‘ஜோக்கர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஐம்பது கோடி ரூபாய் ஊழல் என்று செய்தி வந்தால், 
‘ஐம்பது கோடி எல்லாம் ஒரு பெரிய ஊழலா அவரவர்கள் பதினேழு லட்சம் கோடிக்கு பண்ணுகிறார்கள், போய்யா! கேவலமா இருக்கு!’ என்று  சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒரு தேசத்தின் மனநிலையால்,  பின்தங்கி கிடக்கும்  பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தின் வெளி உலகம் அதிகம் அறியா ஒரு மன்னர்மன்னனின் வாழ்க்கை என்னவாகிறது, அவன் மனைவி என்னவாகிறார், அவனுக்காக போராடுபவர்களுக்கு ‘நாம்’ (சமூகம்! உலகம்!) சூட்டும் பெயர் என்ன என்பதை ‘பொளேர்’ என செவிட்டில் அறைந்து சொல்லும் படம். கடைசி சில நிமிடங்களில் விழுந்த அறையில் இன்னும் அதிர்ந்து போய் கிடக்கிறேன்.


காய்ந்த விவசாய நிலம், கால் சட்டையை பாதி கழட்டி குத்த  வைத்து உட்கார்ந்த நிலையில் சாலையோரம் மலம் கழிக்கும் சிறுவர்கள், ஆடு மேய்க்கும் பெண் என்று படு வறட்சியான ஒரு கிராமத்தைக் காட்டிக்கொண்டே போய், ஒரு காரை பெயர்ந்த வீட்டின் பெயர்பலகையில் ‘இந்திய ஜனாதிபதி’ என்று காட்டியதுமே ‘ஓ…!’ என்று எகிறுகிறது எதிர்பார்ப்பு. 

நகைச்சுவை, குத்து, வானத்தில் பறந்து அடிக்கும் சண்டைகள் இல்லாமல் வெறும் யதார்த்தங்களை மட்டுமே வைத்து கட்டிப் போட்டுவிட்டார் இயக்குனர்.

‘உண்ணாவிரதம் இருக்கறத பத்தி இல்ல, அரைநாள் உண்ணாவிரதத்துக்கு ஏர் கூலர எடுத்திட்டு போகாதீங்கன்னு சொல்றேன்’ ‘ஹெலிகாஃபட்டர வணங்காதீங்கன்னு சொல்றேன்’ ‘அல்லாவின் பிறையை சிவன் நெற்றியில் அணிந்திருக்கிறார். சிவன் என் முப்பாட்டன்’ என்று சகட்டுமேனிக்கு ஆனி அடித்து கைதட்ட வைக்கும் வசனம், ‘தேர்ந்தெடுக்க நாம, சரியில்லன்னா டிஸ்மிஸ் பண்ண முடியாதா?’ எனும் போது சிந்திக்க வைக்கிறது, ‘உண்டில காசு போடனும்… பட்டுரோசாவுக்கு தண்ணி ஊத்தனும், மல்லிக்கு யூரின் பை மாத்தனும்’ எனும் போது கண்ணில் நீர் கட்ட வைக்கிறது. வசனம் இப்படத்தின் இதயத்துடிப்பை தாங்கிச் செல்கிறது. 

‘ஏன் அவன புடிக்கல?  – கோண மண்டை – எங்கப்பா ஒண்ணும்  குடிகாரர் இல்ல, மார்ச்சளிக்காகத்தான் குடிக்கறார் – அவங்கப்பா மார்ச்சளிக்காக குடிக்கறார், என் வீட்டுக்காரர் என்ன மார்ல அடிக்க குடிக்கறார்…’ மனதிற்கு நெருங்கி நிற்கும் வசனம், அட்டகாசம். 

மல்லி – மன்னர் மன்னன் காதல் நிஜ வாழ்க்கையோடு நெருங்கி நிற்கிறது. யார் அந்த நடிகை, பார்வையின் ஆழத்திலேயே முடித்து விடுகிறார். ‘இங்க வா… உக்காரு… பண்ணிக்கலாம், கல்யாணமே பண்ணிக்கலாம்’ அந்த காட்சியின் படிப்படியான உணர்வுகள், அக்மார்க் அந்நாளைய ‘வட்டியும் முதலும்’ எழுத்தில் பார்த்த ராஜூமுருகன். 

‘வாட்டர் கம்பெனி’ பணியாளன், குடை வண்டியில் வரும் முதல் குடிமகன் என உண்மையில் இரட்டைவேடம் நாயகனுக்கு. பின்னிப் பெடலெடுத்து நிற்கிறார் நடிப்பில்.  பொன்னூஞ்சல் படமுழுக்க வந்து கடைசி சில நிமிடங்களில் நம்மை சாட்டையால் அடித்து விட்டுப்போகிறார்.

கமர்சியல் ஆட்டங்களுக்கு கதையை காவு கொடுக்காமல், துணிந்து இப்படி ஒரு படத்தை தந்த ராஜூமுருகனை எழுந்து நின்று பாரட்டுகிறேன். அதை தயாரித்தவர்களுக்கு மாலை. 

ராஜு முருகன் இன்று இப்படி உருவாக அன்று எண்ணங்களை எழுத்தாக்க உதவிய விகடனும், எழுத்தை திரையில் வடிக்க தளம் தந்து உதவிய இயக்குனர் லிங்குச்சாமியும், இன்ன பிறரும் பாராட்டப் பட வேண்டியவர்கள். 

சில இடங்கள் நாடகம் போல் செல்வதும், மெதுவாக நகர்வதும் பலவீனமாக இருந்தாலும், பொறுத்துக் கொள்ளலாம்.

ஜனாதிபதி, பிரதமர் கூட்டங்கள் என்று செய்தியில் பார்க்கும் போது, ஏதோ ஒரு குடும்பம் இதன் பின்னணியில் காவு கொடுக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணங்கள் வருகின்றன இப்போது. அது இப்படத்தின் வெற்றி!
‘ஜோக்கர்’ – நிஜ வாழ்க்கையோடு நெருங்கி நின்று அறையும் படம். நிச்சயம் பாருங்கள். இந்தப் படம் வெற்றி பெறுவது நமக்கு நல்லது.

:திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *