நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்

கொரோனா நோய்தொற்றின் முதல் அலையை சரியாக கையாளப்பட்டதை பாராட்டும் போது, இரண்டாம் அலையை சரியாக கையாளவில்லை என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும்!

‘தேர்தலை ஒத்தி வைத்திருக்கலாம்!’ என்பது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் தெரியவில்லை. தேர்தலைத் தள்ளிப் போட அரசியல் நிர்ணய சட்டம் இடம் அளிக்காது என்பதையும் மறக்க இயாலாது.

தேர்தலை, 7 கட்டங்கள் 8 கட்டங்கள் என்று 1 மாதம் நீட்டித்து நடத்தாமல் இருந்திருக்கலாம். 

மேற்கு வங்கத்தில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் நடந்தது மாதிரியும், புதுச்சேரி தமிழகம் கேரளத்தில் கூட்டம் கூட்டமா பிரச்சாரம் நடந்ததையும் பேசுகிறவர்கள் உண்டு. எல்லாக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் இதற்கு. இங்கே திமுக பிரமுகரும் பாஐக பிரமுகரும் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் இருந்தார்கள். ஒரு வேட்பாளர் தொற்றுக்கு ஆளாகி உயிரையே இழந்தார். ஊடகங்களும் இந்த நல்லவர்களும் அப்போது தேர்தலை நிறுத்தச்சொல்லியோ பரப்புரையை குற்றமோ சொல்லவில்லை.

உத்தரப்பிரதேச கும்ப மேளாவுக்கு நெறிகள் கொண்டு வந்து  நடத்தியிருக்கலாம். ஆனால் மதத்திருவிழாக்களோ தேர்தல் பரப்புரைகளோ இல்லாத மும்பையிலும் கர்நாடகத்திலும் வேக வேகமாக பரவுகிறதே  நோய்த்தொற்று?

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் இல்லாமை என்ற இந்த நிலைக்கு மத்திய அரசு பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

இப்படி ஒரு மாதம் தேர்தல் முடிவுகளுக்கு காத்திராமல் சட்டென்று முடிவுகள் தெரிந்திருந்தால், பொறுப்பேற்கும் புதிய அரசு / கட்சி மளமளவென்று வேலைகளில் இறங்கியிருக்குமே! ஒரு மாதம் அப்படியே கிடப்பது என்பது நோய்த்தொற்று காலத்தில் பெரும் இழப்புகளையும் சிக்கலகளையும் ஏற்படுத்தும்தானே!

‘மூணு மாசமா கூட்டம் கூட்டமா எலக்‌ஷன் பிரச்சாரம் பண்ணாங்களே, அப்ப எங்க போயிருந்தீங்க? இப்ப மாஸ்க் போடலைன்னா ஃபைன் கட்டச்சொல்றீங்க, முடியாது போட மாட்டேன்!’ என்ற வகை பொதுமக்களின் கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், இதை அமல்படுத்தும் காவல்துறை மீது கோபம் கொள்வதில் நியாயமேயில்லையே. காவல்துறையை எதிரியைப் போல எதிர்ப்பதிலும் சுவாசகக் கவசம் அணியமாட்டேன் என்று முரண்டு பிடிப்பதிலும் ஒரு பலனும் இல்லையே.

மாற்றி மாற்றி அடுத்த பக்கத்தை மட்டுமே குறை கூறி அரசியல் செய்வோர் செய்வர். செய்யட்டும்.

முக்கிய சங்கதி ஒன்று…
முதல் அலைவரிசையின் போது எச்சரிக்கையாக இருந்த நம்மில் பலர் (பொதுமக்கள்), இரண்டாம் அலைவரிசையின் போது அலட்சியத்துடன் நடந்து கொண்டோம்/கொள்கிறோம் என்பதை மறுக்கவே முடியாதே!

நாம்… நாம் தான் நமக்கு! நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நம்மை சரியாக காத்துக் கொள்ள வேண்டும்.

– மணக்குடி மண்டு
29.04.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *