‘மாஸ்க்’கோடு மகிழ்ந்து குலாவி…

wp-1613544469103.jpg

முகத்தைப் பார்த்தே ஒருவரை அடையாளம் காண்போம் என்ற நிலை மாறி முன்னேறி விட்டது உலகம்.  பாதி முகத்தை மறைத்து சுவாசக் கவசம் அணிந்து கொண்டு ஆர் ஏ புரத்தின் தெருவொன்றில் இளநீர் வாங்க போனாலும், ‘ஹலோ பரமன் சார்!’ என்கின்றனர் எதிரே போகிறவர்கள்.  முழு முகமும் தெரியாவிட்டாலும் மொத்த உடலமைப்பை கண்டு நொடியில் மூளையில் பதிந்திருக்கும் பிம்பத்தை ஒப்பிட்டு தகவல் உறுதி செய்து நியூரான்கள் கடத்தப்பட்டு ‘ஹலோ பரமன் சார்!’ என சொல்ல வைத்து விடுகிறது மூளை.  

சென்ற முறை சென்னை விமான நிலையத்தில் இருந்த கேமரா முன்பு நின்ற என்னை ‘மாஸ்க் டவூன்’ என்று ஆங்கிலத்தை இந்தியில் பேசிய பாதுகாப்பு அதிகாரி நினைவுக்கு வருகிறார். இனி மாஸ்க் அணிந்தாலும் முகத்தை கண்டறியும் செக்யூரிட்டி ஸ்கேனர்கள் வரலாம்.

‘3 லேயர்ஸ், வாஷபிள், பிராண்டட் மாஸ்க்’ என்ற விளம்பரங்களையும் ‘மேட்சிங் மேட்சிங்’ என்று வாங்கிய மாஸ்க்குகளையும் அணிந்து கொண்டு கொஞ்ச நேரத்தில் மூச்சு முட்ட,  மரங்கொத்தி குருவி மாதிரி ‘சொய்ங்க்’ என்று மூக்கை மட்டும் வெளியில் விட்டு மற்றதை மூடி மாஸ்க் போட்ட மனிதர்கள் செய்த அட்ராசிட்டீஸ் தனி. ‘அடேய்… அதுக்கு ஏண்டா இந்த மாஸ்க்க வாங்கறீங்க. சர்ஜிகல் மாஸ்க் வாங்க வேண்டியதுதானே!’ என்று கதற வேண்டியிருக்கும் அவர்களிடம்.

அவர்களாவது பரவாயில்லை.
தனியாக பைக்கில் வரும் போது நல்ல பிள்ளையாய் ஒழுங்காய் அவ்வளவு தூரம் மாஸ்க் போட்டுக்கொண்டு வந்து, நம் பக்கத்தில் வந்ததும் முகத்திடம் நெருங்கி மாஸ்க்கை கழட்டி விட்டு, ‘பரமன் சார் நல்லாருக்கீங்களா!’ என்று காற்றை ஊதி பேசி கதற விடுவார்கள் சிலர். ‘தனியா இருக்கும் போது போட்டுட்டு இங்க ஆளு பக்கத்துல வந்து கழட்டுறியேப்பா!’ என்று சொல்லவும் முடியாது.

விஜயவாடாவிற்கு பயணித்த விமானத்தில் ‘மாஸ்க் கம்ப்பல்சரி’ என்றார்கள், முகத்தின் மீது அணிந்து கொள்ள ஓர் உறுதியான கண்ணாடி ஃபைபர் கவசம் தந்து ‘போட்டால்தான் விமானத்தில் ஏறவே முடியும்’ என்றார்கள்,  நடு இருக்கையில் அமர்பவர்கள் ‘பிபி சூட்’ எனப்படும் முழு நீள கவச உடை போட்டே ஆக வேண்டும் என்றார்கள், உடல் வெப்ப நிலை சோதித்தார்கள், கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தார்கள், உள்ளே அனுமதித்தார்கள்.  விமானப் பணிப்பெண்கள் எவர் முகமும் தெரியாத அளவிற்கு மாஸ்க்கும் முழுமுகத்துக்கும் கண்ணாடி கவசமும் போட்டிருந்தார்கள்.

‘புட் யுவர் மாஸ்க் ஆல்வேஸ் ஆன். ஃபாலோ கோவிட் 19 கைட்லைன்ஸ் சேஃப்டி மெஷர்ஸ்’ என்று உள்ளே நுழைந்தது முதல் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். விமானம் புறப்பட்டதும் ஒவ்வொரு இருக்கையாய் போய் பார்த்து ‘சார் மாஸ்க் அப் ப்ளீஸ்’ என்று சரி செய்தார்கள். ‘ஆ…மாஸ்க் போடுங்க!’ ‘ஆ… மாஸ்க் போடுங்க’ என்று வந்ததிலிருந்து கூவியவர்கள், திடீரென்று, ‘நவ் ஸ்நாக்ஸ் டைம். வி ஹேவ் ஃபுல்லி க்ளீன் ஸ்நாக்ஸ் ஃபார் யு. சாண்ட் விச், டீ…’ என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். ‘அடியேய்! இதுக்கு மட்டும் மாஸ்க்க டவுன் பண்ணலாமா? மாஸ்க்க டவுன் பண்ணாம எப்படிம்மா சாப்புடுவான் அவன்!’ என்ற கேள்விகள் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. அந்தப் பணிப்பெண்களைப் பார்க்க பாவமாகவே இருந்தது.

ஒரே மாஸ்க்கை கழட்டி கழட்டி வைத்து ஒரு மாசமாக போடுவோரும் உண்டு, என் 95ஐ தேவையில்லாமல் வாஷிங் மெஷினில் போட்டு அடித்து உலர்த்தி முன்  பக்கம் பஞ்சு பிஞ்சு நிற்க அடுத்த நாள் அணிந்து கொண்டு வருவோரும் உண்டு. வெள்ளை என் 95ஐ எப்படி அணிய வேண்டும் என்று தெரியாமல் படுக்க வாட்டில் அணிந்து வாத்து மாதிரி முகம் மாறி இருப்பவர்களை கண்டு சிரிக்காமல் இருப்பது கடினம்.

‘இந்த கீழா நெல்லியை கடிச்சி கொப்புளிச்சா… கொரோனால்லாம் ஓடிப் போயிடும்’ ‘சாம்பிராணி பொகையை நல்லா இழுத்தா, கொரோனா செத்துடும்!’ என்ற வகையில் ஆரம்பத்தில் அடித்து விட்ட குருஜீக்களின் பேச்சுகள் மறைந்து மக்கள் சுவாசக்கவசம் அணிந்து அதனோடே வாழப் பழகிவிட்டனர் இத்தனை மாதங்களில்.  மணக்குடி போன்ற சிற்றூர்களில் சுவாசக்கவசமே அணிவதில்லை என்றாலும் நகரங்களில் சுவாசச் கவசம் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்குள் வந்து விட்டது. அதிகாலை நடைப்பயிற்சி போகும் போது என்றாவது ஒரு நாள் சுவாசக்கவசத்தை மறந்து விடுகிறோம், மற்றபடி எங்கும் கவசம்தான்.

‘மாஸ்டர்’ திரைப்படத்தைப் பார்க்க திரையரங்கம் போனபோது எல்லோரும் சுவாசக்கவசத்தோடேயே போனோம். தியேட்டரின் உள்ளே எதையும் உண்ணவும் இல்லை, சுவாசக் கவசத்தை இறக்கவும் இல்லை. சர்ஜிக்கல் மாஸ்க்கே சிறந்தது,  அதை முழுநாளும் கூடப்  போட்டுக்கொள்ளலாம் மூச்சு முட்டாது என்று கற்றுக் கொண்டு விட்டோம். நம் முழுமலர்ச்சி பேட்ச் 50ல் ‘சர்ஜிக்கல் மாஸ்க்’ அணிந்து கொண்டே மலர்ச்சி மகா முத்ரா மூச்சுப் பயிற்சி கூட செய்துவிட்டோம்,  ஆழ் அனுபவமும் அடைந்தோம். 

‘ஒடம்பு வேர்க்குது ஏசி வேணும். ஆனா எனக்கு ஏசியில சீக்கிரம் சளி புடிச்சிக்கும்’ என முரணான நிலை கொண்ட கார் பயணிகளுக்கு சுவாசக்கவசம் ஒரு வரப்பிரசாதம். மார்கழி அதிகாலைப் பனியை சுவாசக்கவசம் கொண்டே வசதியாகக் கடந்த பால்காரரை தெரியும் எனக்கு.

‘மாஸ்க் மாஸ்க்’ என்று கூவினாலும் திறப்பு விழாக்களுக்கும், திருமணங்களுக்கும் செல்லும் போது, ஃபோட்டோகளுக்கு போஸ் கொடுக்கையில் மாஸ்க் கழற்றப்படுகிறது பலருக்கும். தனி சந்திப்புகளில் சுவாசக்கவசம் அணியும் எடப்பாடி பழனிசாமி ஸ்னாலின் அவர்களும் கூட தேர்தல் பரப்புரை மேடைகளில் ஊடகங்களுக்கு முன்னால் கவசத்தை துறந்து விடவே செய்கிறார்கள். (ராகுல் காந்தி மட்டும், இலையில் பாதி உணவு உண்ட நிலையிலும் முகத்தில் சுவாசக்கவசத்தோடு இருந்தார் ஒரு படத்தில்!!!)

கொரோனா தடுப்பூசி வந்தாயிற்று, ஆனாலும் இன்னும் பல மாதங்கள் சுவாசக்கவசம் அணிய வேண்டியிருக்கலாம். ‘கோவிஷீல்ட்’ ஊசிக்கு கொடி பிடித்தவர்கள் எல்லாம் இப்போது, ‘இல்ல இல்ல கோவாக்ஸின்தான் நல்லது!’ என்கிறார்கள். எந்த கொரோனா தடுப்பூசியும் 100% பாதுகாப்பு தரவில்லை. ஃபைஸர் ஊசி 95%, மாடர்னா 94% என பட்டியல் தருகிறார்கள். நம்மூரில் முன்களப் பணியாளர்கள் போட்டுக் கொண்ட கோவிஷீல்ட் தடுப்பூசி 84% பாதுகாப்பு தருகிறதாம். மீதி 16%?  உலகம் முழுவதிலும், குறைந்த பட்சம் நாடு முழுவதிலும் ஊசி போடப்படும் வரை, மொத்த ஊரின் எதிர்ப்பாற்றல் ஏறும் வரை, சுவாசக் கவசம் அணியவே பரிந்துரைப்பார்கள்.  சுவாசக் கவசம் தொடரும்!

என் கேள்வி வேறு! என் அடுக்ககக் குடியிருப்பிலும் என் அலுவலக வளாகத்திலும் நான் புழங்கும் திரியும் இடங்களிலும் கடந்த ஓராண்டாக சுவாசக்கவசத்தோடே என்னைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, திடீரென்று நாளை சுவாசக்கவசம் இல்லாமல் இருக்கும் என்னைப் பார்த்தால் அடையாளங் கொள்வார்களா?

ஙே…ஙே….ஙே…!

– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்,சென்னை
17.02.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *