மாட்டுப்பொங்கல் கோலம்

wp-16106883271396509394169969006271.jpg

எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது.  தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது. 

இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை.

அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து செய்யப்படும் பொடி) தூளால் சிவப்புக் கோடுகளும் என இது மணக்குடியில் மட்டும் மாட்டுப்பொங்கலன்று போடப்படும் கோலம். (வேறு எங்கும் இதை நான் பார்த்ததில்லை. வேறு எங்கும் இப்படி இருந்தால் தெரியப்படுத்துங்கள்).

வீட்டின் பின்புறமுள்ள தோட்டம், மாட்டுத் தொழுவம் (மாட்டுக் கொட்டகை), மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்திற்காக மாடுகளை கட்ட திறந்த வெளியில் புதிதாக அடிக்கப் பட்ட முளை குச்சிகள் இருக்கும் இடம், வீட்டின் முன்புறம், அவரவர் வீட்டின் முன்புறமுள்ள வீதியின் பகுதி என எல்லா இடங்களிலும் இந்த வெள்ளை சிவப்பு இரு கோடுகள் கட்டம் கோலமாக போடப்படும் (வரையப்படும்!?)

பரந்து விரிந்த மாட்டுக் கொட்டகையிலும் புழங்கும் பகுதியிலும் கோலமாக புள்ளி வைத்து வரைவது கடினம் என்று இப்படி கோடிழுத்தனரோ என்னவோ, எவரோ எக்காலத்திலோ! ஐயர்கள் வாழும் அக்ரகாரத்தைத் தவிர மணக்குடியின் மற்ற எல்லா வீடுகளிலும் மாட்டுப் பொங்கலன்று இந்தக் கோடுகள் கோலங்களைப் பார்க்கிறேன் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக.

சிறு பிள்ளையாக இருந்த போது படையாச்சி தெரு பெரிய அண்ணன்களோடு போகியன்றே புறப்பட்டு வயல்களினூடே நடந்து நீர் மிகு வாய்க்கால்களைக் கடந்து பாம்புகளைப் பார்த்துக் கொண்டே வயலாமூரின் இடிந்த கட்டிடமொன்றில் காரைக்கட்டிகளையும் செங்கல் துண்டுகளையும் பெயர்த்து சேகரித்து யூரியா சாக்கில் கொண்டு வருவோம்.  அந்தக் கட்டிகளை இடித்துத் தூள் செய்தால் மாட்டுப் பொங்கல் கோலத்திற்கான பொடி தயார்.  ஆமாம், போகியன்றே பொங்கலைத் தாண்டி மாட்டுப் பொங்கலுக்குத் தயாராவோம்.

மாடுகளை குளிப்பாட்டி, மஞ்சள் தடவி,  பொட்டிட்டு, ஆவாரம் கொத்து கட்டிய மாலைகள் அணிவித்து படையலிட்டு, அழகாக நறுக்கப்பட்டு மஞ்சள் தடவிய பூவரசம் கழியால் மாட்டைத் தொட்டுத் தொட்டு, பித்தளை தாம்பாலத்தில் தட்டி சத்தமெழுப்பி, ‘பொங்கலோ பொங்கல்… மாட்டுப் பொங்கல்!’ என்று  கத்திக் கொண்டாடுவதும், அவற்றிற்கு பொங்கலும் வாழைப்பழமும் தருவதெல்லாம் மாலையில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சோடிக்கப்பட்ட காளைகள் பூட்டப்பட்ட வண்டிகளின் சவாரி களை கட்டும். எவரும் எந்த வண்டியிலும் ஏறிக்கொள்ளலாம். குழந்தைகளின் ‘ஹோ’வென்ற உற்சாகத்தோடு சவாரி தொடரும். இவையெல்லாம் மாட்டுப் பொங்கல் மாலை நிகழ்வுகள்.  மணக்குடியில் மாட்டுப்பொங்கல் தொடங்குவதென்னவோ காலையில் இந்த வெள்ளை சிவப்பு கட்டம் போட்ட கோலங்களோடுதான்.

இது, எங்கள் வீட்டு வாசலில் இன்று போடப்பட்டிருந்த வெள்ளை சிவப்பு கோலம்.

பொங்கலோ பொங்கல்! மாட்டுப் பொங்கல்!

– பரமன் பச்சைமுத்து
மணக்குடி,
15.01.2021

#Manakkudi
#MattupPongal
#Pongal
#ParamanPachaimuthu

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *