தூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா?

wp-1608481927926.jpg

குட்டிப் பையனாக இருக்கும் போது வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கும் வேளையில், அவர்கள் முன்பு வெறுந்தரையில் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா?

கண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா!’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள்?  ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா!’ என்று குண்டு போட்ட அத்தைகளும் உண்டு.    

பாசாங்குக்காக, விளையாட்டுக்காக தூங்கப் போய் அப்படியே தூங்கிப் போவோம் அவ்வயதில். நம்மைத் தூக்கிக் கொண்டு போய் பாயில் படுக்கையில் போடுவார் அம்மா.   

சோறு உண்கையில் வாயில் வாங்கும் ஓர் உருண்டைக்கும் அடுத்த உருண்டைக்கும்  இடைவெளியில் சொக்கி கழுத்து வெட்டி தூங்கி விழும் குழந்தைகள் பல உண்டு. வளர்ந்த பின்னும் சாலையில் சிக்னலுக்காக காத்திருக்கும் வேளையில் கண்ணயர்ந்து தூங்கி, பின்னிருக்கும் வாகனங்களால் ‘பேம்ப்பேம்’ என்று எழுப்பி விடப்படும் பெரிய வளர்ந்த ‘குழந்தைகளும்’ உண்டு. பாவம், இரவில் தூங்காததால் பகலில் சாலையில் தூங்குகின்றன இந்த வளர்ந்த பிள்ளைகள். 

தூக்கம் இயற்கை நமக்கு தந்த பெரும் கொடை. தூக்கம் தொலைப்பவனுக்கே தொடங்குகின்றன மன உளைச்சல்களும் நோய்களும்.  சரியாகத் தூங்காத மனிதன் உடல் நலமிழக்கிறான், கண்களின் பொலிவிழக்கிறான். நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்ல உறக்கத்திற்கும் நேரடித் தொடர்பு உண்டு.

‘எட்டு மணி நேரம் தூங்கனும்’ என்று பொதுப்படுத்துவதை நான் ஏற்பதில்லை. சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றும் நண்பன், ‘7 மணி நேரம் கட்டாயத் தூக்கம்’ என்று அவர்களுக்கு பரிந்துரை கொடுத்திருக்கிறார்கள் என்கிறான்.  மார்கழி என்றால் பதிகங்கள் பாட வேண்டும் என்பதற்காகவே அதிகாலை மூன்றரைக்கு எழுந்து விடுவார் என் தந்தை. ஒரு வேளை இன்னும் கொஞ்சம் உறங்கியிருந்தால், இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருப்பார்.

(‘அம்மா… பாரும்மா, பரமனே நல்லாத் தூங்கு, அலாரத்த ஆஃப் பண்ணிட்டுத் தூங்குன்னு சொல்றாரே. இனிமே டோன்ட் டார்ச்சர் மீ, ஓக்கே?’ என்று பதின்ம வயதுகள் அம்மாவை நோக்கிப் படையெடுப்பதற்கு முன், ‘செல்லமே… நன்றாக உறங்கு. 7 லிருந்து 9 மணி நேரம் உறங்கு. பரவாயில்லை. 10 மணி நேரம் தூங்கினால் உன் உடல் நோகும். எழுந்து இயங்கும் புத்துணர்ச்சி இருக்காது. நினைவில் கொள்!’)

தூங்காதவன் சீக்கிரம் மூப்படைகிறான் என்கிறது ஜப்பானிய அறிவியல் ஆராய்ச்சி. பகலில் வயிறு முட்டத் தூங்கிவிட்டு இரவில் தூக்கம் வராமல் பாயைப் பிறாண்டுபவர்கள் பலருண்டு.
‘பவர் நாப்’ என்ற பெயரில் 1 மணி நேரம் தூங்கிவிட்டு உற்சாகமிழந்து எருமை கணக்காய் அசைந்து அசைந்து இயங்குவோரும் உண்டு. பவர் நாப் என்பது பவர் கொடுப்பதற்காக சிறிதே சிறிது நாப் என்பது புரியாததால் வருவது இச்சிக்கல். 

நபிகள் நாயகம் அதிகாலையிலெழுந்து இயங்கி மதிய உணவிற்கு முன்பு சிறிது உறங்கி எழுவாராம். எனக்கு மிகவும் பிடித்த உகந்த முறையிது.

வெம்மை கக்கும் கோடையில் சிலருக்கு உடல் சூடும் எகிறி தூக்கம் வராமல் கண்களும் எரியும் படி தவிப்பர். தூங்காததால் கல்லீரல் சூடாகி, கல்லீரல் சூடானதால் தூக்கம் வருவது கடினமாகி என ஒரு சுழற்சி அது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மனச்சிக்கல், கவுன்சிலிங் என என்னிடம் வருபவர்கள் சரியாகத் தூங்குகிறார்களா என்பதே என் முதன்மை சரி பார்ப்பாக இருக்கும். தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு பல ஆலோசனைகள் சொல்வதுண்டு. அதில் ஒன்று ‘போர்வை டெக்னிக்’.

பலருக்கு, ஒரு மெல்லிய போர்வை நல்ல உறக்கத்தைத் தந்து விடுகிறது என்பதை நான் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன். உடலைப் போர்த்தியிருந்தாலே உறக்கம் ஆழமாக இருக்கிறது. ‘ஏசி இருக்கா! ஆன் பண்ணிட்டு, நல்லாக் குளிர்ற மாதிரி வச்சிட்டு போத்திட்டு தூங்கு. அலாரத்தை ஆஃப் பண்ணிடு. எப்ப விழிப்பு வருதோ எந்திரி!’ என்று நான் பரிந்துரைக்கும் இது, பலருக்கு பெரும் உதவி புரிந்திருக்கிறது. நம் உடலை கவ்விப் பிடித்துக் கொண்டு இருக்கும் உணர்வைத் தருகிறது போல. இதனால்தான் ‘ஸ்லீப் டைட்’ என்றார்களோ என்னவோ.

ஆமாம், குளிருக்கும் போர்வைக்கும் உறக்கத்திற்கும் நேர்க்கோட்டுத் தொடர்பு இருக்கிறது.

‘முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்!’  – என்று மார்கழிக் குளிரில் உறங்குபவளை எழுப்புகிறார் மணிவாசகர் திருவெம்பாவையில்.

இன்னொரு பதிகத்தில், ‘அடியேய் அவனைப் பாடி சிவனே சிவனே என்று காட்டுக் கத்தல் கத்தறோம், அப்பயும் பேய் மாதிரி தூங்கறியே! ச்சே! எழுந்திரிடி!’ என்கிறார், இப்படி:

‘சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய்கான்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்!’

குளிரில் போர்வைக்குள் புகுந்து உறங்கிக் கிடப்பதும், விழித்த நிலையிலும் தூக்கம் தொடரட்டும் என்ற இச்சையில் எழாமல்  கிடப்பதும் ஈரனுபவங்கள்.

மார்கழி என்பது போர்வைக்கான, நல் உறக்கத்திற்கான காலம்.

– பரமன் பச்சைமுத்து
மார்கழி 5
சென்னை

#Maarkazhi
#DevemberSeason
#ParamanPachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *