அன்பென்பது…!

நீர் பருகலாமென்று சமையலறைக்குள் போகிறேன். கூடவே பேசி சிலாகித்துக் கொண்டு வருகிறாள் செல்ல மகள், தான் இப்போது படித்து முடித்த ஒரு நூலைப் பற்றி.

‘அப்பா… யூ நோ… தி எண்ட் ஆஃப் த புக் ஈஸ் ஆஸம்! என்ன ஆகும் தெரியுமா….?’

கிட்டத்தட்ட ‘பாபநாசம்’ க்ளைமாக்ஸ் மாதிரி முடித்திருப்பார்கள் என்று சொல்லப் போகிறாள் என்று கணித்தேன். அதையே சொன்னாள்.  சில வருடங்களுக்கு முன்பே நான் படித்து முடித்த அந்த நூலைப் பற்றி விவரித்தாள். தெரிந்த புத்தகம் என்றாலும் அவள் பேசுவதை உள்வாங்கினேன். 

அலுவலகத்திற்குத் தேடி வந்து என்னைப் பார்த்த அன்பிற்குறிய ஓர் பெண்மணி, தான் பார்த்த திரைப்படம் ஒன்றைப் பற்றி விவரித்தார்.

‘இந்தியாவிற்கு மெடிடேஷன் கத்துக்க வருவா. ரொம்ப நேரம் கண் மூடி உட்கார்ந்து அப்படியும் இப்படியும் நகர்ந்து… கண்ண தொறந்து பார்க்க ஒரு நிமிஷம்தான் ஆச்சுன்னு  கடிகாரம் காட்டும்!’ என்று உணர்ச்சிப் பொங்க விவரித்தார். 

அந்தக்கால சத்யமில் நான் நண்பர்களோடு பார்த்த ஜூலியா ராபர்ட்ஸின் படமது என்பதும், அடுத்த சீன் என்ன என்பதும் கூட நன்றாய் தெரிந்ததே என்றாலும், அவர் பேசுவதை புதிதாய்க் கேட்டேன்.

நான் ஏற்கனவே பார்த்த படம், அப்பவே படித்த புத்தகம் என்பதல்ல விஷயம். அவர்கள் இப்போது அதைப்பற்றி பேச விரும்புகிறார்கள். படித்து முடித்த, பார்த்து ரசித்த உற்சாகம் அவர்களிடம், பகிர விரும்புகிறார்கள்.  அன்பென்பது – ‘செவிமடுத்தல்’, இல்லையா? 

Talking is sharing ,  Listening is ‘caring’!
-பரமன் பச்சைமுத்து

11.07.2016

சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *