அச்சம் தவிர், ஆளுமை கொள் – 4

Formal dress

Employment Master 4

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் என் தொடர்வின் பகிர்வு:

நான்கு: நம் சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றியும், ஜப்பானின் டோக்யோ நகரில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும், ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல!’ ‘தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல’ ‘ஆங்கிலம் அறிந்துகொள்ள வெறும் 30 மணிநேர பயிற்சியே போதுமானது’ என்பது பற்றியெல்லாம் சென்ற வார இதழில் பார்த்தோம்.

…………………………………..

கேள்வி: ‘மயிலாடுதுறையில் முதுகலைப் பட்டம் பெற்று, சென்னை நகரில் பணிபுரிபவன் நான். நிறைய ஆங்கில வகுப்புக்களுக்கும் சென்றுள்ளேன். என்றாலும், சரளமான பேச்சு வரவில்லையே!’ : சிவகுரு, சென்னை.

பரமன்: ஆங்கில வகுப்புகளால் பயன் இருக்கத்தான் செய்யும் என்றாலும், வகுப்புகளை மீறி சரளமான பேச்சு வருவதற்கு வகுப்புகள் மட்டுமே போதாது. தொடர்ச்சியான சூழல் வேண்டும்.

புவனகிரி அரசுப்பள்ளியில் படித்த ஒருவர், வளர்ந்த சூழலில் ஆங்கிலமும் இல்லை, ஹிந்தியும் இல்லை. பள்ளிப் பாடத்திட்டத்திலும், கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இருந்த ஆங்கிலத்தை பயின்றார். சுய விருப்பத்தின் காரணமாக, உள்ளூரில் ஒருவரிடம் ஹிந்தி பயின்று, ஹிந்தி பிரசார சபாவின் முதல் மூன்று நிலை தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தை எழுதவும், படிக்கவும் தெரியும். ஹிந்தியையும் எழுதவும் படிக்கவும் கற்றார்.

சென்னைக்கு வேலை வந்த அவர், சரளமாக ஆங்கிலம் பேசத் திணறினார். நிறைய நேர்முக வகுப்புகளில் தடுமாறிப் போனார். சில வருடங்களுக்குப் பிறகு, அவர் பெங்களூருவில் இருந்த ஒரு பன்னாட்டு நிறவனத்தின் பிரிவில் வேலை கிடைத்து பெங்களூரு சென்றார். ஆறு மாதங்களில், அவரைப் போல் ஆங்கிலம் பேச முடியுமா, என்று நண்பர்கள் வியக்கும் வண்ணம் மாறிப்போனார். காரணம், அவர் பணிபுரிந்த சூழலில் இருந்தவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது, வட இந்தியர்களும், வெளிநாட்டவர்களும் நிறைந்திருந்த அந்த அலுவலகத்தில் பேச்சு மொழி ஆங்கிலமாகவே இருந்தது. பெரும்பாலோனோர் தமிழ் அறிந்திருக்கவில்லை. நம் நண்பருக்கு, ஆங்கிலத்தில்தான் பேசியாகவேண்டும் என்ற நிலை வந்தபோது, இதுவரை அவர் கற்ற அத்தனை ஆங்கிலமும், அங்கே வெளிவந்து துணை செய்தது, அவரை உருவாக்கியது. ஆங்கிலம் கைகூடியது. ஆங்கிலம் பேசும் சூழலில் இருக்கும்போது, ஆங்கிலம் பேசும் சரளம் வரும்.

ஆனால், ஹிந்தியின் இலக்கணங்கள் எல்லாம் கற்று, நன்றாய் படிக்க, எழுதத் தெரிந்த அவரால் இன்றுவரையில், ஹிந்தி சரளமாய் பேச முடியவில்லை. காரணம், ஹிந்தியை பேசிப் பழகும் ஒரு சூழல் அவருக்கு வாய்க்கவில்லை. ஒரு வேலை, ஹிந்தி பேசும் இடங்களான, மும்பை, டெல்லி போன்ற சூழலில் சில மாதங்கள் இருந்திருந்தால், ஹிந்தியிலும் சரளம் கைகூடியிருக்கும்.

ஆக, ஆங்கில இலக்கண வகுப்புக்கள், சரளமாய் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் ஒரு அளவிற்குத் துணை செய்யும் என்றாலும், வகுப்பிற்குப் பிறகு, வாழ்க்கையில் சரளமாய் பேசும் சூழல் ஒன்று வேண்டும். அதுவே உங்களை வளர்க்கும். அப்படி ஒரு சூழலை, அமைப்பை, சத்சங்கங்களைக் கண்டு பிடியுங்கள். ஆங்கிலத்தில் கருத்துகளை பதிவு செய்யும் சமூக வலைதளங்களில், அதில் வரும் விவாதங்களில் கலந்துகொள்ளுங்கள். உங்களை அதில் இணைத்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும். ஆளுமை வரும். வாழ்த்துக்கள் சிவகுரு.

………………

Employment Master 4.1

 

ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கான பண்புகளைப் பற்றி ஒவ்வொன்றாய் சில வாரங்களாகப் பார்த்து வருகிறோம். அதில் முக்கிய ஒன்று.

 

  1. ‘ஆடை எப்படி, ஆள் இப்படி’ – இன்றைய உலகம்:

“ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளி. முன்பு உடுத்திய அழுக்கான ஆடையை திரும்பவும் கட்டிக் கொள்ளாதே. அழுக்கற்ற ஆடையை உடுத்து. தோற்றத்தை அழகாக வைத்துக்கொள். சிகையை நன்கு சீவி அழகுப் படுத்திக்கொள்,” என்று தினம் கடைப்பிடிக்கவேண்டிய நன்னடத்தையைப் பற்றிச் சொல்கிறது அஷ்டாங்க சங்கிரகம் என்னும் ஆயுர்வேத நூல் (தமிழ் மொழி பெயர்ப்பை படிக்க நேர்ந்தது). ஆடையைப் பற்றி ஆரோக்கியத்திற்காக இங்கே சொல்லப்பட்டாலும், இது ஆளுமைக்கான விஷயம் கூட.

‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பதெல்லாம் அப்போது. ஆள் எப்படி என்பதை ஆடை எப்படி என்பதைக் கொண்டே தீர்மானிக்கும் உலகம் இப்போது. ‘நீங்கள் உடுத்தும் ஆடை, உங்கள் ஆளுமையைத் தீர்மானிக்கும்.’

 

  1. தோற்றம் தேற்றம் தரும்:

Formal dress

உங்கள் அலுவலகத்தின் டீம் மீட்டிங்கிற்கு அல்லது முக்கியாமான சில சந்திப்புகளுக்கு செல்லும்போது, உங்கள் தோற்றம் எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியம். நேர்த்தியாய் உடையணிவது உங்களுக்கு நிறைய நல்லதை செய்யும். ஒன்று – நீங்கள் யார், எப்படிப் பட்டவர் என்று பேசி, கேட்டு அறியப் படுவதற்கு முன், உங்கள் தோற்றம் மற்றவர்களை கவனிக்க வைக்கும் அல்லது ‘வேணாம், சரியில்லை இவர்’ என்று எடை போட வைக்கும். இரண்டு – நேர்த்தியாய் உடையணிந்து செல்லும்போது, உங்களைப் பற்றிய உங்களது எண்ணம் உயர்வாய் இருக்கும். உங்களைப் பற்றி ஒரு பெருமிதம் இருக்கும் உங்களுக்குள்ளே. மூன்று – இந்த பெருமிதம் ஒரு விதமான தன்னம்பிக்கையைத் தரும். நான்கு – நேர்த்தியான உடையணிந்து, நல்லத் தோற்றம் கொண்டவர்கள், மற்றவர்களால் நல்ல விதமாய் கவனிப்படுவார்கள். ஒரு வித மதிப்போடு பார்க்கப் படுவார்கள். ‘உடையை வைத்து, எடை போடுவதா?’ என்று கொதிக்கலாம் நீங்கள். உலகம் அப்படித்தான்.

வெறும் தோற்றத்திற்கு மட்டுமே முக்கியம் கொடுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் தோற்றத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். நேர்த்தியான உடையணிந்து கொள்ளுங்கள். தோற்றம் தேற்றம் தரும்.

‘சரி, உடை விஷயத்தை சரி செய்து கொள்கிறேன். அது போதுமா? ஆளுமை வந்து விடுமா?’ என்கிறீர்களா?   அடுத்த வாரம் பார்ப்போம்.

(ஆளுமை கொள்வோம்…)

ப்ரியமுடன்,

பரமன் பச்சைமுத்து

வாசகர்கள் இந்த தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளை, கேள்விகளை [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

 

Nandri :  Empolyment Master – Weekly

1 Comment

  1. sarla anand

    Super….

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *