ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா…

wp-1615802964512.jpg

ஊஞ்சலிலாடாத குழந்தைகள் கூட இருக்கலாம், ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா என்பது என் கேள்விக்குறி.

ஊஞ்சல் வீடுகளின் அழகை கூட்டுகிறது, தமிழ் திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமாரின் நாயகர்களின் பிம்பம் உயர்த்தப் பயன்படுவது என்பனவன்றைத் தாண்டி ஊஞ்சலைக் காண்கையில் உள்ளே குதூகலம் வருகிறது, உள்ளிருக்கும் குழந்தைமை விழிக்கிறது என்பனவும் உண்மை.

மயிற்பீலியணிந்து கண்கள் மூடி  குழலூதும் கண்ணனும், கண்கள் செருகி அவனருகில் கிறங்கிய நிலையிலிருக்கும் ராதையும், மரக்கிளையில் கட்டப்பட்ட நதிக்கு மேலே தொங்கும் ஊஞ்சலில் இருப்பதாக வரையப்படும் ஓவியங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன்.  மணிரத்னம் படத்து காட்சிகளின் கூடவே வரும் மழையைப் போன்றது அந்த ஊஞ்சல். அந்த ஓர் ஊஞ்சல் மொத்த ஓவியத்தின் உணர்வையும் மாற்றிப் போட்டு விடும். ஊஞ்சலைத் தவிர வேறு எதை அந்த ஓவியர் சேர்த்திருந்தாலும் அந்த உணர்வு வராது, வந்திருக்காது.

ஊஞ்சல் தொங்கினாலும் அழகு, இங்கும் அங்கும் நகர்ந்து ஆடினாலும் அழகு. காதலனோ கணவனோ ஒரு பெண்ணை கைகளில் ஏந்தித் தூக்கும் போது ஒரு குபீர் பரவச உற்சாகம் வருமென்று ஒரு தோழி சொல்லக் கேட்டிருக்கிறேன். ஓர் ஊஞ்சல் இதை எல்லாருக்கும் தருகிறதென்பது என் எண்ணம்.  உயரத்தில் போகும் போது பரவசமும், அடுத்து திடீரென்று கீழே விழுவதைப் போல இறங்கும் போது ஒரு பதற்றமும் கிளம்பி அடிவயிற்றில் கூசுவதைப் போன்ற அந்த உணர்வு வித்தியாசமான அனுபவம்.

‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்ற ஒரு வழக்கில் எல்லாத்தையும் சொல்லி விடுகிறார்கள்.

பள்ளிப் பருவத்தில் புவனகிரி ஜோ வீட்டிற்கு ஊஞ்சலுக்காகவே போனதும் உண்டு.  அந்த ஊஞ்சலிலேயே படுத்து உறங்கியதும் கூட உண்டு.  

மகள்கள் குழந்தையாயிருந்த போது அவர்களுக்கு வாங்கிய சிறு பிளாஸ்டிக் ஊஞ்சலில், பேத்தியை மடியில் வைத்தமர்ந்து என் தந்தை ஆடியது நினைவுக்கு வருகிறது.  நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலுக்கு வெளியே தழைத்து நிற்கும் ஆலமரங்களின் விழுதுகளை இணைத்து முடிச்சிட்டு எவரோ செய்துள்ள ஊஞ்சலில் நான் அமர்ந்து ஆடி படமெடுத்துக் கொண்டதும் உண்டு.

சில நெடுஞ்சாலை உணவகங்களின் வெளி முகப்பில், நகரின் சில பூங்காக்களில் ஒரு பகுதியில் சிறுவர்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் ஊஞ்சல்களைப் பார்த்து விட்டு, பெரியவர்கள் ஓடிப் போய் அமர்ந்து வாயெல்லாம் பல்லாக ஊஞ்சலாடி மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன்.

ஊஞ்சல் அழகு. அது, ஒருவருக்கு உள்ளிருக்கும் குழந்தைமையை குதித்து வெளிவரச் செய்துவிடுகிறது.

(படம் – பெங்களூருவில் நண்பன் பாலமுருகன் வீட்டில் இருந்த ஊஞ்சலில் இன்று காலை அமர்ந்து மகிழ்ந்த பொழுது)

– பரமன் பச்சைமுத்து
கிருஷ்ணகிரி
15.03.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *