நாசகார புயலே வர்தா, நாங்கள் எழுகிறோம் இதோ!

மரங்கள் என்றால் இலையும் கிளையும் வான் பக்கம், 

வேரும் தண்டும் பூமிப் பக்கம் என்றல்லவா கொண்டிருக்கும்?

வேர்களை வானுக்குக் காட்டி இலைகளை தரையில் பரப்பி கிளைகள் ஒடிந்து சரிந்து வீழ்ந்து கிடக்கின்றனவே எம்மரங்கள்!

ஐயோ! என்னவாயிற்று என் நகருக்கு, அனுமன் புகுந்த அசோகவனமாய் குதறப்பட்டு சின்னாபின்னமாகி கிடக்கிறதே என் சென்னை!

மேகத்திலிருந்து மழையைத்தானே கேட்டோம்,

கண்களிலிருந்து குருதி வரவழைத்து விட்டாயே!

சிங்காரச் சென்னையை சீரழிந்த சென்னையாய் மாற்றி விட்டுப் போன மோசமான புயலே!

மூன்று தலைமுறைகளாய் முயன்று முயன்று நட்ட

ஒரு லட்சம் மரங்களை ஒரே நாளில் கொன்று சரித்த நாசகார புயலே!

உட்கார்ந்து அழுவோம், ஓலமிடுவோம் என்றா நினைத்தாய்? கேள்!

நீ வருவதற்கு முதல் நாள் பிறந்தவன் எழுதிய கவிதை வரியில் வருவதைப் போல ‘சில வேடிக்கை மனிதர்களை போல வீழ்வோம் என நினைத்தாயோ!’ என்று உரக்கக் கூறி இதோ நிமிர்கிறோம்! 

உடைந்தது சென்னை என்று தலைப்பு இட்டோரெல்லாம் ‘நிமிர்ந்தது சென்னை!’ என்று சொல்லும்படி,

ஒரு நாளில் நீ செய்த அழிவிலிருந்து ஓராண்டில் நிமிர்ந்து நிற்போம்!

எங்கள் கொள்ளுப் பாட்டன்களும் முப்பாட்டன்களும் வளர்த்துப் போன மரங்களை வைத்தே வாழ்ந்தோம் இதுவரை நாங்கள். 
இதோ… 

என் நகரில் எங்கள் கைகளால்

புது மரங்களை வளர்த்தெடுக்கும் வாய்ப்பு வந்திருக்கிறதெங்களுக்கு.

புத்தம்புது கன்றுகள் நட்டு வளர்த்து புத்தம்புது சென்னையாய் பொலிவாய் நிமிர்ந்து உயர்ந்து நிற்போம் நாங்கள்! 

நீ வந்த தடம்கூட இல்லாமல்

வரலாறு சிரிக்கும்.

நாங்கள் எழுகிறோம்…
வாழ்வோம்! வளர்வோம்! 

: பரமன் பச்சைமுத்து

சென்னை

14.12.2016 

Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *