மஞ்சளாறு பாயும் அந்த ஊரு

wp-16151251877117480122333963145405.jpg

‘பச்சக் கிளி பாயும் ஊரு
பஞ்சு மெத்தப் புல்லப் பாரு
மஞ்சளாறு பாயும் அந்த ஊரு…’

இந்தப் பாடலைக் கேட்டிருக்கிருக்கிறீர்களா?  ‘கருத்தம்மா’ படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள் இவை.

….

கடல்மட்டத்திலிருந்து 2133 மீ (கிட்டத்தட்ட 7000  அடி) உயரத்தில் இருக்கும் கொடைக்கானல் மார்ச் மாத காலை 6 மணிக்கு 11 டிகிரியில் இருக்கிறது.

சங்க காலத்தில் இது கோடை மலை என்ற பெயரில் இருந்ததாகவும், கடியநெடுவேட்டுவன் என்பவன் அதை ஆண்டதாகவும் ( கடிய – நெடு – வேட்டுவன்… என்ன ஒரு பெயர்! இப்படி வைக்கனும் பேரு!), அவனைத் தாக்கி பண்ணி என்பவன் வென்று ஆண்டதாகவும் ஒரு கதை இருக்கிறது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிச் செடிகள் ஒரு மலை முழுக்க இருப்பதால் அதன் பெயர் குறிஞ்சி மலை என்றும், அதிலிருக்கும் முருகன் கோவில் குறிஞ்சி மலை ஆண்டவர் என்றும் வழங்கப்படுகிறது என்பதைத் தாண்டி, இங்குதான் முருகனும் வள்ளியும் காதல் புரிந்தார்கள் என்று சொல்லப்படும் கதை நம்மை ஈர்க்கிறது. ‘வேள்பாரி’யில் சு வெங்கடேசன் சொல்லும் முருகன் வள்ளி காதல் கதையும் தொடக்கத்தில் அவர்கள் இந்த மலைத்தொடரில் எங்கோதான் இருந்ததாகவும் பின்பு பயணித்து வேறுவேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்ததாகவும் வருகிறது.

தளும்பும் அளவிற்கு நீர் நிரம்பி இன்றைய சுற்றுலாவின்  மையமாகத் திகழும் நட்சத்திர ஏரி, தொடக்கத்தில் ஓர் ஏரியே இல்லை, அங்கு ஓடிய பல சிற்றாறுகளை தடுப்பணையால் தடுத்து ஓர் ஏரியாக மாற்றினான் ஒரு பிரித்தானிய ஆட்சியாளன் என்பதை நம்பவேமுடியவில்லை. ‘முன்ன மாதிரி இல்ல பரமன் ஃபுட் அங்க இப்போ!’ என்று இன்றைய தலைமுறை குறைகூறினாலும், கொடைக்கானலின் முக்கிய சிறந்த அமைப்பு கொண்ட விடுதி கார்ல்ட்டன் என்பேன். அறையின் பின்கட்டைத் திறந்தால் முழு ஏரி என்ற அமைப்பு ஒரு உன்னத உணர்வைத் தரும்தானே.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இங்கு பளியர் இனமக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய எச்சங்களை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

மலையிலிருந்து கீழ் நோக்கிப் பயணிக்கும் போது, ‘இன்னைக்கு இது மலைகளின் இளவரசி, கும்ன்னு பயணிக்கறோம். மொதோமொதல்ல இந்த மலைக்கு இப்படி சுத்தி சுத்தி கார் போற பாதையே இருந்திருக்காதே! எவன் போட்டுருப்பான் இதை? தேரோட்டிய மன்னர்களா, காரோட்டும் காலத்து அரசாங்கமா?’ எண்ணம் வரவே செய்கிறது. குதிரையில் சென்று கொண்டிருந்ததை மாற்ற ஒரு பிரித்தானிய கலெக்டர் ஒருவன் இந்தப் பாதையை வேய்ந்திருக்கிறான்.

இன்னமும் குதிரையைப் பயன்படுத்துகிறார்கள், மலைப்பாதையில் கடை வைத்து பிழைப்பை நடத்தும் மக்கள். நகரில் நாம் பார்க்கும் குதிரைகளைப் போலல்லாமல் உயரம் குறைந்த, ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் வரும் குதிரையைப்
போல மினி குதிரைகளாக இருக்கின்றன.

கொடைக்கானல் மலையிலிருந்து இறங்கும் போது,
கருத்தம்மா படத்துப் பாடலின் வரிகளில் வரும் மஞ்சாளாற்றைப்  பார்த்தேன் இன்று மாலை.  இல்லை, இல்லை மஞ்சளாற்று அணையை உயரத்திலிருந்து பறவைப் பார்வையில் பார்க்க முடிந்தது. (‘சீனாவின் துயரம்’ என்று நாம் ஏழாம் வகுப்பு படித்த போது பாடத்தில் வந்ததே அந்த சீனத்து மஞ்சளாறு அல்ல)

( பார்க்க படம் )

தனக்காக தான் படகு விடுவதற்காக ஓர் ஏரியை அமைத்து தூத்துக்குடியிலிருந்து படகை கொண்டு வந்து விட்டிருக்கிறான் ஒரு பிரித்தானிய அதிகாரி!   அந்தப் பளியர் இன மக்கள் என்னவாகியிருப்பார்கள். அவர்களின் சந்ததியினர் எவரேனும் இன்னும் எங்காவது இருப்பரோ!

– பரமன் பச்சைமுத்து
கொடைக்கானல்
07.03.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *