‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ – தமிழ்மகன் : பரமன் பச்சைமுத்து

wp-1619008359356.jpg

ஆதியில் அண்டப் பெருவெளியில் நிகந்த பெரு வெடிப்பின் (‘பிக் பாங்’) பின் நிகழ்ந்த மாற்றங்களில் இந்தப் பிரபஞ்சம் உருவானது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் உருவானபோதே இன்னும் சில பிரபஞ்சங்களும் உருவாகியிருக்கலாம், இந்த உலகில் இப்போது நீங்களும் நானும் பேசிக்கொண்டிருப்பதைப் போலவே, அங்கும் ‘இணைப் பிரபஞ்சம்’ எனப்படும் பேரலல் யுனிவர்ஸ்ஸிலும் இருவர் பேசிக்கொண்டிருப்பர் என்பது அறிவியலாளர்கள் சிலர் கொண்டிருக்கும் கருத்து.

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை பாத்திரங்களை வைத்து அனிமேஷன் கேம்ஸ் உருவாக்கும் ஒரு குழு, பெங்களுருவின் புறநகர்ப்பகுதியில் ஆசிரமம் நடத்தும் ஒரு சாமியார், ஃபிரான்சுக்கும் ஸ்விஸ்ஸுக்கும் இடையில் 574 அடி ஆழத்தில் ‘கடவுள் துகள்’ உருவாக்குவதற்காக ஒரு அணு ஆராய்ச்சி நடந்ததே அது சம்மந்தமாக ஆய்வு செய்யும் டெல்லி பேராசிரியர், சென்னை மெரீனாக் கடற்கரையில் இளம்பெண்களை குறிவைத்து இயங்கும் ஒரு செல்ஃபோன் திருடன், இவர்களோடு இணைப் பிரபஞ்சம் கலந்து ஒரு விறுவிறுப்பான அறிவியல் புனைவு திரில்லர். இணைப் பிரபஞ்சம் பற்றி தமிழில் வரும் முதல் புனைவு இதுதான் என்று நினைக்கிறேன் (இந்திய மொழிகளிலேயே கூட இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை)

தமிழ் எழுத்தாளர் என்பதோடு இயற்பியல் துறையாளர் என்பது தமிழ்மகன் அவர்களுக்கு கூடுதல் பலம். ஹிக்ஸ் போசன், செர்ன், பேரலல் யுனிவர்ஸ் என கதை நெடுக அறிவியலை அழகாக துல்லியமாக கலந்து சுவராசியமாக இருக்கும்படி தந்து விடுகிறார்.

சரியான இயக்குனர்கள் கையில் இது சேர்ந்தால் ஒரு விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாகவே இது உருவாகலாம் அல்லது அமேசான் ப்ரைம் குழுவிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயம் படம் பண்ணிவிடுவார்கள்.

விகடனில் தொடராக வந்து, உயிர்மை பதிப்பகத்தால் தொகுப்பட்டு நூலாக வந்திருக்கிறது – ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’.

அதிகம் வாசிப்பு வழக்கம் கொண்டவரென்றால் ஒரு நாளில், மற்றவர்கள் இரண்டு அல்லது மூன்று நாளில் வாசித்து முடித்துவிடலாம் இந்த அறிவியல் புனைவு நூலை.  அறிவியல் புனைவு, திரில்லர் கதைகள் விரும்புவோருக்கான புனைவு.

நூல்: ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’

வகை : அறிவியல் புனைவு

ஆசிரியர் : தமிழ் மகன்.

பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *