ஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது…

ஒரு வேட்டியை எடுத்துப்  பிரித்துக் கட்டும் போது உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? 

வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை இடுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள்?
…..

நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே!’ என்று மறுபக்க ‘கவுண்ட்டர்’ கருத்துகளை வைப்பது என் இயல்பு. இதனாலேயே சில வாட்ஸ்ஆப் குழுக்களில் நான் பிஜேபி எதிர்ப்பாளனாகவும், இன்னும் சில குழுக்களில் ஆளுங்கட்சி சார்பு கொண்டவனாகவும் வண்ணம் பூசப்படுகிறேன்.

என் தந்தையின் கருத்துகளோடு உணர்வுகளோடு பகிர்வுகளோடு எவ்வளவு உடன்படுகிறேனோ கிட்டத்தட்ட அதே அளவு அவரிடம் மாற்றுக்கருத்தை வைத்து விவாதித்திருக்கிறேன் (மாற்றுக்கருத்தை மதிக்கும் ஏற்கும் பெருந்தகை அவர்! ‘வளர்ச்சி’ பதில்களில், ‘முதுமையைக் கொண்டாடுவோம்!’ என வளர்ச்சி இதழின் பகுதிகளில் நாம் வைத்த மாற்றுக் கருத்துகளை படித்து விட்டு அழைத்து அல்லது வாசகர் கடிதமெழுதி கொண்டாடுவார்)

மணக்குடியில் நிகழும் நல் நிகழ்வு ஒன்றிற்குத் தயாரான பொழுது அது. தோட்டத்து தொட்டியிலிருந்து நீரை அள்ளி ஊற்றிக் குளித்து விட்டு வந்து அம்மா வைத்திருந்த வேட்டியை எடுத்துப் பிரிக்கிறேன். ஒரு பக்கம் பச்சை வண்ண பார்டரும் மறு கீழ் முனை பக்கம் சிவப்பு வண்ண பார்டரும் கொண்ட,  சலவையிலிருந்து வந்த வேட்டி.

‘அருணாச்சலம்’ படத்தில் பச்சை வண்ண பார்டர் காலில் புரள தழைய தழைய ரஜினி வேட்டி கட்டியிருக்கும் விதம்  பிடிக்குமெனக்கு.  ‘இந்த மாதிரி வேட்டிய வாங்ஐஇட்டு வராதன்னா கேக்க மாட்டியா நீ?’ என்று சித்தப்பா கடிந்து கொண்டாலும் அதைக் கேட்காமல் அந்த வகை வேட்டியையே எல்லோருக்கும் நான் வாங்கிப் போவது அருணாச்சலம் படமும் ஒரு காரணம்.

வேட்டியைப் பிரித்து ஒரு நுனியை பல்லில் கடித்து, இரு பக்கமும் கைகளோடே வேட்டியைப் பரப்பி விரித்துக் கொண்டு போய் வலது கையை மடக்கென்று மடித்து வேட்டியை இடுப்பில் வைத்து அதன் மீது பல்லில் பிடிபட்டிருக்கும் முனையை விட்டு இடது கையோடு வேட்டியை கொண்டு வரும் போது, அப்பா குரல் உயர்த்தினார். பொதுவாகவே உயர் குரலில்தான் அவர் பேசுவார்.

‘வேட்டியோட  பச்சை பார்டர் பக்கத்தை மேல இடுப்பில வச்சி, சிவப்பு பார்டர்தான் கீழ இருக்கற மாதிரி கட்டணும்!’

எங்கோ கோயிலில் முருகன் சிலைக்கு கட்டுவது போல கட்டச் சொல்கிறார் போல.

‘அப்ப்ப்ப்பா… வேட்டியில பச்சை பார்டர், சிவப்பு பார்டர் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்ததுப்பா. 100 வருஷம் இருக்குமா, சரி 300 வருஷம் இருக்குமா? அரையில் ஓர் உடை இருக்கனும் அதுதானேப்பா முறை, விதி, பண்பாடு எல்லாம்.   பச்ச கலர் மஞ்ச கலருக்குல்லாம் சும்மா விதி எப்படி போட முடியும்? இதான் முறைன்னு எப்படி சொல்ல முடியும்? யாரு வச்ச முறை இது? சும்மா எவரோ அவராவே ஆரம்பிச்ச விதியா இது?  பொள்ளாச்சி கவுண்டர்கள் கட்டற வேட்டி மாதிரி எந்த பார்டரும் இல்லாம எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க? சைவம் வந்த காலத்தில வேட்டி இப்ப இருக்கற மாதிரி இருந்துதான்னே தெரியாதேப்பா!’ 

இதைச் சொல்லாமென நினைக்கும் போது நிகழ்விற்கு புறப்பட மர பெஞ்சிலிருந்து எழுந்து வாசல் நோக்கி நடந்து விட்டார்.  இதை பகிரவே முடியவில்லை.  ஒவ்வொரு முறை மணக்குடி செல்லும் போதும் இதை பகிர்ந்து விட வேண்டும், கேட்டு விட வேண்டும் என்று நினைப்பதுண்டு. எதனாலோ அது நிகழவே இல்லை.

அப்பா இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது. வெறும் வார்த்தையாயிருந்த ‘அமாவாசை’ இப்போது அடர்கனம் பெற்றதாயிற்று எனக்கு. ஒவ்வொரு அமாவாசையிலும் இலையில் அன்னமிட்டு நீத்தாருக்கு படையல் செய்ய வேண்டும் என்ற குடும்ப மரபு இப்போது  என் வழியே தொடர்கிறது.

‘ஏங்க இலை போட்டாச்சு. படைக்கலாம்!’

அடுத்த அறையிலிருந்து குரல் கேட்க, குளித்து விட்டு வந்து அப்பா விட்டுப் போன வேட்டி ஒன்றை எடுத்துப் பிரிக்கிறேன், இடுப்பில் கட்டிக்கொண்டு படையல் செய்ய.

‘வேட்டியோட  பச்சை பார்டர் பக்கத்தை மேல இடுப்பில வச்சி, சிவப்பு பார்டர்தான் கீழ இருக்கற மாதிரி கட்டணும்!’

‘அப்ப்ப்ப்பா…. அப்ப்ப்ப்பா… வேட்டியில பச்சை பார்டர், சிவப்பு பார்டர் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்ததுப்பா. 100 வருஷம் இருக்குமா, சரி 300 வருஷம் இருக்குமா? அரையில் ஓர் உடை இருக்கனும் அதுதானேப்பா முறை, விதி, பண்பாடு எல்லாம்.   பச்ச கலர் மஞ்ச கலருக்குல்லாம் சும்மா விதி எப்படி போட முடியும்? இதான் முறைன்னு எப்படி சொல்ல முடியும்? யாரு வச்ச முறை இது? சும்மா எவரோ அவராவே ஆரம்பிச்ச விதியா இது?  பொள்ளாச்சி கவுண்டர்கள் கட்டற வேட்டி மாதிரி எந்த பார்டரும் இல்லாம எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க? சைவம் வந்த காலத்தில வேட்டி இப்ப இருக்கற மாதிரி இருந்துதான்னே தெரியாதேப்பா!’ 

எப்போதும், பேசிய வார்த்தைகளை விட பேசாமல் விட்டவையே தொண்டையில் நின்று கொண்டு அழுத்துகின்றன.

இப்போதெல்லாம் வேட்டி கட்டும் போது ‘அருணாச்சலம்’ நினைவில் வருவதேயில்லை, அப்பாதான் வருகிறார்.

‘நீங்க பாட்டுக்கு சும்மா சொல்லிட்டு போயிட்டீங்கப்பா!’

பச்சை வண்ண பார்டரை மேற்புரம் வைத்து, நுனியை பல்லில் கடித்து கைகளை விரித்து வேட்டியை கட்ட முயற்சிக்கிறேன். கால் பக்கம் சிவப்பு வண்ண பார்டர் புரள்கிறது. இப்போதெல்லாம் இப்படித்தான்.

( இன்று அமாவாசை )

– பரமன் பச்சைமுத்து
11.04.2021
ஆர் ஏ புரம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *