வைகுந்த ஏகாதசி அடையாறில்

பலவிதமான மக்கள் ஓரிடத்தில் குவிந்து இருப்பதை வெறுமனே கவனிக்கப் பிடிக்கும் எனக்கு. எல்லோரும் குளித்து உடை திருத்தி ஒரே ஒழுங்கோடு மனது குவித்து இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உற்சாகம் வராதா என்ன!

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் இன்று காலை அந்த சிறப்பு உற்சாகம் எனக்கு. வைகுந்த ஏகாதசி, பரம்பத வாசல் திறப்பு என எல்லா வைணவத் தலங்களிலும் இருக்கும் பரபரப்பு இங்கும் உண்டென்றாலும், மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து நிர்வகிப்பதில் அசத்துகிறார்கள்.

பெருமாளை வணங்கி விட்டு கைகளில் ஊற்றப்படும் பெறும் துளசித் தீர்த்தம் இல்லை, பெருமாளைப் பார்க்கப் போகும் போது கைகளில் சானிடைசர் தீர்த்தம் உண்டு. சுவாசக்கவசத்தை சடங்கு சம்பிரதாயத்திற்காக மாட்டிக்கொண்டு மூக்கை மட்டும் எடுத்து வெளியில் விட்டு நீட்டிக்கொண்டு வரும் ஆசாமிகளை ‘மாஸ்க்கை சரியாப் போடுங்க. இல்லன்னா அப்படியா வெளியப் போயிடுங்க!’ கணக்காய் சொல்லி திருத்தம் செய்யும் பணியாளர்கள் நிற்கிறார்கள். ‘ஐயோ பாட்டீ, அது தீர்த்தம் இல்லை, சானிடைசர்!’ என்று ஒரு மூதாட்டியை அதட்டி திருத்தி அழைத்துப் போகும் சிறுமி எனக்கு உற்சாகம் தந்தாள்.

தர்ம தரிசனத்தின் வரிசை மிகமிக நீண்ட சுழன்று வருகிறது. 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினால் பெருமாளை பார்த்து வணங்கி பரம்பத வாசல் வழியே வெளியேறி குங்கும பிரசாத பாக்கெட்டை வாங்கிக் கொண்டு 5 நிமிடத்திற்குள்ளாக வெளியே வந்து விட முடிகிறது. இது தவிர முதல் அடுக்கில் பெருமாளுக்கு மிக அருகில் நின்று பார்க்க 250 ரூபாய்க்கும் டிக்கெட் இருக்கிறது என்பது அங்கு போனதும்தான் தெரிந்தது.

வழக்கமாய் தரப்படும் திருத்துளாய் கிடையாது, துளாய் நீர் கிடையாது, அன்னமோ அமுதோ கிடையாது, வெறும் தரிசனம் மட்டுமே. ஆனால் அந்த அனுபவம் கிடைக்கும்.

வரிசையில் நின்று ‘இதோ இன்னும் கொஞ்சம் தூரத்தில்…’ ‘அருகில் வந்து விட்டோம்’ என்ற உணர்வோடு நகர்ந்து, கிடப்பவனின் பாதங்கள் தெரிந்ததும், கண்களால் விழுங்கி, நகர்ந்து திருமுகம் பார்க்க… இதெல்லாம் நடக்கும் போதே கைகள் தலைக்கு மேலே உயர்ந்து குவிந்திருக்க… பள்ளி கொண்டவன் ஒரு கையால் லிங்கத்திற்கு பூசைகள் செய்வதைப் பார்க்க… ( சரி வேணாம், ‘பெருமாள் கோயிலுக்குப் போனாலும் அங்கயும் சிவலிங்கத்தைதான் பார்க்கறான் பாரு இவன்!’ என்று பழி சுமத்தப்படும்) அது ஓர் அனுபவம்!

தகதக தங்கமாய் மின்னும் பரம பத வாயிலின் வழியே அனுப்பப்பட்டு வெளியே வந்து விடலாம்.

‘வைகுந்த ஏகாதசி, பெருமாளைப் பாக்கணும்! ஆனா இந்த பேண்டமிக் பீரியட்ல…’ என்று எண்ணம் கொண்டிருந்தால், உடனே கிளம்பி அடையாறு அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு போகவும். மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    ஆர் ஏ புரம்,
    25.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *