‘த்ரிஷ்யம் – 2’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-1613998808585.jpg

எல்லா மொழிகளிலும் மக்களால் கொண்டாடப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்திற்கு  இரண்டாம் பாகம் எடுப்பதென்பது கத்தி மேல் நடப்பது போன்றது. அதை அநாயாசமாக செய்திருக்கிறார்கள்.

முந்தைய ‘த்ரிஷ்யம்’ (தமிழ் ‘பாபநாசம்’) நடந்ததிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து நடக்கும் நிகழ்வுகளால் ஆனது கதை. கேபிள் டிவி வைத்திருந்த சினிமா பைத்தியமான ஜார்ஜ்குட்டி, இப்போது வளர்ந்து சொந்த திரையரங்கம் வைத்திருக்கிறார், சினிமா காதலனான அவர் ஒரு நிலைக்கு மேலே போய் திரைப்படமே எடுக்கிறார். புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியரோடு பழகி இணைந்து கதை எழுதுகிறார். ஒரு பழைய நாடக நடிகனோடு அடிக்கடி குடிக்கிறார்.

சிறையிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்துத் திரும்பி வரும் அந்த ஊரின் மனிதன், பக்கத்து வீட்டில் குடித்துவிட்டு மனைவியை அடித்து நொறுக்கும் குடிகார கணவன், அடிவாங்கி ப்ளாஸ்ட்டர் ஒட்டுப் போட்டுக்கொண்டு சிரிக்கும் மனைவி, ஜார்ஜ்குட்டியின் வளர்ச்சியை நாலு விதமாகப் பேசும் உள்ளூர் மக்கள் நாலுபேர், அவர்கள் அமரும் உள்ளூர் டீக்கடை, தன் அம்மாவின் பேச்சை கேட்க மறுக்கும் ஜார்ஜ்குட்டியின் வளரும் மகள், பய உணர்ச்சியால் கொஞ்சம் சித்தம் கலங்கிய மூத்த மகள், மகள்களை நினைத்தே பதற்றப்படும் மனைவி என  பாத்திரங்களின் அறிமுக நிகழ்வுகளால் முதல் 50 நிமிடங்கள் மிக மிக மெதுவாக நகரும் படம் திடீரென சூடு பிடிக்கிறது. அதன் பிறகு எக்ஸ்பிரஸ் ஹை வே.

உலகமே எதிர்பார்த்த படத்தின் முக்கிய முடிச்சான ஒன்றை படத்தின் இறுதியில் உச்சக்காட்சியாக வைக்காமல், படத்தின் நடுவில் பெரிய ஆரவாரம் இல்லாமல்  போகிற போக்கில் காட்டியதிலிருந்தே இயக்குனர் கதாசிரியர் மீது மரியாதை உயர்கிறது.  மிக அருமையான திருப்பங்களால் நிறைத்திருக்கிறார்கள் திரைக்கதையை.

முதல் பாகம் போலவே எவர் நடித்தாலும் வெற்றிபெறும் கதைதான் என்றாலும், மோகன்லாலும் மீனாவும் கதைக்குள் நேர்த்தியாக பொருந்தி வாழ்ந்திருக்கிறார்கள்.

பலவீனம் – மெதுவாக நகரும் முதல் முக்கால் மணி நேரம்
பலம் – திரைக்கதையும், ஒன்றிப் போக வைக்கும் திருப்பங்களும்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘த்ரிஷ்யம் 2’ – ‘சரியான இரண்டாம் பாகம்’ . நிச்சயம் பாருங்கள்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *