அய்யோ… இறைவா! 

அவனம்மா தெருவில் யாரிடமோ பேரம் பேசி எதையோ வாங்க முயற்சித்து, பேரம் படியாத ஆற்றாமையில் திட்டிக்கொண்டே வீட்டினுள் வந்தாள். அவளது சத்தத்தில் கண்விழித்தவன் அப்படியே அமர்ந்திருந்தான். தூங்கி எழுந்ததும் இயல்புநிலைக்குத் திரும்ப வெகுநேரம் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளைப் போல வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருக்கும் சில மனிதர்களைப் போலில்லை அவன் நிலை இன்று.  தூக்கக் கலக்க மந்த நிலையில்லை அது. ஒரு வித மனவெறுமை. அப்படியே உட்கார்ந்திருந்தான்.
மின் விசிறி தேவையான காற்றை  வாரி இறைத்தும், மனப்புழுக்கத்தை அதால் போக்க இயலாதே!
‘கடவுளே…. நீ இருக்கியா? பணக் கஷ்டம், மனக்கஷ்டம், ரணக் கஷ்டம், சே…எவ்ளோ கஷ்டம்! சே… உருப்படியா… ஏதாவது ஒண்ணு இருக்கா என் வாழ்க்கைல, ஏதாவது ஒண்ணாவது உருப்படியா தந்திருக்கியா?’ 
‘தம்பீ… எந்திருச்சிட்டியா?’ அருகில் வந்த அம்மா கெஞ்சலாகத் தொடர்ந்தாள், ‘ராயப்பேட்டை ஆஸ்பத்ரி போயி அந்த மாமாம பாத்திட்டு வந்திருப்பா கொஞ்சம்.’ 
‘ம்ம்ம்… போறேன்… போறேன்’
பாத்ரூமிற்குள் கதவடைத்து பல்துலக்கியவன் ‘அப்பா….’ என்று இயல்பாய் மலம் கழித்து வயிறை இலகுவாக்கினான்.  குளித்து, அம்மா தந்த வெள்ளை வெளேர் இட்லியை வெங்காயச் சட்டினியில் தோய்த்து உள்ளே தள்ளினான். சுவைக்காகவே கூட இரண்டு தள்ளினான். 
பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டு அதிலிருந்தே, 

‘அம்மாஆஆ… கொஞ்சம் வேல இருக்கு. ஆஃபீஸ் போயிட்டு  லஞ்ச் டைம்க்கு முன்னாடி போயிட்டு வந்துர்றேன்!’ என்று வீதியிலிருந்தே கத்திச் சொல்லிவிட்டு புறப்பட்டு விரைந்தான்.
திட்ட வரைவு, அரசு அனுமதி, வரி, வாடிக்கையாளர் புகார் ரிப்போர்ட் என்று வேலைப் பளுவில் இருந்தவன், ‘ஆஸ்பிட்டல் போயி அந்த மாமாவப் பாக்கனுமே!’ என்ற நினைவு வர எழுந்து புறப்பட்டான், வயிறு கலங்கிய உணர்வு வரவே ஒதுங்குமிடம் சென்று வயிறை இலகுவாக்கி ‘அப்பாடா!’ என்ற திருப்தியோடு பைக் ஏறி பறந்தான். 
வார்டில் மாமா கண் மூடி தனியே படுத்திருந்தார்.  மாமாவிற்கு யாருமில்லை. தனியே காலந்தள்ளிவிட்டார்.  தூரத்து சொந்தம் என்ற முறையில் அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் இவன் வந்துள்ளான் ஒருமுறை பார்ப்பதற்கு. 
‘அடப் போப்பா… டாய்லெட் வரமாட்டேங்குது. எவ்ளோ மாத்திரை, மருந்து… வந்து அட்மிட் பண்ணிட்டாங்க இவர, வேர்க்கக் கூட மாட்டேங்குது இவருக்கு, பெரிய ரோதனைதான் போ!’ 
‘அவருக்காவுது பரவாயில்ல. வெளிய போறதில பிரச்சினை! இவருக்கு உள்ள போறதிலயே பிரச்சினை. பசிக்கவே மாட்டேங்குது. அங்க ஆரம்பிக்குது பிரச்சினை!’
‘என்னா காசு பணம் இருந்து என்னா புண்ணியம் சொல்லு! பசிக்கல… என்னா பண்றது. தோ அவரு மூணு நாளா  கெடக்காரு! வந்து பாக்க ஒரு சொந்தம் இல்லியாம்!’
யாரோ யாரிடமோ பேசுகிறார்கள்.  

வயிறு பசியில் சப்தம் செய்தது. ‘படீர்’ என்று எதுவோ தலையிலடித்தது போல் இருந்தது.
‘கருவாக்கி உருவாக்கி எனையாண்டு காத்தருளும் இறைவா நன்றி!’  எங்கேயோ ஒலிக்கும் பாடல் காற்றில் வந்து காதின் வழியே உள்ளே எதையோ நிறைத்தது.
– உணர்வு : பரமன் பச்சைமுத்து

11.07.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *