‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-1613978192362.jpg

உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் என்று பட்டியல் செய்தால் அதில் தவிர்க்கவே முடியாதவர் முதலில் வருபவர் என்று இறைத்தூதர் முகம்மது நபி அவர்களை சொல்வார்கள்.

அவரை இறைத் தூதராகவும், இஸ்லாம் மார்க்கத்தை தந்தவராகவும் மட்டுமே தெரிந்து கொண்டவர்களுக்கு, அவரது பிறப்பிலிருந்து 63 வயதில் அவருக்கு நிகழ்ந்த இறப்பு வரை உள்ள முக்கிய சங்கதிகளை தொகுத்து எளிதில் படிக்கக்கூடிய அளவில் சிறு நூலாக தந்தால் எப்படி இருக்கும்!  இஸ்லாம் கடந்த மாந்தர்களும் அறிய உதவியாயிருக்குமே!    அப்படி ஒரு நூலை திரு எம் ஏ முஸ்தபா அவர்கள் எழுத ரஹ்மத் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

மக்கா நகருக்கு வெளியே தொலைவிலிருந்த மலையின் ஹிரா குகைக்கு ரமளான் (ரமலான் அல்ல, ரம’ளா’ன் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்) மாதத்தில் சென்றதிலிருந்து நபிகள் அவர்களின் வாழ்வும் இலக்கும் இறையால் மாற்றப்பட்டது என்று படித்தறிந்திருக்கிறோம். ஆனால் அதற்கு முந்தைய காலங்களில் குறிப்பாய் 25 வயது வாழ்வில் அவர் கொண்டிருந்த கடைப்பிடித்த நெறிகள், கதீஜா அம்மையார் அவர் வாழ்வில் வந்த விதம், அவர்களது 15 ஆண்டு கால வாழ்க்கை, துவக்கத்தில் அவர் புரிந்த சிறு வணிகம், ஹிரா குகையில் வானவர் செய்தி வந்த அனுபவத்தில் நடுங்கி கதீஜா அம்மையாரிடம் செய்த பகிர்வு, அவர் எடுத்த அனுகுமுறை, கிருத்துவ பாதிரியார் வராகாவிடம் அழைத்துச் செல்லுதல் என முக்கிய நிகழ்வுகளை நமக்கு சொல்கிறது இந்நூல்.

இறைத்தூதரின் மகன் இறந்த தினம் சூரிய கிரகணம் வருவதை வைத்து நகர மாந்தர் ஊகக் கதைகள் கட்ட, அவர்களை அழைத்து, ‘சூரிய கிரகணத்துக்கும் என் மகன் இறப்புக்கும் சம்மந்தம் இல்லை. நான் வெறும் மனிதன். இறைச் செய்தி என் மூலம் இறங்குகிறது என்னும் ஒரு விஷயத்தைத் தவிர மற்றபடி நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனிதன்தான்!’ என்று நபிகள் நாயகம் அறிவித்தார் என்பதைப் படிக்கும் போது மரியாதை உயர்கிறது.

முகம்மது நபியிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இந்நூல் சிறு நூல்தான், ஆனால் அதற்கான சன்னல்களை திறந்து விடுகிறது.

நூல் : ‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ – இறைத்தூதர்
நூல் தொகுப்பு : எம் ஏ முஸ்தபா
வெளியீடு: ரஹ்மத் பதிப்பகம்

– பரமன் பச்சைமுத்து
சென்னை
22.02.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *