வாக்கு செலுத்தும் படலம்

wp-1617689855881.jpg

‘வெய்ய வர்றதுக்குள்ள போய் ஓட்ட போட்டுட்டு வாயேன்!’

‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்!’

இந்த இரண்டுதான் தேர்தலில் வாக்களிப்பதை இயக்குகிறது என்று நினைக்கிறேன்.  மணக்குடியிலும் இதே கதைதான்.

பல தேர்தல்களாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்த (கீழ)மணக்குடி இப்போது சில தேர்தல்களாக சிதம்பரம் தொகுதியில் இருக்கிறது.

படித்த பள்ளிக்கே திரும்பிப் போவது என்பது தேர்தல் நாளன்று நடக்கும், பள்ளிதான் எங்களூர் வாக்குச் சாவடி. ஒட்டு மொத்த ஊருக்கும் ஒரே இடத்தில்தான் வாக்குப் பதிவு என்று ஊரார் சொன்னாலும், மணக்குடியில் 2 வாக்குச்சாவடிகள் என்பது அலுவலர்களுக்கே தெரியும். 1058 ஓட்டுக்கள் கொண்ட மணக்குடியில் 2 வாக்கு இயந்திரங்கள் வைத்து (எண் 42, எண் 43) இரண்டாய்ப் பிரித்து அடுத்தடுத்த அறையில் 2 வாக்குச்சாவடிகள் வைத்து வாக்குப் பதிவு நடைபெறுகிறது பல தேர்தல்களாக.

‘பதற்றமில்லா வாக்குச்சாவடி’ என்று போன முறை அச்சடித்த அலங்கார வளைவுகள் எல்லாம் வைக்கப்பட்டிருந்த மணக்குடி வாக்குச்சாவடியில் இம்முறை வாசலில் வாழை மரங்களும், நடைபாதையில் தென்னை ஓலைகளும் (‘பச்சைக் கம்பளம்’ வரவேற்பு) மட்டுமே இருந்தன. 

உள்ளே நுழையும் போதே சுவாசக்கவசம் அணிந்து நின்றிருந்த பதின்ம வயது பையன்கள் மூவர் வரவேற்றனர். ஒருவன் சினிமாவில் சுடுவது போல ‘டெம்ப்பரேச்சர் கன்’னை நெற்றிக்கு நேராய் வைத்துக் கொண்டும், ஒருவன் கிருமி நாசினி தெளித்துக் கொண்டும், இன்னொருவன் பிளாஸ்ட்டிக் கையுறை தந்து கொண்டும் இருந்தார்கள்.

‘டேய் நீங்கள்லாம் எந்த ஊர்ரா?’

‘இதே ஊருதான்!’

‘வீடு எங்க?’

‘ஏரி மேடு!’

‘ஓ!’ என்றவாறு கடந்து போனவனை நிறுத்துகிறது ஒருவனின் வாக்கியம்.

‘உங்க புக்குல்லாம் பாத்துருக்கேன்!’

‘ஓ… எங்க பாத்த?’

‘இதே ஸ்கூல்லதான் படிச்சேன்!’

‘நானுந்தான்’

உள்ளே நுழையப் போகும் வழியில் இடப்பக்கம் வெய்யிலில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் சிலர் தரையில் அமர்ந்திருக்க, வேறொரு வெள்ளை சள்ளை சாம்பார் – சட்டினி – பிளாஸ்டிக் பொட்டலம் கொண்டு வந்து தருகிறது. வாக்குச்சாவடி உதவிப்பணியாளர்கள் போல. பாவம், அதிகாலை வந்திருப்பார்கள்,  இப்போது 09.25க்குதான் வெய்யிலில் உட்கார்ந்து காலை உணவு.

உள்ளே நுழையுமுன் நீல வண்ண பனியன் துணி சுவாசக்கவசம் அணிந்த, பெல்ட் இல்லாமல் காக்கி உடையணிந்த காவலர்.  வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால் வலப்பக்கம் பெரியவன் ( அவன் பெயரே அதான்). இடப்பக்கம் மரப்பெஞ்சில் மூன்று பேர் கையில் வாக்காளர் விவரம் கொண்ட தாள்களோடு.  முதலில் உட்கார்ந்திருப்பது ஹரிகிருஷ்ணன்.

‘வாண்ணே!’

‘அரிகிருஷ்ணா! சாப்டியா?’

‘இல்ல சிவா. இப்பதான் போகனும்!’

எனது எண் சொல்லப்பட்டு, அவர்கள் கையிலிருக்கும் தாள்களில் எனது பெயர் விவரங்கள் சரி பார்க்கப்படுகிறது. மூன்று பேரும் அவரவர் தாள்களில் டிக் அடித்துக் கொள்கிறார்கள். நம்மிடம் இருக்கும் பூத் ஸ்லிப்பில் ஃபோட்டோ இல்லை என்றாலும், அவர்கள் கையிலிருக்கும் தாள்களில் நம் ஃபோட்டோ இருக்கிறது.

‘தம்பீ, நீங்க கூட்டிட்டு வரலாம். ஓட்டு போட அவர்தான் போகனும். அங்க நீங்க போகமுடியாது. வெளியே இருங்க!’ நமக்கு முன்னே நின்ற ஐந்து பேர்களில் ஒருவருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. சிறிய வரிசைதான். நான் ஆறுவதாக, பரி ஏழாவதாக. அவனுக்குப் பின்னே யாரும் இல்லை. ‘கூட்டமே இல்லையே!’

அடுத்தது வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர்கள் இருவர் அடுத்தடுத்து. வெய்யிலில் மின் விசிறி காற்று சரியாக வராத இடத்தில் நனைந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

‘ஸ்லிப், வோட்டர் ஐடி’

‘இங்க கையெழுத்து போடுங்க! இந்தாங்க!’

‘பேனா கொண்டு வந்துருக்கேன்! இங்கயா!?’

அடுத்த அலுவலருக்கு நகர்ந்தால், ஒரு பிஸ்கட் வண்ண துண்டு தாளில் ஓர் எண்ணை எழுதிக் கொள்கிறார். ‘டேபிள்ள வைங்க விரல’ என்ற படி நம் இடது கை ஆட்காட்டி விரலில் மை இடுகிறார்.  ‘போங்க, போய் போடுங்க!’ என்கிறார் எதிர்ப்புறம் காட்டி.

எதிர்ப்புறம் போனால் மறைவிடத்தில் படுத்துக்கிடக்கிறது வாக்கு இயந்திரம்.  சில நொடிகளில் நாம் விரும்பிய சின்னத்தை தேடிக் கண்டு, அதற்கு நேராக இருக்கும் பொத்தானை அமுக்கினால், வலது புறம் சிவப்பு விளக்கு ஒளிர்கிறது.  வெளியே வலப்புறத்தில் வைக்கப் பட்டிருக்கும் ‘விவி பேட்’ கருவியின் திரையில் நாம் வாக்களித்த சின்னம் சில நொடிகள் காட்டப்படுகிறது. பிறகு ‘பீப்’ என்ற சத்தம் வந்து ‘அடுத்த வாக்காளருக்கு தயார்!’ என்று இயந்திரம் சொல்லும்போது நம் ‘வாக்குப் பதிவு செய்யும் படலம்’ முடிகிறது.

திரும்பி வரிசையைப் பார்க்கிறோம் திடீரென்று 20 பேர் நிற்கின்றனர்.’கூட்டம் வருது. ம்ம் எப்படி பார்த்தலும் 10 நிமிஷத்துல ஓட்டு போட்டுட்டு வெளிய வந்துரலாம்!’

வெளியே வந்தால் அதே மூன்று ஏரி மேட்டு பையன்கள் கிருமிநாசினி, ‘டெம்ப்பரேச்சர் கன்’ ஏற்பாடுகளோடு.

‘வா சிவா… வா!’

‘மோகன்!’ ( பிரசிடெண்ட், வாக்குச்சாவடி உதவி பணியாளர், பள்ளி வகுப்புத் தோழன்).

நாற்காலியைப் போடுகிறார்.

‘உட்காரு சிவா!’

‘யெப்பா! இங்க உட்காரக் கூடாது!’

‘சரி, வீட்டுக்கு வரேன்!’

வெளியே வந்து, வீடு நோக்கி வருகிறோம்.

‘டேய்… ஒரு வழக்கமான உற்சாகமும் இல்ல, கூட்டமும் கம்மியா இருக்கு!’

‘இனிமே வருவாங்கன்னு நெனைக்கறேண்ண!’

‘டேய் பரி! யாருக்குப் போட்ட?’

‘அண்ணே…’ அந்த’ கட்சிக்குப் போட்டேண்ணா!’

‘சூப்பர் போ!’

– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
06.05.2021

#TnElection2021
#TnAssemblyElection
#Manakkudi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *