்டிலிருந்து வாய்ப்பாட்டும் வாத்தியங்களும் ஒலிக்க, ‘ஜில்… ஜில்…’ என சலங்கை கால்கள் ஒலியெழுப்ப, மஞ்சள் விளக்குகள் திடீரென்று உயிர் பெற்று ஓரிடத்தில் குவியம் பெற… தலைநிறைய மல்லிகைப்பூவோடு வெண்பட்டு நாட்டிய உடையுடுத்தி, உள்ளங்கைகளில் மருதாணியோடும், நெற்றியில் ஆண்டாள் மாதிரி (சரி, ஜெயலலிதா மாதிரி) நீண்ட கோடான திலகத்தோடும்,  உதட்டில் புன்னகையோடும் அலர்மேல் வள்ளி நிற்பார். ரஜினி படத்தின் பூசணிக்காய் உடைக்கும் முதல் அறிமுகக் காட்சி போல, ஆனால் ஒருவரும் கை தட்ட மாட்டார்கள். ‘என்ன தவம் செய்தனை யசோதா!’ பாடல் ஒலிக்க, கால்கள் சுற்றிச் சுழல பின்ன, உடல் சில கணங்கள் பம்பரமாக சுழல சில கணங்கள் சினிமாவின் ஸ்லோ மோஷன் காட்சி போல மெதுவாக இயங்க, சில இடங்களில் ஒற்றைக்கால் சிலையாக என மேடையில் இயங்கி முடிப்பார். கைதட்டல் தொடங்கும், மேடையில் விளக்குகள் அணையும். உள்ளே ஓடி விடுவார், அடுத்த பாட்டிற்குத் தயாராவதற்கு. ‘ஒரு கைதட்டலைக் கூட நின்னு வாங்கிட்டு போமாட்டியாம்மா!’ என்று கேட்கத்தோனும்.

சில நாள் வைஜந்திமாலா, பத்மா சுப்ரமணியம் என்று இன்ப அதிர்ச்சிகள் கிடைக்கும். ‘இந்த வயசில எப்படி இந்தம்மா இப்படி சுத்துது, கால்ல பேலன்ஸ் பண்ணுது! அடேயப்பா!’ என்று பத்மா சுப்ரமணியத்தின் மீது வியப்பு வரும்.

நடனமும் இசையும் மனதை கரைத்து ஒரு மனிதனை சில நிமிடங்களில் வேறோர் இடத்திற்கு வேறோர் நிலைக்கு கடத்திப் போய் விடுகின்றன. நல்ல இசையும் நடனமும் புரிவது ஒரு தவம் என்பது போல, அதை ஆழ்ந்து ரசித்து லயித்துக் கரைவதும் தவம்தானே.

தொடங்கும் போது நடனக் கலைஞர் இசைக் கலைஞர் ரசிகர் இருக்கின்றனர். போகப் போக நடனமாடுபவரும் இசைப்பவரும் ரசிப்பவரும் உண்மையில் இருப்பதில்லை.  ரசிகனுமில்லை, கலைஞனுமில்லை, இசையும் நடனமும் மட்டுமே இருக்கின்றன. சில கணங்களே கிடைக்கப்பெற்றாலும், அதியுன்னதமான நிலையது. மார்கழியின் மகோன்னத அனுபவங்கள் அவை.

மார்கழி என்பது நட்சத்திரக் கலைஞர்களை அவர்களது நிகழ்த்துகளை நேரடியாய் அருகில் அமர்ந்து அனுபவிப்பது.

– பரமன் பச்சைமுத்து
மார்கழி 3

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *