அதிர வைக்கும் எளிய  மனிதர்கள்… 

வாழ்க்கை ‘எதனால்?’ என்று அறுதியிட்டுக் கூற முடியாத அவிழ்க்க முடியா பல புதிர் முடிச்சுக்களைக் கொண்டது. எல்லாம் கொண்ட இவர்களுக்கு ஏன் இந்த நிலை? ஒன்றுமே இல்லாத இவர்களுக்கு ஏன் இந்த உச்சம்? போன்ற கேள்விகளுக்கு ‘இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம்’ போன்ற யூகங்களைக் கடந்த ‘இதுதான்!’ என்ற நிச்சயமான உண்மையான பதில் காணமுடிவதில்லை என்பதே உண்மை. வாழ்க்கை புரிந்துகொள்ள முடியா பல புதிர்களைக் கொண்டது என்பதை புரிந்து கொண்டவர்கள் புத்திசாலிகள்.
இதுதான் மகிழ்ச்சி, இதுதான் மகிழ்ச்சியின் சூத்திரம் என்று உளவியல் சித்தாந்தங்களைக் கொண்டு மகிழ்ச்சியின் அளவை மனக்கவலையின் காரணங்களை பட்டியலிடும் அறிவுசார் சமூகத்தின் நீங்கள் (என்னையும் சேர்த்தே!), ‘இதற்குப் பெயர்தான் மகிழ்ச்சியாக இருப்பதா!’ என்று எந்த வடிவங்களும் முன்முடிவுகளும் இல்லாமல் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதைக் கூட உணராமல் ‘அதையெல்லாம் எதற்கு சிந்திக்கவேண்டும்?’ என்பதுபோல வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரிய வகை எளிய மனிதர்களை பார்த்தால் என்ன செய்வீர்கள்? அதிர்ந்து போவீர்கள்தானே! அதற்கு நீங்கள் ஜெயலட்சுமி அக்காவை பார்க்கவேண்டும்.

பார்த்தால் பளிச்சென்று தெரியும் ‘பர்சானலிட்டி’ கொண்டவரில்லை ஜெயலட்சுமி அக்கா. அவரது தினசரி வாழ்வில் அவரது முகத்தைக் கவனியாமலே அவரைக் கடந்து போனோரே அதிகம் என்று கூறலாம். நானும் கூட கடந்தே போயிருப்பேன், இஸ்திரி செய்யத் தேவைப்படும் துணி விரிப்பு என்னிடம் இருந்திருந்தால்.   ஜெயலட்சுமியக்கா காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு நட்சித்திர அந்தஸ்த்து பெற்ற ஓட்டலில் அறைகளை சுத்தப் படுத்தி துண்டுகள் காப்பிக் கோப்பைகள் தண்ணீர் பாட்டில்கள் மாற்றிவைக்கும் கடை நிலை ஊழியம் செய்யும் சீருடை அணிந்த பெண்மணி. வாழ்வியல் பயிற்சி வகுப்புகளெடுக்க எந்த ஊருக்குப் பயணித்தாலும் கூடவே இஸ்திரிப் பெட்டியை தூக்கிக் கொண்டு போகிறவன் நான். நேற்று மாலை வகுப்பிற்கு தேவையான எனது வெள்ளை சட்டையையும் ‘கோட்’டையும் இஸ்திரி செய்ய மேசையில் விரிக்க துணி கேட்டு அறையிலிருந்து ‘ரூம் சர்வீஸ்’ இருக்கும் பக்கம் நடந்தேன்.

‘துணி அயர்ன் பண்ணனும், கீழ விரிக்க ஒரு துணியோ துண்டோ வேணும்! எதாவது கிடைக்குமா?’

இந்த கேள்வி சரியாக புரியாததால், எனது அறைக்கே வந்து பார்த்து விளங்கிக் கொண்டவர், ‘நீங்களே எல்லாம் கொண்டாந்திட்டீங்களா? எங்ககிட்ட குடுங்க சார்! நாங்க நல்லா செய்து தாரோம்!’ என்றார். ‘துணி கிடைக்குமா கிடைக்காதா?’ என்பது மாதிரியான எனது பார்வையைப் புரிந்து கொண்டு ஒரு படுக்கை விரிப்பு வெள்ளைத் துணியை நீளவாக்கில் எட்டாக மடித்துத் தந்தார்.

இன்று காலை ஜெயமோகனின் சுஜாதா பற்றிய பதிவுகளில் மூழ்கிக் கொண்டிருந்தபோது என் அறைக்கதவு தட்டப்படுகிறது.

‘சார்… ரூம் கிளீன் பண்ணிடறேன் சார்!’

‘வாங்க!’

உபகரணங்களும், தேவையான பொருள்களும் நிறைந்த தள்ளுவண்டியை அறையின் வாசலில் நிறுத்திவைத்துவிட்டு கதவை நன்றாக திறந்து வைத்துவிட்டு நம்மை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் குளியலறையை சுத்தம் செய்யத் தொடங்கினார் அவர். கலிஃபோர்னியாவில் ரெட்வுட் சிட்டியில் மோட்டலில் கழித்த நாட்களில் அறையை சுத்தம் செய்ய வந்த ‘ ஹே மேன்! ஹொவ் டூ யூ டூ? ஓக்கேய், ஆவுச்’ வகை நுனிநாக்கு வாக்கியங்கள் கொண்ட உடல் பெருத்த நீக்ரோ பெண் நினைவில் வந்து போனாள்.

‘உங்க பேரு என்னங்க?’

‘ஜெயலட்சுமி சார்’

‘இதே ஊரா நீங்க?’

‘இங்கேருந்து பத்து கிலோமீட்டரு தொலைவு சார்’

‘தெனம் வேலையா இல்ல லீவு உண்டா உங்களுக்கு?’

‘வாரத்துல ஒரு நாளு லீவு சார்’

‘இந்த வேலைக்கு எப்படி வந்தீங்க நீங்க?’

‘எங்க வீட்டுக்காரரு கல்யாணத்துக்கு சமைக்கறவரு. ஏதோ ஒரு சமையல் வேலைக்கு இந்த மேனேஜரு போன் பண்ணாரு! அப்ப அவருகிட்ட சார் எனக்கு ஏதாவது வேலை இருக்கானு கேட்டேன். வாங்க பாக்கல்லாம்னு சொன்னாரு. சமையல் ஒதவிக்குதான் வேலை கேட்டேன். என்னைப் பாத்துட்டு இத செய்யின்னு இந்த வேலை கத்துக் குடுத்து இதுல சேத்துட்டாரு அவரு!’

‘நல்லது செய்ஞ்சாரு அவரு இல்லீங்களா?’

‘ஆமாம் சார்! அவருதான் எல்லாம் சொல்லிக்குடுத்து, இந்த யூனிஃபாமு, ஷூ எல்லாம் குடுத்து இந்த வேலைக்கு என்ன சரி படுத்தினாரு.’

‘நீங்க என்னா படிச்சீங்க?’

‘ஏழாம்ப்பூ சார்’

‘இங்கிலீஷ் எல்லாம் புரியுதே உங்களுக்கு, த்ரீ ஜீரோ ஃபோர், த்ரீ ஜீரோ சிக்ஸ்ன்னு ரூம் நம்பர் எல்லாம் சொல்றீங்களே!’

‘ஐ லேர்ன் லிட்டில் இங்கிலீஷ் சார் இப்போ இங்க வந்து!’

‘இந்த வேலை புடிச்சிருக்கா உங்களுக்கு?’

இந்தக் கேள்வி புரியாமல் படுக்கை விரிப்பை மாற்றிக் கொண்டிருந்தவர் அதை நிறுத்திவிட்டு நம்மைப் பார்க்கிறார். 

‘அப்படீன்னா?’

‘இந்த வேலை உங்களுக்கு புடிச்சிருக்கா?’

‘அப்படீன்னா தெரியலையே. இது என் வேலை. செய்யறேன். நல்லாத்தான் செய்யறேன் தினமும்!’

அந்தப் பதில் கண்டு அதிர்ந்து போய் நின்றேன். சில கணங்கள் வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் உறைந்து நிற்கிறேன். ‘இறைவா… இந்தப் பெண்மணியை இன்னும் கவனித்துக் கொள்ளேன்’ என்று மனது இறைஞ்சுகிறது.

‘தினம் என்ன செய்யறீங்க?’

‘மொத்தம் பன்னண்டு ரூமு இந்த மாடியில. அத சுத்தம் பண்ணனும். மாத்தி வைக்கனும். மூணு மூன்றரைக்கு முடிச்சிட்டா வீட்டுக்குப் போயிடுவேன். காலைல சமையல் செய்து வைச்சிட்டு வந்திடுவேன். சாயந்திரம் போயி சமைப்பேன்.’

‘சம்பளம்?’

‘ஏழாயிரம் வருது சார்! அப்புறம் லாபம் நல்லாயிருந்தா மூணு மாசத்துக்கு ஒரு தடவ அதுல கொஞ்சம் பிரிச்சி ஒரு மூணாயிரம் ரூவா அளவுக்கு தருவாங்க. நெறையா சலுகைங்க இருக்கு சார்’

‘இந்த வேலைல நல்ல விஷயம் என்ன?’

‘உங்கள மேரி இருக்கற பெரியவங்களயெல்லாம் பாக்கலாம் சார்!’

‘உங்க வீட்டில வேற யாரு இருக்கா?’

‘எங்களுக்கு புள்ள இல்லீங்க சார். நானு அவரு மட்டும்தான். மச்சான், சின்னவரு, அவரு பொஞ்சாதின்னு எல்லாம் பக்கத்துக்கு பக்கதுலயே இருக்கோம்’

‘சொந்த வீடா?’

‘ஆமாம் சார். பெரியவர் வச்சிட்டு போனது. இப்ப அதுலயே பிரிச்சிகிட்டு எல்லாரும் பக்கத்து பக்கதிலயே இருக்கோம்!’

அதற்குள் ரூமை துடைத்து சுத்தம் செய்து, படுக்கை விரிப்புகள் மாற்றி, கெட்டிலை கழுவி துடைத்து, ‘ரூம் ஸ்ப்ரே’ செய்து முழு வேலையையும் முடித்து விட்டார் அவர்.

‘உங்க வயசு என்னங்க?’

‘முப்பத்தாறுங்க’

முப்பத்தியாறு வயது கிராமத்துப் பெண் ஒருவரை சொந்தக் காலில் நிற்க உதவிய அந்த மேனேஜரை பாக்க வேண்டும் போல் இருந்தது. வேலையை முடித்து வெளியேறும் போது அந்த அக்காவிடம் கேட்டேன்.

‘பெரியவர் என்ன செய்தாரு?’

‘தறி நெய்ஞ்சவங்க நாங்க!’

எப்படி வாழ வேண்டிய சமூகம்! எப்படி வாழ்ந்திருப்பார்கள்! என்னவாகி நிற்கிறது இன்று? சோறுடைத்த சோழ நாட்டில் பெரும் நிலக்கிழார்களாக வளமையாக வாழ்ந்திருந்து காவிரி வறண்டு விவசாயம் பொய்த்து சென்னை நகரில் இன்று துணிக்கடைகளில் துணி மடித்து அடுக்கி வைக்கும் சித்தப்பாக்கள், செக்யூரிட்டி வேலைக்குப் போகும் மாமாக்கள் தொழிற்சாலைகளுக்கு போகும் அக்காக்கள் முகங்கள் எல்லாம் வந்து போகின்றன என்னுள்ளே!

எதைப் பற்றியும் அதிகம் யோசிக்காமல், தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதைக் கூட அதிகம் சிந்திக்காமல் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று நாயன்மார் சொன்னது போல தன் பாட்டுக்கு தன் வேலையை செய்து போகும் ஜெயலட்சுமியக்காவை பற்றி சிந்தித்தபடியே உட்கார்ந்திருக்கேன்.

உண்மையில் வாழ்வை அதன் போக்கில் வாழ்வது எவ்வளவு அற்புதமானது. தேவையேயில்லாமல் எல்லாயிடங்களிலும் ‘தலையைக்’ கொண்டு வந்து புகுத்தும் போதே சிக்கலாகி விடுகிறது.  ஒரு வகையில் ‘இக்நோரன்ஸ் ஈஸ் ப்ளிஸ்’ என்பது உண்மை!

ஜப்பானிய ஜென் மாணவர்களிடையே நடைபெறும் உரையாடல் பற்றிய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. 

‘உங்க ஜென் மாஸ்டர் அதிசயங்கள் செய்வாரா?’

‘செய்வாரே! தூக்கம் வரும்போது தூங்குவாரு, பசி வரும் போது சாப்பிடுவாரு!’ 

-பரமன் பச்சைமுத்து

காஞ்சிபுரம்,

16.12.2016
 Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *