உளுந்தூர்ட்டை…

​மனம், இப்படித்தான் என்று விளக்கமுடியா விதத்தில் சங்கதிகளை சங்கிலியாய்க் கோர்த்து விளங்கமுடியா முடிச்சுக்களிட்டு நினைவகத்தில் பதியச்செய்து மேலாண்மை புரியும் ஓர் அதிசயம்.  சில இடங்களின் பெயர்கள், மனிதர்களின் பெயர்களைச் சொன்னால் அதனோடு(அவர்களோடு) தொடர்புடைய சில சங்கதிகளை நினைவகத்தின் அடியாழத்திலிருந்து கொண்டு வந்து மேலே போட்டுவிட்டு போய் விடுகிறது. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால், ‘விநாயகனே வினை தீர்ப்பவனே…’ என்ற பாடலும் ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா’வும் தெரியாமலிருக்க முடியாது உங்களுக்கு.  ஆடி மாதக் கூழ் ஊற்றலுக்குக் கூட பாக்ஸ் ஸ்பீக்கர் குத்து டான்ஸ் என்றெல்லாம் வராத அந்த நேரங்களில் மஞ்சள் நீராட்டு பொன்னியம்மன் உலா திருமணம் என்று எதுவாக இருந்தாலும் ஊரின் காதையே செவிடாக்கும் புனல் ஒலிபெருக்கிகள்தான் ஒலிக்க விடப்பட்டன. எந்த உற்சவமானாலும் ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்…’ எனத் தொடங்கி ‘விநாயகனே வினை தீர்ப்பவனே!’ என்று வரும் அந்த சீர்காழி கோவிந்தராஜன் பாடல்தான் முதலில் ஒலிக்கும். ‘கண்ணாத்தா… செல்ல மாரியாத்தா..’ ரக எல்ஆர் ஈஸ்வரியோ, ‘அழகென்று சொல்லுக்கு முருகா’ ரக டிஎம்எஸ்ஸோ அப்புறம்தான் வரும். 

இவற்றோடு ‘நீயல்லால் தெய்வமில்லை’ ‘சின்னஞ்சிறு பெண் போலே…’ என நான்காயிரம் பாடல்களை இயற்றிய பாடலாசிரியர், தமிழிசைப் பாடல்கள் என்று பெரும் சாதனைகள் புரிந்தவர்… இங்குதான் எங்கோ இருந்திருக்க வேண்டும், இம்மண்ணில்தான் நடந்திருக்க – வசித்திருக்க – மறைந்திருக்க வேண்டும் என்று மனம் கூவுகிறது. 
உளுந்தூர்பேட்டை சண்முகம் என்ற பெரும் பாடாலாசிரியனைப் பற்றிய சங்கதிகளை கொண்டு வந்து பரிமாறிவிட்டுப் போகிறது மனது. 

‘…அந்த பிரியாணி உளுந்தூர் பேட்டை நாய்க்குன்னு எழுதியிருந்தா…’ என்ற சந்தானத்து வசனங்கள் நினைவகச்  சங்கிலிகளிலிருந்து வெளியே வரலாம் உங்களுக்கு.  உள்ளே பதிந்திருப்பதை கொண்டு வந்து போடுவது உள்ளத்தின் இயல்பு. 

உளுந்தூர் பேட்டை உணவகம் ஒன்றில் தேநீருக்காக நின்றுள்ளேன்.


-பரமன் பச்சைமுத்து

உளுந்தூர் பேட்டை 

03.09.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *