காமுட்டி விழா

wp-1614525167039.jpg

‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள்? (சிம்பு என்று சொல்லாதீர்கள்)

மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும் இடையே மேடான இடைவெளி கொண்ட அமைப்பான அவரது முகத்தைப் பார்க்கப் பிடிக்கும் எனக்கு. வெஸ்ட் இண்டீஸிலிருந்து வந்து இங்கேயே தங்கி விட்டார் என்று சொன்னால் நீங்கள் நம்பக்கூடும் என்றளவில் களையாக இருப்பார். மணக்குடி பள்ளிக்கூடத்தின் எதிரிலேயே அவர் வீடு. ‘இண்ட்ரோலு’ (வகுப்பு இடைவேளையை அப்படியே சொல்வோம்) வந்ததும் தண்ணீர் குடிக்க முத்துவோடு போகும் போதெல்லாம் கத்தியை கல்லில் தீட்டிக்கொண்டோ மண்வெட்டியை வைத்து எதையாவது செய்து கொண்டோ இருக்கும் அவரை பார்த்திருக்கிறேன்.

பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் வழியில் மூன்று சிறு தெருக்கள் சந்திக்கும் சிறு திடல் போன்ற முக்கூட்டு. அங்குதான் அப்போதெல்லாம் அமைச்சர் விவி சாமிநாதன், கலைமணி எல்லாம் வந்து அதிமுக கொடியேற்றுவார்கள். டாக்டர் துரை கிருஷ்ணமூர்த்தி திமுக கொடி ஏற்றுவார். விடுதலை சிறுத்தைகள் எல்லாம் இல்லாத அந்தக் காலங்களில் தலித்களுக்கு இளைய பெருமாள்தான் காவலர்.

அந்த முக்கூட்டின் நட்ட நடுவில் நீள் செவ்வகமாக  மண்ணால் மெழுகி உருவாக்கப்பட்ட கால் அடி உயர சுவர் எழுப்பப்பட்டு சுற்றிலும் கோலமிடப்பட்டிருக்கும். நட்ட நடுவில் மெழுகப்பட்ட மண் மேடையில் ஒரு கரும்பும் தர்ப்பையும் அடுத்தடுத்து நடப்பட்டு அவையிரண்டும் சேர்த்து கட்டப்பட்டிருக்கும். மூன்று பேர் பறையை அடி அடியென்று அடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பார்கள். சிறுவர்களான எங்களுக்கு திடீரென்று நடக்கும் அவையெல்லாம் வியப்பாக இருக்கும்.  ஒரே ஓட்டமாக வீட்டிற்கு ஓடி மூச்சிறைக்க அம்மாவிடம், ‘அம்மா.. கரும்ப கட்டிப் போட்டு படைச்சி மோளம் அடிக்கறாங்கம்மா!’ என்றால், நம் மோவாயைத் துடைத்து விட்டபடியே ‘காமுட்டி படையல்டா’ என்பார்கள்.

காமுட்டி படையல் வந்தால் மூன்று நாட்கள் ஊரே கொண்டாடும். மாசி பௌர்ணமி அன்று காலையில் காமுட்டி கரும்பு நடுவார்கள்.
இரவு, சுந்தரம் கடைக்கு எதிரே  மர பெஞ்ச்களால் கட்டப்பட்ட  மேடையில் மூன்று நாட்கள் கூத்து நடக்கும். ஒரு நாள் ‘அரிச்சந்திரன் கூத்து’, ஒரு நாள் ‘மயில் ராவணன் கூத்து’, ஒரு நாள் ‘வள்ளித் திருமணம்’ என கூத்து களை கட்டும்.  காமுட்டி படையல் இடத்திற்கு அருகே, தேர்தல் வாக்குச் சாவடி அருகே இருப்பது போல திடீரென்று டீ கடை முளைக்கும்.

இரண்டாம் நாள் பகலில் மந்தான் மன்மதனாகவும், மங்கான் ரதியாகவும் மாறுவார்கள். கோவைப்பழத்தை விட பெரிய சிவப்பு உதடுகள், பெரிய கரிய புருவங்கள், முகம் முழுக்க ரோஜா நிறம் என வண்ணப்பூச்சுகள் ஏற்றியும், மார்பில் மினுமினுக்கும் அணிகலன்கள் அணிந்தும், நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அடிக்கும் பளீர் வண்ண உடைகளணிந்தும் வேறு வடிவம் பெற்றிருப்பார்கள். ‘ஏய்… ரதியும் மன்மதனும் வர்றாங்கடா!’ என்று கூச்சல் எழுப்பும் சிறுவர்கள் சூழ ஊரின் தெருக்களில் வருவார்கள்.  வீடுவீடாக வரும் மன்மதனையும் ரதியையும் வரவேற்று உபசரிப்பார்கள் மக்கள். பல வீட்டில் காசு தருவார்கள்.

மூன்றாம் நாள் இரவு எந்தக் கூத்தாக இருந்தாலும், விடியும் முன் அது நிறுத்தப்பட்டு மன்மதன்(காமன்) தகனம் நடைபெறும்.  தவத்திலிருக்கும் சிவனின் மீது மலர் அம்புகளை எய்வார் மன்மதன். தியானம்  கலைக்கப்பட்டதால் கோவம் கொண்ட சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க எரிந்து சாம்பாலாவர் மன்மதன்.  ‘ஐயயோ… என் புருஷன் இல்லையே என்ன செய்வேன்!’ என்று அழுவார் ரதி. மனமிறங்கிய சிவனார், மன்மதனை உயிர்ப்பித்து, ‘ரதி… அதோ மன்மதன், இனி உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்!’ என்று வரம் தர, வாழ்த்துப் பாடலோடு கூத்து நிறையும்.

‘கூத்து முடிஞ்சிடுச்சி! காமுட்டி கொளுத்தப்போறாங்க!’ என்று கத்துவார்கள் சிறுவர்கள்.
முக்கூடலில் நடப்பட்ட கரும்பும் தர்ப்பையும் கொளுத்தப்படும். மூன்று நாட்களாய் படையலிடப்பட்ட காமுட்டி கோவில் கொளுத்தப்படும்.

அடுத்த நாள் பள்ளிக்கு போகும் போது, அந்த முக்கூட்டில் காமுட்டி கொளுத்திய கரி தரையில் படிந்து கிடப்பதை நின்று பார்த்து வியப்போம்.

மந்தான் மறுபடியும் முத்துவின் அப்பாவாக மாறி கத்தியை ஏதோ ஒரு கல்லில் தீட்டிக்கொண்டே, சைக்கிளில் எங்கோ போய்க்கொண்டோ இருப்பார். எனக்கு எப்போதும் அவர் மன்மதனாகவே தெரிவார்.

மாசி மாதம் வந்தால் கிராமங்களில் காமுட்டி படையல் வரும். காமன் பண்டிகை என்பது ‘காமுண்டி தகனம்’ என்று ஆகி, காமுட்டி படையல், காமுட்டி கொளுத்துதல் என்றாகி விட்டது. காமுட்டி படைத்து கொளுத்தினால் அந்த ஆண்டு நல்ல மழை வரும், வெள்ளாமை விளையும் என்பது அநேக ஊர்களின் நம்பிக்கை என்பதை தாண்டி காலங்காலமாக நிகழும் வழக்கமாக மாறிவிட்டது.   இலங்கையில் மலையகத்தில் இன்றும் இந்த காமன் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  ( பார்க்க படம். எங்கள் ஊர் படம் இல்லாததால் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது இந்த படம்)

மாசி என்பது காமுட்டி படையல் எங்களுக்கு. மணக்குடியில் தோப்பறான் வீட்டு ராஜசண்முகம் குடும்பத்தினரே மொத்த காமுட்டி படையலையும் ஏற்பாடு செய்து ஏற்று நடத்துவார்கள். ஆண்டுகள் ஓடி விட்டன.

தோப்பறான் வீட்டு ராஜசண்முகம் இறந்து போய்விட்டார். அவர் தம்பியும் இறந்து போய் விட்டார்.  கூத்து மேடைக்கு அருகில் கடை வைத்திருந்த திமுக தொண்டர் சுந்தரமும் இறந்து போய்விட்டார்.
பள்ளி முடித்து கல்லூரி முடித்து எங்கெங்கோ சுற்றிய நான் இப்போது சென்னையில் வசிக்கிறேன். மந்தான் அவர்களின் மகன் முத்து டைலராகி புவனகிரியில் ஐயப்பன் கோவிலருகில் கடை வைத்துள்ளான். 

மந்தான் இன்னும் மணக்குடியில் பள்ளிக்கு எதிர் வீட்டிலேயே வசிக்கிறார். அங்கங்கே கிடக்கும் மது பாட்டில்கள், மருந்து பாட்டில்களை சேகரித்து மூட்டையாக சைக்கிளில் எடுத்துப் போய் புவனகிரியில் விற்கும் சம்பாத்தியம் பார்க்கிறாராம் மந்தான், எங்களூரின் மன்மதன்!

சிவனார் சொன்னது போல் மன்மதன்கள் சில கண்களுக்கு மட்டுமே தெரிகிறார்கள்.

நேற்று மாசி பௌர்ணமி – காமுட்டி படையல் நாள்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
28.03.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *