சித்தப்பா மணிவிழா

wp-1612976248501.jpg

‘முத்தையனுக்கு மணி விழா பண்ணிடனும்!’  வெவ்வேறு சமயங்களில் என அப்பா மூன்று முறை சொன்னார் இதை.

‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ!’ அம்மா இது குறித்து சொல்லிக்கொண்டேயிருந்தது. (அப்பாவை மாமன் என்றே குறிப்பிடுவார் அம்மா).

இனைவனருளால் மலர்ச்சி ஐம்பதாவது பேட்ச்சின் ஏழாவது வகுப்புக்கும் எட்டாவது வகுப்புக்கும் இடையே இன்று புதன் கிழமை மிக மிக அருமையாக நடந்தேறியது சித்தப்பா சித்தியின் மணிவிழா. 

குடும்பத்திற்குள்ளும் மணக்குடிக்குள்ளும் மட்டுமே சொல்லி எளிமையாகவே செய்வோம் என்று சித்தப்பா முடிவெடுத்திருந்தார் என்றாலும் ஒரு மணி விழாவிற்கான ஏற்பாடுகளும் வேலைகளும் அதே அளவு பளு கொண்டதுதானே.

அப்பாவோடு தொடர்பிலிருந்த அதற்குரிய சரியான நிகழ்த்துபவர்களை கொண்டு வந்தும், வேண்டிய முன்னேற்பாடுகளை செய்தும் சிவபிரியன் பெரும் பணிகளை முடித்து விட்டான்.  என்னைத் தவிர மீதி இருக்கும் மொத்த குடும்பமும் மணக்குடியின் சில நெருங்கிய உறவுகளும் பணி செய்து முன்னேற்பாடுகள் செய்தன.

மூல வேர்களின் வழியே பில்லாலி செல்வம், சோமாசிப்பாடி தோப்பு வீடு, சித்தயின் வேர்களின் வழியே மதுராந்தகம், திருப்பத்தூர், சென்னை என உறவினர்களும், புதுவையிலிருந்து சதீஷ் ஸ்ரீராமுலு – கோதாவரி,  மணக்குடியின் ஆயிபுரத்தின் மொத்த உறவுகளும், சித்தப்பாவின் சிதம்பரம் நட்பு வட்டம்,  குறியாமங்கலம் அப்பா பிள்ளை, காமராஜ் பிள்ளை, சுந்தர் பிள்ளை, ஆயிபுரம் பன்னீர் வாத்தியார், பலராமன் ஐயர் உட்பட மணக்குடியின் பொது சுற்றம் என வீட்டின் முன்பகுதி கொள்ளளவு கூட்டம் என அளவு கொண்ட பேர்களாலே சிறப்பாக நடந்தது நிகழ்வு. (பொன்னையன், ரத்தினவேலு, சடாட்சரம் சித்தப்பாவை நான் எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சி!)

குறிஞ்சிப்பாடி சகோதரர்கள், மூத்தவரொருவர், குட்டி என நால்வரும் சிறப்பாக நிகழ்த்தினர். புதுவையிலிருந்து அருள் வந்து சேர்ந்து கொண்டதும் கூடுதல் மகிழ்ச்சி.

உணவும் சிறப்பாகவே இருந்தது. உணவு பரிமாறலும் உண்ணுதலும் அழகாகவே நடந்தன.

அக்கரகாரத்து கமலா மாமி, பட்டு ஐயர் மனைவி, கணேசன் மனைவி என வந்திருந்தோர் அவர்கள் வழியில் ‘சீதா கல்யாண வைபோகமே!’ என பாடியதும் கூடுதல் சிறப்பு.

தீ வளர்த்து புரிந்த வேள்வியும், திருமுறைகள் ஓதலும், மணி விழா நீராட்டும், திரு மாங்கல்யம் பூட்டுதலும், அதைத் தொடர்ந்த வாழ்த்துதலும், வாழ்த்து பெறுதலும் என எல்லாமே அப்பாவின் திருவுருவப் படத்திற்கு முன்னே சிறப்பாய் நடைபெற்றதை வானிலிருந்தும் நிகழ்த்தி பார்த்து வாழ்த்தியிருப்பார் அப்பா.

‘ஒரு வேலையும் செய்யலியே நாம!’ என்று எனக்குள்ளிருந்த ஏக்கத்தை தீர்த்தன இரண்டு சங்கதிகள்.

அக்காவுக்கும், சித்தப்பாவுக்கும் ஒரே நாளில் கோவிலில் மண்டபத்தில் என அடுத்தடுத்த இடங்களில் திருமணம் நடந்ததால், அக்காவின் மணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த நான் அன்று சித்தப்பா திருமணத்தை பார்க்கவில்லை. இன்று திருமாங்கல்யம் சூடுவதை கண்டு மகிழ்ந்தேன்.

சித்தப்பா திருமாங்கல்யத்தைப் பூட்டும் போது அருகில் நின்று அட்சதை தூவி வாழ்த்திய அம்மா, அப்பா படத்தைப் பார்த்து கலங்கி அழுதார்.  ‘முத்தையனுக்கு மணி விழா பண்ணிடனும்!’என்ற அப்பாவின் குரல் அவருக்குள் ஒலித்திருக்கும். ‘மாமன் ஆசைப்பட்டதை செஞ்சுட்டோம்! ஆனா மாமன் இல்ல பக்கத்துல!’ என்று ஒரு நிமிட கலங்கல் அழுகை அது. அந்த நேரத்தில் அம்மாவை அணைத்த படி நின்றிருந்தேன் என்பது என் கொடுப்பினை. அப்பாவின் ஆசி.

‘அண்ணே… லட்சுமி பூஜையில வைக்க புது அஞ்சு ரூபா பத்து ரூபா காயின்ஸ், கொடுக்க புது இருவது ரூவா கட்டு ஏற்பாடு பண்ண முடியுமா!’ என்று குட்டி கேட்டதும், நான் முயற்சிக்க, கோட்டையின் (தலைமைச் செயலக ) தலைமை வங்கியிலிருந்து வந்தன. படம் எடுத்து பகிர்ந்ததும் அவன் சொன்னான்.

‘இதை சிறப்பா நடத்த வேண்டி எல்லாத்தையும் பெரியப்பா (அப்பா) செஞ்சு உதவி புரியறார்!’

அப்பாவின் ஆசை, வாழ்த்து, ஆற்றலும் இணைந்து கொள்ள எல்லாம் சிறப்பாய் நிகழும்தானே. 

‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ!’ என்று அம்மா சொல்ல, அப்பாவே தனது ஆற்றல் மிகு அன்பின் மூலமாய் நிகழ்த்தி வைத்து விட்டார்.

சிறப்பாக நடந்தது மணிவிழா!

உணவு உண்டு ஒவ்வொருவராக உறவினர்கள் புறப்பட, மதியம் பரியும் திவாகரும் குருவும் புறப்பட, மாலையில் புறப்பட்ட நான் சென்னை நோக்கிப் பயணிக்கிறேன், இறைவனுக்கு நன்றி சொல்லிய படி.

– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரைச் சாலை
10.02.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *