நின்று கொண்டிருக்கிறது புளிய மரம்

wp-1611759628982435312528921141961.jpg

காஞ்சி நகரின் உள்ளே பயணிக்கும் போது, கீழே நீரோடிக்கொண்டிருக்கும் அந்த சிறு பாலத்தைக் கார் கடந்தாலும், அந்த வேகவதி ஆற்றை சற்றென்று கடந்து வந்துவிட முடிவதில்லை. நீண்ட தூரம் போன பின்பும் மனம் மட்டும் வேகவதியிலேயே நின்று, மகேந்திர பல்லவன், இரண்டாம் புலிகேசி, காஞ்சி நகர் வெளிப்புறம் தீக்கிரையாதல், சாளுக்கிய வாதாபி, பதின்ம வயது நரசிம்ம பல்லவன் என்று சுழன்று கொண்டு நிற்கும் வெகுநேரம்.

சில மரங்களையும் அப்படி கடந்து விட முடிவதில்லை. அவை வெறும் மரங்களாகத் தெரிவதில்லை.

உங்களுக்கு குலதெய்வ வழிபாடு உண்டா? குல தெய்வக் கோவில்களுக்குப் போயிருக்கிறீர்களா? இறைவன் – கோவில் – வழிபாடு ஆகியவற்றைக் கடந்து ஒரு சங்கதி உண்டு் எனக்குப் பகிர.  என் பாட்டனைப் பார்த்ததில்லை நான். நான் பிறக்கும் முன்னேயே இயற்கை எய்திவிட்டாராம் அவர். பாட்டனையே பார்க்காத நான் அவரது பாட்டனைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதானே. எந்த ஊரிலோ வாழ்ந்த அவரது வீடு எங்கிருந்தது என்பதெனக்குத் தெரியாது, எங்கெல்லாம் திரிந்திருப்பார் தெரியாது.  ஆனால் ஒன்று நிச்சயம். குலதெய்வக் கோயிலுக்கு வந்திருப்பாரவர். அதே சன்னதியில் நின்றிருப்பார், அதே பிரகாரத்தில் நடந்திருப்பார்.

திருவரங்கம் சென்ற போதெல்லாம் கம்பன் அமர்ந்து ‘ராம காதை’ அரங்கேற்றிய இடத்தை கடக்க முடியாமல் நின்றது போல, தில்லைச் சிற்றம்பலத்திற்குள் நுழையும் போது சில சமயங்களில் அநபாயச் சோழனுக்காக அவனது அமைச்சர் சேக்கீழார் செந்தமிழில் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றிய இடத்தை மனம் தேடுவது போல, குலதெய்வக் கோயிலில் ஆண்டுக்கொரு முறை நுழையும் போது, அங்கிருக்கும் சுவற்றையும் கல்லையும் வெளியையும் கடக்க முடியாமல் நின்று போகிறேன்.

இறைமை என்பது உள்ளே உணரப்படவேண்டியது என்பதை கொண்டிருந்தாலும், குலதெய்வக் கோவிலுக்கு போவதற்கு நான் கொண்டிருக்கும் முக்கியக் காரணங்களுல் இதுவும் ஒன்று. ‘இதோ… இந்த சன்னதிக்கு வெளியில் நிச்சயமாய் நின்றிருப்பார்களே என் தந்தையும் அவரது தந்தையும், அதற்கு முன்னே என்றோ ஒரு நாள் அவரது தந்தையும் கூட’ ‘இதோ இந்தப் பிரகாரச் சுற்றில் நடந்திருப்பார்களே அவர்கள்!’ ‘இந்தக் கருவறையில் நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டு ‘அம்மா தாயீ! என் குலத்தைக் காப்பாத்தும்மா!’ என்று சொல்லியிருப்பார்களே,  ‘என் குல மூதாதையராகிய அவர்கள் நின்ற நிடத்தில் இதோ இன்று நானும்…’ என்று கிளம்பும் உணர்வுகளும் அவை கொடுக்கும் ஆழமும் எனக்குப் பிடிக்கும்.

குலதெய்வக் கோவிலையொட்டியொரு குளம், அதன் கரையில் கோவிலுக்கும் குளத்திற்கும் இடையில், தமிழகத்தின் பெரும்பாலான அதன் வகை மரங்களைப் போலவே வயது கொண்டு இருநூறாண்டுகளுக்கு மேலாய் நிற்கிறது உயர்ந்த நான்கு போர் கைகோர்த்து அணைத்தாலும் அணைக்க முடியா அளவு அடி பருத்த  ஒரு புளிய மரம்.

ஆடி மாதத்தின் ஒரு வெள்ளி காலையில் வந்து இறங்கி் புளிய மரத்தின் அடி சரிவில் யூரியா சாக்குகளால் சேர்த்து தைக்கப்பட்ட வெள்ளைப் படுதாவை விரித்து  அதில் கிடப்பதும், சற்றுத் தள்ளி பெண்கள் பொங்கலிடுவதும், குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆண்கள் சிறிது கண்ணயர்வதும், மாலையில் ஆண்கள் தீமித்து விட்டு வந்து இதே புளிய மரத்தடி சரிவில் அமர்ந்து இறைவனுக்கிட்ட வெண்பொங்கலை உண்பதும், காலங்காலமாய் நடந்து வருகிறது.  மயிலக்காளை பூட்டிய மாட்டு வண்டியில் வந்தார்கள், அப்புறம் பேருந்தில் வந்தார்கள், இப்போது வேன் அமர்த்திக் கொண்டும் சொந்தக் காரிலும் வருகிறார்கள் என வரும் முறை மாறியிருக்கிறது, வருவது காலம்காலமாய் தொடர்ந்து நடக்கிறது.

அரைநாண் கயிற்றில் இறுக்கப்பட்ட அரைக்கால் சட்டையையணிருந்த புளிய மரத்தின் பெருவேர்களில் விளையாடிக்கொண்டிருந்த  சிறுவனான என்னையழைத்து, பூத்திருந்த மஞ்சள் வண்ணப் பூவொன்றைக் காட்டி ‘நெருஞ்சிப் பூ’ என்று சொல்லிக் கொடுத்தார் சிவப்பிரகாசம் சித்தப்பா.  இடுப்பிலிருந்த தன் சுருக்குப் பையை எடுத்து அதிலிருந்து எட்டணாவை எடுத்துத் தந்து ‘பம்பரம் வாங்கிக்கோ!’ என்று சொன்னார் காது பிய்ந்து போகுமளவிற்கு தொங்கும் கனமான காதணி அணியும் வள்ளிம்மை பாட்டி.

இருபதாண்டுகளுக்கு முன்பு வெள்ளை வேட்டி மட்டுமேயணிந்த நான், சமதளமற்ற சரிவில் விரிக்கப்பட்ட வெள்ளைப்படுதாவில் படுத்துக்கொண்டு என் வெற்று மார்பில் என் மகள்களில் ஒருவளை படுக்க வைத்திருந்தேன்.  அந்தப் புளிய மரத்தடியில் குழந்தையாய் என் மீது அவள் உறங்கியது இன்னும் நினைவிலிருக்கிறது. சற்று தள்ளி உட்கார்ந்திருந்த போன தலைமுறையின் கதிர்காமன் சித்தப்பாவும் பாலதண்டாயுதம் சித்தப்பாவும் சிரித்தது நினைவில் வருகிறது. சரிவில் காலுக்கு நேரே கீழே சற்று தள்ளி மண்வெட்டியைப் பிடித்து குனிந்து பொங்கல் வைக்க அடுப்பு வெட்டிக்கொண்டிருந்த, சித்ப்பாக்களின் மூத்த தலைமுறை குட்டித் தாத்தாவின் நினைவு வருகிறது. கதிர்காமன் சித்தப்பா சில ஆண்டுகளுக்கு முன்பும், குட்டித்தாத்தாவும் பாலதண்டாயுதம் சித்தப்பாவும் பல ஆண்டுகளுக்கு முன்பும் இறந்து போனார்கள்.

புளிய மரத்தினடியில்தான் அப்பாவோடு அமர்ந்து பல சங்கதிகள் பேசியிருக்கிறேன். களப்பிரர்கள் பற்றி தமிழ் பற்றி வடமொழி பற்றி கிட்டத்தட்ட சண்டை என்பது போல காட்டமாய் விவாதித்திருக்கிறேன். அருகிலிருக்கும் திருவாமூரில் அப்பர் பெருமான் அவதரித்த தலத்திற்கு என் அப்போதைய மாருதி 800ல் போய் வந்து, அப்பர. பற்றிய உணர்வுகளை அப்பா சிலாகித்து சொன்னதை கேட்டிருக்கிறேன். இதே மரத்தடிக்கு தனது அப்பாவோடும் அம்மாவோடும் நடந்தே வந்து சேர்ந்திருக்கிறாராம் அப்பா.

இருபத்தைத்தாண்டுகளுக்கு முன்பு இதே மரத்தடியில் நிறுத்தாமல் அழுத குட்டிப் பையன் குகனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு, நடந்து குளத்தின் கரைவழியே சென்று கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஏரியை அதன் நீரை காட்டியதுண்டு. அழுகையை நிறுத்தி விட்டு ஏரியை ‘யேய்யீ…்யேய்யீ!’ என்று சொல்லிக்கொண்டிருந்தானவன்.

இரு வாரங்களுக்கு முன்பு பொங்கல் திருநாளன்று குலதெய்வக்கோவிலுக்கு போனோம். குகனின் பையன் குழந்தை துருவன் ‘ப்பா… கா…’ என்று எதையோ சொல்லிக் கொண்டிருக்க, முதுகலைப் பயிலும் என் மகள்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

என் கண்கள் புளிய மரத்திற்கு ஓடுகிறது. ‘புளிய மரமே… புளிய மரமே!’ மனம் ஓடுகிறது. கால்கள் விரைய ஓடிப் போய் நிற்கிறேன்.

என் அப்பா, அவரது அம்மா வள்ளியம்மை பாட்டி, அவரது அப்பா என அவர்கள் நின்ற இடத்தில் நான். தலைமுறைகளைக் கண்டு கடந்து அதே இடத்தில் இன்னும் நின்று கொண்டிருக்கிறது புளிய மரம்.

எனக்கு, அது வெறும் மரமாகத் தெரியவில்லை.

– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரைச் சாலை
27.01.2021

#PuliyaMaram
#TamarindTree
#Kolappakkam

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *