அச்சம் தவிர், ஆளுமை கொள் – 5

Backbiting - Copy

Backbiting

பிரபல வாரப் பத்திரிகையில் வரும் எனது ‘ அச்சம் தவிர், ஆளுமை கொள்’ தொடரிலிருந்து ஒரு பகுதி

[Part 5 ]

……………………………………

கேள்வி: “வணக்கம் பரமன். நான் உண்மையாய் வேலை பார்க்கும் ஊழியன். என் வேலைகளை மிகப் பொறுப்பாக பார்க்கிறேன். ஆனால் என் அலுவலகத்தில் சிலர், தங்களது வேலையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மேலிடத்தில் நம்மைப் பற்றிப் போட்டுக் கொடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். உழைக்கும் நம்மை விட, போட்டுக் கொடுத்தே வாழ்க்கையை ஓட்டும் இவர்கள் பெயர் வாங்கி முன்னேறி விடுகிறார்கள். மனம் வலிக்கிறேதே. இவர்களை எப்படி கையாள்வது?” என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் கீழமணக்குடியிலிருந்து திரு. ரத்னவேல்.

…………….

பரமன்: “நான் வேலை பாக்கறது பிரச்சினை இல்லை. என்னைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, மேலிடத்தில் போட்டுக் குடுத்து என் வளர்ச்சியைத் தடுக்கறாங்க. அத நெனைச்சாத்தான் தாங்க முடியல, ‘ நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்துவிட்டால்…’,” என்னும் வகை புலம்பல்கள் கார்பரேட் நிறுவனங்கள் தாண்டி கட்சிகள், மடங்கள் வரை கேட்கும் காலம் இது. இந்த வகை சவால்களை எப்படி பார்க்கவேண்டும், எப்படி எதிர் கொள்ள வேண்டும்? என்பது இன்று நிறைய பேருக்கு தேவைப்படும் ஒரு முக்கிய விஷயம்.

முதலில் நீங்கள் செய்யவேண்டியது – உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். ஒடிந்து போய் ஓரமாய் உட்கார்ந்திருப்பவனையும், ஒன்னுமில்லாதவனையும் யாரும் பெரிதாய் கண்டு கொள்ளமாட்டார்கள். உங்கள் தலைமையிடம் / மேலாளரிடம் உங்கள் சக ஊழியர் ஒருவருக்கு சந்திக்க நேரம் கிடைக்கும்போது, தன்னைப் பற்றி, தனது வேலையைப் பற்றி, வளர்ச்சிப் பணிகளைப் பற்றி பேசாமல், கிடைத்த அந்தக் கொஞ்ச நேரத்திலும் உங்களைப் பற்றி அவர் பேசுகிறார் என்றால், நீங்கள் கூட்டத்தில் ஒருவராய் உப்புக்கு சப்பாணியாய் இல்லை, நீங்கள் கவனிக்கும் படியாய் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முதலில் உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள்.

தனக்குக் கிடைத்த நேரத்தில் தன்னைப் பற்றிப் பேசாமல், பிறரைப் பற்றி போட்டுக் கொடுப்பது ஏன்? உளவியல் ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். முக்கிய சிலவற்றை இங்கே பார்ப்போம்.

  1. போட்டிப் போட முடியாதவர்களே, போட்டுக் கொடுப்பார்கள்:

‘உங்கள் முதுகுப் பின்னால் உங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால் நீங்கள் அவர்களை முந்திச் சென்று விட்டீர்கள் என்று அர்த்தம்,’ என்கிறது ஒரு குஜராத்தி பழமொழி. உண்மை அதுவே. நீங்கள் பார்க்கும்படி வளர்கிறீர்கள் என்பதை விட, மற்றவர்கள் அஞ்சும் படி வளர்கிறீர்கள் என்று அர்த்தம். போட்டிப் போட முடியாதவர்களே, போட்டுக் கொடுப்பார்கள். உங்களோடு ஆரோக்கியமாய் போட்டி போட்டு வளர அஞ்சுபவர்கள், எப்படி வெல்வது எனத் தெரியாமல், பொறாமைக் குணம் கொண்டு எடுக்கும் ஆயுதமே ‘போட்டுக் கொடுத்தல்’ ‘புறங்கூறுதல்.’

‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்றெல்லாம் பாட வேண்டியதில்லை. ‘நான் வளர்கிறேனே மம்மி,’ என்று ஹார்லிக்ஸ் பாய் மாதிரி பாடிக் கொண்டாடுங்கள். வேலையைப் பார்த்துக்கொண்டு மேலே போய்க்கொண்டே இருங்கள்.

  1. தானே உயர பலமில்லாதவர்கள், அடுத்தவர் பலவீனங்களைச் சொல்லி உயரப் பார்ப்பார்கள்:

மேலிடத்தில் / தலைமையிடத்தில் அடுத்த லெவலுக்கு என் உறவை எப்படி எடுத்துச் செல்வதென்று தெரியவில்லை என்று நிற்போர் சிலர் எடுக்கும் ஆயுதம் இந்தப் ‘போட்டு கொடுத்தல்’. திருவிளையாடல் திரைப்படக் காலத்திலேயே இவர்களுக்கு ‘குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்கள்’ என்று பெயர் வைத்து விட்டார்கள். தன்னிடம் பலம் இல்லாத இவர்கள், மற்றவர்கள் பலவீனங்களிலிருந்து அல்லது குறை சொல்லி அதில் பலம் சேர்க்கப் பார்ப்பார்கள்.

பாவம்! பலமில்லாதவர்கள். அவர்களை விட்டுவிட்டு, உங்களை பலவீனங்களை குறித்துக்கொண்டு அதை சரி செய்யும் திசையை நோக்கி நகருங்கள். நமக்கு நிறைய வேலை இருக்கிறது, முன்னேறிப் போக வேண்டும்.

 

  1. போட்டுக் கொடுப்பது ஒரு வியாதி:

இந்த எதிலும் சேராத ஒரு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு தினுசானவர்கள். பொறாமையும் இல்லை, அவர்களுக்குப் போட்டியும் இல்லை. இருந்தாலும் புரங்கூறுவார்கள், போட்டுக் கொடுப்பார்கள். ஆமாம், போட்டுக் கொடுப்பதில் அவர்களுக்கு ஒரு கிக். இது ஒரு வகையான வியாதி. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். செய்துவிட்டு உங்கள் வேலையில் கவனம் செலுத்தி முன்னேறிச் செல்லுங்கள்.

இதை தவிர, இனிக்கும் ஒரு செய்தி உள்ளது. நீங்கள் மகிழும்படியான அந்த செய்தி… அடுத்த வாரம்.

(ஆளுமை கொள்வோம்…)

ப்ரியமுடன்,

பரமன் பச்சைமுத்து

வாசகர்கள் இந்த தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளை, கேள்விகளை [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

 

 

Courtesy : Employment master – Weekly

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *