மனிதகுலம் கிமு 6000

கிமு 6000த்தில் வால்கா நதிக்கரையில் வாழ்ந்த ‘இந்தோ ஸ்லாவியா’ இன மனிதர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

‘வேள்பாரி’யில் ஆதி மனிதர்கள் தாய் வழி சமூகம் கொண்டிருந்ததாக சு வெங்கடேசன் எழுதியிருப்பாரே, அப்படியிருந்திருக்கிறது இவர்களின் வாழ்க்கை.
பத்து பதினாலு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவி மூத்த தாய் வழியில் குடும்பம் நடத்தப் பட்டிருக்கிறது. அவரின் சந்ததியோடு குடும்பம் நடக்கிறது. விவசாய அறிவை பெறாத அந்தக் காலமதில், ஓநாய், கரடி, முயல், மீன் என கிடைத்ததை வேட்டையாடுகிறார்கள். தாய் இவரென்று சொல்ல முடிகிறது. தந்தை எவரென்றே சொல்ல முடியாத வாழ்க்கை. இருக்கும் ஆண் பெண்களில் இணைகளை அவ்வப்போது தேர்ந்து உணர்வைத் தீர்த்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் வாழ்வு எல்லைக்குள் வேற்று கூட்டமோ வேற்று மனிதர்களோ இல்லாத போது, ஆண் பெண் இணைக்கு வேறு எங்கு செல்வார்கள். தந்தை, சகோதரன் என்ற எதுவும் அவர்களை தடுக்கவில்லை. ஆண் – பெண், அப்போதைய தேவை அவ்வளவே!

எவரும் உடையணியவில்லை. பனிக்காலமதில் வேட்டைக்கு வெளியே போகும் நேரத்தில் விலங்குகளின் தோல்களை உடைகளாகத் தரித்திருக்கிறார்கள். திரும்ப குகைக்கு வந்ததும் உடை களைந்து மறுபடியும் இயல்பு நிலையான நிர்வாண நிலை.

வேட்டைக்கு போன இடத்தில் எவரும் மாண்டு போகலாம். குகைக்குத் திரும்பி வருவர் என்ற உத்தரவாதம் இல்லை.

எங்கிருந்து எங்கு வந்திருக்கிறது மனித குலம் என்று சிந்திக்கவே வியப்பாக இருக்கிறது!

  • பரமன் பச்சைமுத்து
    28.04.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *