இளையாராஜா விகடன் பேட்டி

சில மனிதர்களின் நேர்காணல்களை சில பக்கங்களில் அடைத்து சுருக்கி விட முடியாது, சுருக்கி விடவும் கூடாது.  புதிய ஒலிப்பதிவுக் கூடத்தைத் திறந்து விட்ட இளையராஜாவின் பேட்டி வந்திருக்கிறது இன்று காலை வந்த விகடனில்.

உங்கள் பாடல்கள் ஆழ்ந்த மனநிலையைத் தருகின்றன. இதை அடையும் மாயநிலை என்ன? பாடலின் தன்மையை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? பிண்ணனிக்குரலின் பங்கு என்ன? எஸ்பிபி பற்றி? இசையின் உண்மைத் தன்மை என்ன? என்றெல்லாம் நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறார் நா. கதிர்வேலன்.

ஆனால்… ‘ராஜா இத்தனை குறைந்த வார்த்தைகளிலா அவ்வளவையும் விளக்கியிருப்பார்!’ என்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் இது போன்ற ஆழ்ந்த அனுபவங்களை கொண்ட மனிதர் தன்னை வெளிப்படுத்தும் போது, அதை நான்கு பக்கங்களில் (பெரிய ராஜா படத்தோடு சேர்த்து ஐந்து பக்கங்களில்) முடித்துவிட முடியாதுதான்.

‘எப்படி முடிகிறது இப்படியொரு இசையை கொண்டு வர, எப்படி வருகிறது அது?’ என்ற கேள்வியை கேட்டு, அவரைப் பேச விட்டு எடுத்து நிறையத் தந்திருக்க வேண்டும்.  

பத்திரிக்கை என்று வரும் போது அதன் பக்கங்களும் பல சுவை கொண்ட பல கட்டுரைகளும் இருக்க வேண்டும் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொள்கிறேன். 

இசையின் உண்மைத் தன்மை என்ன என்று கேள்விக்கு, ‘ஒரு பாடல் உருவாகும் முன்பு காத்துல அது எங்க இருந்தது. கம்போஸ் பண்ண உடனே உருவாகி காற்றில் கலந்து மறைஞ்சு போயிடுது. எப்படி பாடலை உருவாக்கியவனை தூண்டி விட்டு அது அதுவாக வெளியில் வந்தது. அது இவனை உருவாக்கியதா, அல்லது இவனைத் தூண்டி விட்டு பாடலை உருவாக்க வைத்ததா? அற்புதம்ல… இப்பவே பேசி முடிக்கற விஷயம் இல்லை. பிறகு பேசலாம்!’ ராஜா சொன்ன பதிலே சொல்கிறது இவற்றிற்கு இன்னும் கூடுதல் இடம் வேண்டும் என்று.

நிச்சயம் நேர்காணல் கண்டவர் எழுதி எழுதி நறுக்கி நறுக்கி தவித்திருப்பார்.

நான் அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியனாக இருந்தால், இன்னும் சில பக்கங்கள் கூடுதலாக ஒதுக்கியிருப்பேன் அல்லது இதை சில வாரங்களுக்கான தொடராக செய்திருப்பேன்.

– பரமன் பச்சைமுத்து
11.02.2021

#Vikatan
#Avikatan
#IlaiyarajaVikatanInterview
#IlaiyarajaVikatan
#AnandhaVikatan

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *