கரிகுப்பம் பவர் ப்ளாண்ட்டும், ‘கெயில்’ வயல் வழியும்

நெல் வயல்களின் ஊடே மின்சார கம்பி தூக்கும் மின் மரங்கள் நடப்போவதாகவும், அந்த இடத்தை மட்டும் வெறுமனே விட்டுவிட வேண்டும், பயிர் வைக்கக் கூடாது, இடம் தருவதற்கு இவ்வளவு பணம், கரிக்குப்பம் பவர் ப்ளாண்ட்டிலிருந்து தரகர்கள் வந்து பேசிக்கொண்டுள்ளனர் என எங்கள் கிராமமே பரபரப்பாய் இருந்தது.  அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது கரிகுப்பம் பவர் ப்ளாண்ட்டிலிருந்து பல ஊர்களின் வயல்களை கடந்து ஒரே நேர்க்கோட்டில் நெய்வேலிக்கோ அல்லது வேறு எங்கேயோ செல்லும் மின் கம்பிகளையும், அதை தாங்கி நிற்கும் தெருக்கூத்தில் வரும் அசுரர்களைப் போல பிரமாண்டமாய் நிற்கும் மின் மரங்களையும் பார்க்க முடிந்தது. அந்த மரங்களைச் சுற்றிய இடங்கள் ஏதும் பயிரடப் படாமல் வெறுமனே இருந்தது. ‘ஆமாம், வெவசாயத்தில ஒண்ணும் வரல. சும்மாயிருக்கற நெலத்துல காசாவது வருதே!’ என்பது சிலரின் மனப்பான்மை. ஏதோ காசு வருகிறதே என்று எண்ணி காலத்திற்கும் இனி அல்லது அவன் காலத்திற்குப் பிறகும் இனி எக்காலத்திற்கும் பயிர் வைக்கமுடியாது அவனால். இருக்கும் காலரைக்காக் காணியில் கொஞ்சம் அதில் போயிற்று.

கேரளம் – கர்நாடக திட்ட திரவ எரிவாயு இப்போது தமிழக வயல்களின் வழியே போகப் போகிறதாம். உச்ச நீதி மன்றம் அனுமதித்து விட்டதாம்.  நெடுஞ்சாலை வழியே கொண்டு போங்கள் என்று அரசு சொன்னதை வாக்கு வங்கி அரசியல் என்று சொல்லி தடுத்துவிட்டார்களாம்.  அதற்கு அதிக செலவாகும் என்று ஏற்க மறுத்து விட்டார்களாம்.

வயல்களின் வழியே கொண்டு போவது ஒரு பிரச்சினை, ஆந்திர மாநிலத்தில் ஒரு முறை வெடித்து வீடெல்லாம் பற்றியெரிந்ததைப் போல நடந்தால் என்னவாகும் என்பது ஒரு புறம்.  நிலத்தின் வழியே கொண்டு சென்று சொற்ப தொகையைக் கொடுப்பதோடு முடியாது பிரச்சினை.  அந்த இடத்தில் இதை பயிரிடக்கூடாது, அப்படி உழக்கூடாது,  பக்கத்தில் இவ்வளவு தூரத்தில் கிணறு வெட்டக்கூடாது என்று விவசாயத்திற்கே வேட்டு வைக்கப் படலாம்.  உண்மையில் விவசாயியைப் பொறுத்த வரை அந்த இடத்தில் எக்காலத்திற்கும் பயிரிட முடியாது. இடமும் போய், அந்த இடத்திற்கான விவசாயமும் போய் விடும் அவனுக்கு.  அந்த இடத்தில் முள்வேலி அமைத்து விட்டு சுற்றியுள்ள இடத்தை பயன்படுத்த ஏற்பாட்டிற்கு வரைவு தரவேண்டும்.  இதை யாராவது நீதி மன்றத்தில் சொல்ல வேண்டும்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், விவசாயியின் வயிற்றில் அடித்து ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்க முடியாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *