சிவமென்பது உருவமா? – பரமன் பச்சைமுத்தெ

சிவமென்பது உருவமா?
ஓருருவத்திற்குள்ளே அடைபடுவதா இறை?
அது உருவங்கடந்த ஒரு நிறை

சிவமென்பது இல்லை சிலை,
அது ஓர் உன்னத நிலை.
சிவமென்பது உருவமல்ல,
சிவமென்பது உணர்வு

‘ஐயாவென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’ என்னும் திருவாசகத்து வரி
கொள்கிறது சிவமென்பது உருவமில்லா நெறி

உருவத்தை வணங்கியபோது வெறும்மனிதனாயிருந்த
பாண்டிய முதலமைச்சன்
உருவமில்லா பெருந்துறையின் கருவறையில் உறைந்தபோதே
மாணிக்கவாசகன் ஆனான்

உருவங் கடந்தவனே சிவநிலையை நெருங்குகிறான்
உள்ளே சமநிலையை தாங்குகிறான்

சிவமென்பது வெளி உருவமல்ல,
சிவமென்பது உள்ளே கொள்ளவேண்டிய நெறி

சிவனுக்கு நெருக்கமாகி சிவநிலையடைந்தோர்
சிவனருட்செல்வர்கள் எனும் நாயன்மார்கள் என்கிறது பெரிய புராணம்

நாயகனை உருவமாக வழிபட்டதால் மட்டும் நாயன்மார்கள் ஆகவில்லை அவர்கள்.
நாளும் சில நெறிகளைப் பற்றி
நல்லுணர்வுகளை மேம்படுத்தியதால் நான்மறையோன் இறங்கிவர
நாயன்மார்கள் ஆனார்கள் அவர்கள்

வஞ்சிமீது பால் மயக்கம் கொண்ட திருநீலகண்டக்குயவன்
வாக்கு மாறா நிலைக்கு வந்ததால் திருநீலக்கண்ட நாயன்மாராகினான்

செந்நெல் விளைவிக்கும் வேளாளன்
எதுவரினும் அடுத்தவர் பசி தீர்க்கும் செயல் விடேன் என்னும் நிலைக்கு வந்ததால் இளையான்குடி மாற நாயன்மாராகினான்

கடைவீதியில் நடந்த சென்ற சாதாரன மனிதன்
தன்னுயிர் ஈந்தேனும் தன்மக்களைக் காத்திடணும் என்ற நிலைக்கு வந்து யானையை எதிர்த்ததால் எறிபத்த நாயன்மாராகினான்

குடும்பம் குட்டியென்றே வாழ்ந்த
ஓர் எளிய மனிதன்
விருந்தினர் வேண்டின் தன் விருப்பு வெறுப்பை கடந்து தன் பிள்ளையையே அரிந்து தருவேன் என்ற நிலைக்கு வந்த போது சிறுதொண்டநாயன்மாராகிறான்

சைவ நீதியின் முக்கிய நூல் பெரியபுராணம் பகல்வதெல்லாம்
சிவனருட்செல்வர்களாகிய நாயன்மார்களெல்லாம் சிவத்தை நெருங்கியது
உருவத்தை வணங்கியல்ல, நெறிகொண்டு நடந்ததால் நிலை கொண்டு எழுந்தனர் அவர் என்பதே

சிவமென்பது உருவமல்ல, உணர்வு.
சிவமென்பது அல்ல சிலை, அது கொள்ளவேண்டிய ஒரு நிலை

சிவத்தை வணங்கும் சைவம் சொல்கிறது கோயில் என்றாலே அது தில்லை.
அங்கே உண்மையில் உள்ளே இல்லை சிலை!

உருவங்கடந்ததே இறை
அதை உணர்வோர் உள்ளே கொள்வர் நிறை

இறையை வணங்குவோம்!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து

காஞ்சிபுரம்

24.02.2017

MahaSivarathri

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *