சாய்ந்து கொள்ள ஒரு தோள்…

wp-1617080021159.jpg

மகிழ்வான தருணங்கள், துயரமான நேரங்கள், இவை எதுவுமில்லாமல் வெறுமனே இருக்கும் சமநிலையான நேரங்கள் என எதுவாயினும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் இருப்பது வாழ்வின் பெரும் வரம்.

அம்மா மடி, அப்பாவின் தோள், வாழ்க்கைத்துணையின் நெஞ்சு, ஆசானின் தாள், தோழமையின் அரவணைப்பு என மனிதர்க்கு சாய ஓரிடம் தேவைப்படவே செய்கிறது.  ‘சாய்ந்து கொள்ள ஒருவர்’ என்பது உண்மையில் உடலின் தேவையன்று, உள்ளத்தின் தேவை. உணர்வின் தேவை. 

‘கொடுக்கப்பட்டோரே கொடுத்து வைத்தவர்’… சாய இடம் கொடுக்கப்பட்டோரே கொடுத்து வைத்தவர் என்பதே இங்கிருக்கும் மனப்பான்மை.

மனிதர்கள் சரி, பறவைகள்? பறவைகளும் சாய தோள் தேடுமா? இன்று வரை இப்படி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை நான், இந்தப் பறவைகளை இப்படிப் பார்க்கும் வரை.

பெரும்பாக்கம் சுங்கச்சாவடியை நெருங்கும் வேளையில் இடப் பக்கம் ஏரி கூழைக்கிடாக்களும் பூநாரைகளும் நீர்க்கோழிகளும் என பறவைகளால் நிறைந்திருக்க, பறவைகளைப் பார்த்தாலே பரவசப்படும் நான், படமெடுக்க இறங்குவேன்தானே!

படம் எடுக்கும் வரையில் இது தெரியவில்லை. தூரத்திலிருப்பதை குவியம் பண்ணிப் பார்க்கையில் ‘ஐயோ! அட…!’ என்று அதிர்ந்தது உள்ளம்.

‘டேய் பரி, அதானடா?’

‘ஆமாம்னா, சாஞ்ச்சிட்டு இருக்கு!’

தூரத்தில் இரு பறவைகள், ஒன்று சாய்ந்து கொண்டும் ஒன்று சாய்ந்து வாகாக காட்டிக்கொண்டும் உட்கார்ந்திருந்தன… அல்லது நின்றன!? பறவைகள் உட்காருமா என்ன? காலை உந்தி கிளம்பி சிறகை அசைத்துப் பறக்கும், சிறகை நிறுத்தி காலை நீட்டி தரையில் மரத்தில் இறங்கி நிற்கும், நடக்கும்! எப்படி உட்காரும்!

இரண்டு பறவைகள் தூரத்தில், காலை இரை உண்டு களித்து மகிழ்ந்து கரைந்து கிடக்கின்றன போலும். எதைப்பற்றியும் பிரஞ்ஞை இல்லை அல்லது எதன் மீதோ முழு பிரஞ்ஞை கொண்ட நிலையில் உறைந்து கிடந்தன, ஜென் நிலை போல.

சாய்ந்து கொண்டிருக்கும் பறவையிலிருந்து என் கண்கள் அருகிலிருக்கும் பறவைக்கு தாவுகிறது. உள்ளம் நிற்கிறது.

சாய்ந்து கொள்ள ஓரிடம் ஒரு தோள் கிடைப்பதே வரம் என்றால், தோள் கொடுக்கும் ஆளாக இருப்பது?

– பரமன் பச்சைமுத்து
குளோபல் மருத்துவமனை,
பெரும்பாக்கம்
30.03.2021

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *